Published:Updated:

``கையேந்துற சூழல் வரக்கூடாது..!" - அதிகாரிகள் அலட்சியத்தால் துயரப்படும் மாற்றுத்திறனாளி முதியவர்

துயரப்படும் மாற்றுத்திறனாளி முதியவர்

‘‘எனக்கு, வாரிசு அடிப்படையில ராணுவ பென்ஷனும், பேட்டரி வீல் வண்டியும் கிடைச்சாலே போதுங்க. என் கடைசி காலம் வரைக்கும் யார்க்கிட்டேயும் கையேந்தி நிற்கிற சூழல் இருக்காது’’ என்கிறார் மாற்றுத்திறனாளி பவுல் குமார்.

``கையேந்துற சூழல் வரக்கூடாது..!" - அதிகாரிகள் அலட்சியத்தால் துயரப்படும் மாற்றுத்திறனாளி முதியவர்

‘‘எனக்கு, வாரிசு அடிப்படையில ராணுவ பென்ஷனும், பேட்டரி வீல் வண்டியும் கிடைச்சாலே போதுங்க. என் கடைசி காலம் வரைக்கும் யார்க்கிட்டேயும் கையேந்தி நிற்கிற சூழல் இருக்காது’’ என்கிறார் மாற்றுத்திறனாளி பவுல் குமார்.

Published:Updated:
துயரப்படும் மாற்றுத்திறனாளி முதியவர்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலிருக்கும் தனகொண்டப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் பவுல் குமார். 57 வயதாகும் இந்த முதியவரோ, ஒரு மாற்றுத்திறனாளி. உயரம் நான்கரை அடி, இடது கால் முழுவதுமாக துண்டிப்பு போன்ற உடல் வருடிய பாதிப்புகளால் வாடினாலும், ஒற்றைக் காலில் ஊன்றியபடி தன் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறார். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அவரின் தந்தை மரணித்துவிட்டார். அதனால், வாரிசு அடிப்படையில் நியாயமான ஓய்வூதியம் கேட்கிறார். அதே போல, பெட்ரோலில் இயங்கும் மூன்று சக்கர ஸ்கூட்டர் அல்லது பேட்டரியால் இயங்கும் வீல் சேர் வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார்.

பவுல் குமார்
பவுல் குமார்

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் போன்ற இடங்களுக்கு ஒற்றைக் காலில் ஊன்றி நடந்தே ஓய்ந்துவிட்டார் பவுல் குமார். இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வுக் கூட்டத்துக்கும் அவர் மனுவுடன் வந்திருந்தார். ஆட்சியர் பணி நிமித்தமாக சென்னை சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், அங்கிருந்த அதிகாரியிடம் தன் மனுவைக் கொடுத்துவிட்டு வழக்கம்போல அக்குள் கட்டை ஊன்றுகோலை தாங்கியபடி குடியாத்தம் நோக்கிப் புறப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவரைச் சந்தித்து பேசினோம். ``என் அப்பா மொகலீஸ்வரன் ராணுவத்துல பணிபுரிஞ்சவரு. 1980-ல பணியிலருந்து ஓய்வுப் பெற்றுட்டாரு. என் வீட்டுல மொத்தம் 6 பேர். மூத்தவன் நான்தான். எனக்கு 9 வயசு இருக்கும்போது, யானைக்கால் நோய் பாதிப்பு ஏற்பட்டிருச்சி. அடுத்த ரெண்டு வருஷத்துல வேலூர்ல இருக்கிற பழைய அரசு மருத்துவமனையில என்னுடைய இடது காலை வெட்டி எடுத்துட்டாங்க. அதுக்கு அப்புறம் ஸ்கூலுக்கு அனுப்பல. ஐஞ்சாவது வரைக்கும்தான் படிக்க முடிஞ்சது. 1992-ல அப்பா திடீர்னு மாரடைப்புல இறந்துட்டாரு. அப்புறம் அம்மாவுக்கு ராணுவ பென்ஷன் கிடைச்சது. அதுலதான் என் குடும்பம் மூணு வேளையும் சாப்பிட்டிச்சி. ரெண்டாவது தம்பி கல்யாணம் ஆகி என்கூட இருக்கிறான். மத்தவங்க 4 பேரும் வெளியூர்கள்ல தங்கி கூலி வேலை செய்யிறாங்க.

மாற்றுத்திறனாளி
மாற்றுத்திறனாளி

நான் கல்யாணம் பண்ணிக்கலைனு சொல்றதைவிட எந்தப் பொண்ணும் என்ன கல்யாணம் பண்ணிக்க ரெடியா இல்ல. காலமும் போச்சி. கூட இருக்கிற என் ரெண்டாவது தம்பிக்கும் குழந்தையில்லை. அதுவும் பெரிய வருத்தம். பெயிண்டர் வேலைக்குத்தான் போறான். அதுல கிடைக்கிற வருமானம் அவனுக்கும், அவன் பொண்டாட்டி வயித்துக்குமே சரியா போய்டும். இதுக்கு நடுவுல நான் அவங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திக்கிட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட சூழல்ல என் அம்மா 2015-ல காலமாகிட்டாங்க. அவங்களுக்கு வந்துக்கிட்டிருந்த ராணுவ பென்ஷனும் நின்னுப்போச்சு. எனக்குக் கிடைக்கிற மாற்றுத்திறனாளி உதவித்தொகை ஆயிரம் ரூபாய்லதான் என் வாழ்க்கை நகருது. வாரிசு அடிப்படையில ராணுவ ஓய்வூதியத் தொகைய எனக்குக் கொடுக்கச் சொல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துலயும், ராணுவ ஆபீஸ்லயும் மனு கொடுத்து ஓஞ்சிப்போய்ட்டேன்.

அதுமட்டுமல்லாம, பெட்ரோல்ல ஓடுற மூணு சக்கர ஸ்கூட்டர் இல்லைனா பேட்டரியில இயங்குற வீல் சக்கர வண்டி தரச்சொல்லியும் மனு கொடுத்துப் பார்த்துட்டேன். அதிகாரிகள் கண்டுக்கில்லை. ‘உனக்கு ஒரு கால் இருக்கு. அதுலயே நீ நடக்கலாம். 100 சதவிகித பாதிப்பு இருக்கிறவங்களுக்குத்தான் வாகனம் தருவோம்’னு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் சொல்லிட்டாங்க. என்னால வாழ முடியலை. கையேந்துற சூழல் வரக்கூடாது. எனக்கு ராணுவ பென்ஷனும், பேட்டரி வீல் வண்டியும் கிடைச்சா போதும். என் கடைசி காலம் வரைக்கும் யார்க்கிட்டேயும் கையேந்தி நிற்க வேண்டிய சூழலும் இருக்காது’’ என்றார் கண்ணீரோடு!

மாற்றுத்திறனாளியின் இந்த அபயக்குரலுக்கு அரசு இயந்திரம் செவி சாய்க்குமா?!