Published:Updated:

ஹாக்கி வீரர் டு விளையாட்டுத்துறை அமைச்சர்- முன்னாள் ஹாக்கி கேப்டன் சந்தீப் சிங்கின் அரசியல் பயணம்!

2004-ம் ஆண்டில் சர்வதேச அளவிலான ஹாக்கிப் போட்டிகளில் கால்பதித்தார் சந்தீப் சிங். பெனால்டி ஷுட் மற்றும் ட்ராக் ஃபிலிக் ஆகியவற்றில் எக்ஸ்பர்ட் ஆக இருந்த சந்தீப்புக்கு `ஃப்ளிக்கர் சிங்' என்ற செல்லப்பெயரும் உண்டு.

சந்தீப் சிங்
சந்தீப் சிங்

ஹரியானா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியும், ஜனநாயக ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் மனோஹர்லால் கட்டார் முதலமைச்சராகவும் ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்த் சௌதாலா துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்ட நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சராக சந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன்தான் சந்தீப் சிங்.

சந்தீப் சிங் தேர்தல் பிரசாரம்
சந்தீப் சிங் தேர்தல் பிரசாரம்

நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி மூன்று முக்கிய விளையாட்டு வீரர்களைக் களம் இறக்கியது. 2012-ம் ஆண்டு நடந்த, ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் பெற்ற மல்யுத்த வீரரான யோகேஷ்வர் தத், பரோடா தொகுதியில் களமிறங்க, காமன்வெல்த் போட்டியில் இரண்டு முறை தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனையான பபிதா போகத், தாத்ரி தொகுதியில் போட்டியிட்டார். ஹாக்கி வீரரான சந்தீப் சிங் குருஷேத்திரத்தில் உள்ள பெஹோவா தொகுதியில் களம் கண்டார். பபிதாவும் யோகேஷ்வரும் தேர்தலில் தோல்வியடைந்தனர். ஆனால், சந்தீப் சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் மந்தீப் சிங் சத்தாவை 5,314 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2004-ல் சர்வதேச அளவிலான ஹாக்கிப் போட்டிகளில் கால்பதித்தார் சந்தீப் சிங். 2009-ம் ஆண்டு, மலேசியாவில் நடந்த சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையை 13 வருடங்கள் கழித்து இந்தியா வென்றது. அப்போது சந்தீப் சிங்தான் இந்தியாவின் கேப்டனாக இருந்தார். பெனால்டி ஷுட் மற்றும் ட்ராக் ஃபிலிக் ஆகியவற்றில் எக்ஸ்பர்ட் ஆக இருந்த சந்தீப்புக்கு `ஃப்ளிக்கர் சிங்' என்ற செல்லப்பெயரும் உண்டு. இன்னும் சொல்லப் போனால் அவருடைய ட்விட்டர் கணக்கின் ஐ.டியும் `ஃப்ளிக்கர் சிங்' என்பதேயாகும். 2010-ம் ஆண்டு சந்தீப்புக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு.

சந்தீப் சிங்
சந்தீப் சிங்

கடந்த 2006-ம் ஆண்டு கல்கா ஷதாப்தி எக்ஸ்பிரஸ் என்ற ரயிலில் பயணிக்கும் போது இவர் மீது தவறுதலாக குண்டடிபட்டது. கால்கள் முடங்கிய நிலையில் களத்திற்குத் திரும்புவாரா என்று பலர் கவலைப்பட்ட போது போராடி 2008-ல் மீண்டு வந்தார். மேலும், ஹரியானா மாநில காவல் துறையிலும் பணியாற்றினார். `சூர்மா' எனற தலைப்பில் தில்ஜித் தோஷான்ஹ் மற்றும் டாப்ஸி நடிப்பில் இவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

சந்தீப் சிங் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு, கர்ணம் மல்லேஷ்வரி, ``அற்புதமான வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். உங்களுடைய விளையாட்டு மற்றும் அரசியல் சாதனைகளைக் கண்டு பெருமைப்படுகிறோம்" என்று பதிவிட்டிருந்தார். அவர் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஹாக்கி இந்தியாவும் பாராட்டுக் கடிதம் வெளியிட்டுள்ளது.

சந்தீப் சிங் பதவியேற்பு
சந்தீப் சிங் பதவியேற்பு

ரியோ பாரா ஒலிம்பிக்ஸில் ஷாட்புட் பிரிவில் வெள்ளி வென்றவரும் கேல் ரத்னா விருது வாங்கியவருமான தீபா மாலிக் ``ஹாக்கி கேப்டனிலிருந்து விளையாட்டுத்துறை அமைச்சராகியுள்ளார் சந்தீப் சிங். ஹரியானாவின் வளர்ச்சியில் விளையாட்டு பெரும் பங்கு வகித்துள்ளது. பிரபல விளையாட்டு வீரரான சந்தீப் சிங் விளையாட்டுத்துறை அமைச்சராகியிருப்பது `பர்ஃபெக்ட் மேட்ச்'. வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார்.

ஹாக்கிப் பயணத்தை முடித்துவிட்டு அரசியல் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள சந்தீப் சிங்கை நாமும் வாழ்த்துவோம்!