Published:Updated:

தீ…தி-1: கம்யூனிஸ்ட் கோட்டையில், காவிகளின் எதிர்ப்பில்… மம்தாவின் தொடர் வெற்றி சாத்தியமானது எப்படி?

மேற்கு வங்கத்தின் முதலைமைச்சராக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்கும் மம்தா பானர்ஜியின் அரசியல் பயணம் குறித்த புதிய தொடரின் முதல் பகுதி!

‘’இதெல்லாம் நடக்கவே நடக்காது’’ என்பது மட்டும் அரசியலில் நடக்காது. ‘’இப்படியெல்லாம்கூட நடக்குமா’’ என்கிற அதிசயம்தான் அரசியல். தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லப்பட்டு, அரசியல் வாரிசாக வளர்க்கப்பட்டுவந்த மு.க.ஸ்டாலினால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் முதலமைச்சர் ஆகமுடிந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அறிமுகமே ஆகாமல் முதலமைச்சர் ஆனார் எடப்பாடி பழனிசாமி.

''ஒரு மாதம்கூட ஆட்சி நீடிக்காது'' என்று சொல்லப்பட்டு வந்தபோது, நான்கு ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஆட்சிக்காலத்தையும் நிறைவு செய்தார். 2021 தேர்தலில் திமுக-வுக்குக் கடுமையான போட்டியாகவும் இருந்தார்.

எம்.ஜி.ஆர்-க்கு செங்கோல் பரிசளிக்கும் ஜெயலலிதா
எம்.ஜி.ஆர்-க்கு செங்கோல் பரிசளிக்கும் ஜெயலலிதா

அண்ணாவுக்குப் பின் கருணாநிதி முதல்வராவார் என்பதும், எம்ஜிஆர் தொடர்ந்து யாராலும் வீழ்த்தமுடியாத முதல்வராக இருப்பார் என்பதும், அவரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதா மாறுவார் என்பதும் அரசியல் ஆளுமைகள் யாராலுமே கணிக்கமுடியாத ஸ்கிரிப்ட்.

‘’ஆண்டவன் சொன்னா வருவேன்’’ என 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பன்ச் பேசிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமலேயே அரசியலை விட்டு ஒதுங்குவார் என்பதும், ‘மக்கள் நீதி மய்யம்’ என அரசியல் கட்சி தொடங்கி கமல்ஹாசன் தேர்தலைச் சந்தித்து தோல்வியடைவார் என்பதும் சில வருடங்களுக்கு முன்பு யாருமே எதிர்பார்க்காத அரசியல் ட்விஸ்ட்கள். அரசியல் அப்படித்தான். அதிசயங்களும், அதிர்ச்சிகளும், அதிர்ஷ்டங்களும் நிறைந்தது.

தமிழக அரசியல் மட்டுமல்ல, இந்திய அரசியல், ஏன் உலக அரசியலே இந்த அதிசயங்கள் சூழவே இயங்குகிறது. யாருக்குப்பின் யார் வருவார், எப்படி வருவார், என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பதெல்லாம் அந்த ஆண்டவனால்கூட எழுதமுடியாத ஸ்கிரிப்ட்தான்.

இந்திய அரசியலில் பெண்கள் பலர் களத்தில் நின்றிருந்தாலும் நான்கு பேரைத்தான் வரலாறு முக்கியமானவர்களாக அடையாளப்படுத்துகிறது.

இவர்களில் இந்திரா காந்தி முதன்மையானவர். இந்தியாவின் ஒரே பெண் பிரதமர். இரும்புப் பெண்மணி என்று கொண்டாடப்பட்டவருக்கு அரசியலுக்குள் நுழைந்து, வெற்றிபெறும் பாதை மிகவும் எளிதாகவே இருந்தது. காரணம், இந்தியாவின் முதல் பிரதமர் அவரது தந்தை ஜவஹர்லால் நேரு. தந்தையின் அடிச்சுவட்டில் அரியணை எளிதாக அவருக்கு வசப்பட்டது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
ஹாசிப்கான்

இரண்டாமவர், இந்தியாவின் இரண்டாவது பெண் பிரதமராக உயர்வார் எனக் கணிக்கப்பட்ட முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் மாயாவதி. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக நான்கு முறை இருந்தவர் மாயாவதி. கன்ஷிராம் பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவி, அதை வெற்றிகரமான கட்சியாக மாற்றி, தன்னுடைய அரசியல் வாரிசாக மாயாவதியை அறிவித்து அவரை முதலமைச்சர் ஆக்கினார். தன் அரசியல் ஆசானின் வழிகாட்டலே, மாயாவதி முதலமைச்சராக உயர மிக முக்கியக் காரணம்.

மூன்றாமவர் ஜெயலலிதா. நடிகையாக தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர், எம்ஜிஆரால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டார். எம்ஜிஆர் புதிதாகக் கட்சித் தொடங்கி ஆட்சி அமைத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக உயர்ந்தவர். ஆனால், இது எம்ஜிஆரின் இறப்புக்குப் பிறகே நடந்தது. கன்ஷிராமைப் போல, எம்ஜிஆர் தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை வெளிப்படையாக அறிவிக்காததால் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றினார் ஜெயலலிதா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வரிசையில் நான்காவது மிக முக்கியமானவர் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி. 34 ஆண்டுகள் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கமுடியாமல் திணறிய செங்கொடி பூமியில், ஒற்றைப் பெண்ணாக, தனிக்கட்சி தொடங்கி, தனிப்பாதை அமைத்து, தொடர்ச்சியாக மூன்றுமுறை முதலமைச்சாராகி தனித்து நிற்கிறார் மம்தா. மற்ற மூன்று அரசியல்வாதிகளும் ஏற்கெனவே ஒருவர் தொடங்கிய கட்சிக்குத் தலைவராக, அவர்கள் போட்டுவைத்த பாதையில் பயணித்து வெற்றிபெற்றவர்கள். ஆனால், மம்தா பானர்ஜி மற்ற மூவரை விடவும் வித்தியாசமானவர்.

தீ...தி -1 மம்தா பானர்ஜி தொடர்
தீ...தி -1 மம்தா பானர்ஜி தொடர்

மம்தாவுக்கு முன்மாதிரிகளே இந்திய அரசியலில் இல்லை. காங்கிரஸில் இளம் தலைவராக இணைந்தவர் மம்தா. தன் வேகத்துக்கும் தாகத்துக்கும் இந்த முதிய கட்சி சரிப்படாது என்பதை சீக்கிரமே உணர்ந்தார். தன்னுடைய அரசியல் குருவான பிரணாப் முகர்ஜியையே எதிர்த்து, கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சித் தொடங்கி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என இருபெரும் கட்சிகளுக்கும் எதிராகத் தன்னுடைய கட்சியைப் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே வளர்த்து தற்போது தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணிக்கிறார் மம்தா. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதே தனது லட்சியம் என அறிவித்திருக்கும் மம்தாவுக்குப் பின்னால்தான் மூன்றாவது அணி திரளும், அவர்தான் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்கிற அரசியல் கணிப்புகள் எல்லாமே இப்போதே எழுதப்படத் தொடங்கிவிட்டன.

தெரிந்தோ, தெரியாமலோ மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க காட்டிய ஆக்ரோஷத்தால், இந்தியா முழுக்க இன்று அறியப்படும் தலைவராக மாறிவிட்டார் மம்தா. இன்று இந்திய அரசியலின் முகமாக மோடிக்கு எதிராக நிற்கிறார் மம்தா பானர்ஜி. தனக்கான பாதையை தானே போட்டுக்கொண்டவர் அவர். கொஞ்சம்கூட பயம் இல்லாமல், மிக மிகத் துணிச்சலாக அரசியலை அவர் எதிர்கொண்டவிதம்தான் அவரை யாராலும் வீழ்த்தமுடியாத சக்தியாக மாற்றியிருக்கிறது. ‘’இந்தியாவின் முன்னேற்றமே வங்கத்தின் ஒரே குறிக்கோள். டெல்லி செங்கோட்டைதான் எங்களின் இலக்கு. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போல ‘டெல்லி சலோ’ என்பதுதான் எங்கள் முழுக்கம். வங்கம் இந்தியாவின் முகமாக மாறும்’’ என்று இப்போதல்ல, பாஜக மேற்கு வங்கத்தில் வளர ஆரம்பித்த 2008-ம் ஆண்டிலேயே சூளுரைத்தவர் மம்தா பானர்ஜி.

பினராயி மாற்றிய வரலாறு!
2011 தேர்தலில் 184 தொகுதிகளை வென்று முதலமைச்சர் ஆனவர், 2016 தேர்தலில் 211 தொகுதிகளில் வென்று கட்சியின் வளர்ச்சியையும், ஆட்சியின்மீது மக்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும் நிரூபித்தார். இப்போது மூன்றாவது முறையாக 2021 தேர்தலில் அதைவிடவும் இரண்டு தொகுதிகளில் கூடுதலாக 213 தொகுதிகளில் வென்று மேற்கு வங்கத்தின் அரசியாக உயர்ந்திருக்கிறார்.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும், தொங்கு சட்டமன்றம் அமையும் என்றெல்லாம் கணிக்கப்பட்ட மேற்கு வங்கத்தை மம்தா பானர்ஜி எப்படி மூன்றாவது முறையாக தக்கவைத்தார், 213 தொகுதிகளில் தன் கட்சியை வெற்றிபெறவைத்தவர் நந்திகிராமில் எப்படித் தோல்வியடைந்தார், வெற்றிக்குப்பின் ஏன் இவ்வளவு வன்முறைகள், மேற்கு வங்க அரசியலில் என்ன நடக்கிறது, மம்தா வெர்ஸஸ் மோடி யுத்தம் 2024-ல் நடக்குமா?!

இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடும் முன் மம்தாவையும், மேற்கு வங்கத்தையும் புரிந்துகொள்வோம்.

- வங்கம் விடாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு