Published:Updated:

யார் இந்த ஜெய் ஷா?

ஜெய்ஷா
ஜெய்ஷா

ஜெய் ஷாவின் பெயர் முதன்முதலில் வெளியுலகில் அடிபட்டதே சர்ச்சைக்குரிய ஒரு விவகாரத்தில்தான்.

ஜெய் ஷா... பி.ஜே.பி-யினர் அச்சத்தோடு உச்சரிக்கும் பெயர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒரே மகன் என்பதே அந்தக் கட்சியினர் அச்சப்படக் காரணம். ஆர்.எஸ்.எஸ்-அமைப்பைப் பார்த்து அச்சப்பட்ட காலம் மாறி அமித்ஷாவின் அதிரடிக்கு அச்சப்படும் நிலையை உருவாக்கியதற்கு அவரின் சாணக்கியத்தனமே பிரதானம். ஒரே நாளில் பல அதிரடிகளை அரங்கேற்றும் அமித்ஷா, தனது ஒரே மகனை இப்போது உச்சத்திற்குக் கொண்டுசென்றுள்ளார். குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஆரம்பக்காலத்திலிருந்து உறுப்பினராக இருந்தாலும், அந்த அமைப்பின் முழுநேர ஊழியராக இருந்ததில்லை என்பதால் திருமணம் செய்துகொள்வதில் அவருக்குச் சிக்கலில்லை. அமித்ஷா- சோனால் ஷா தம்பதியின் ஒரே மகன்தான் இந்த ஜெய் ஷா. உலக விளையாட்டு அமைப்புகளிலேயே வளமான அமைப்பாகக் கருதப்படும் இந்திய கிரிக்கெட் போர்டின் புதிய செயலாளராக எந்தப் போட்டியுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், ஜெய் ஷா. இந்திய ஊடகங்களில் எல்லாம் கடந்த வாரம் பேசும்பொருளாக மாறியுள்ள ஜெய் ஷாவின் பெயர், முதன்முதலில் வெளியுலகில் அடிபட்டதே சர்ச்சைக்குரிய ஒரு விவகாரத்தில்தான்.

கடந்த ஐந்தாண்டு பி.ஜே.பி ஆட்சியில் அமித்ஷா எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லை. ஆனால், பி.ஜே.பி-யின் தலைவராக இருந்த நேரத்தில் நடந்த விவகாரமே சிக்கலை ஏற்படுத்தியது. ஜெய் ஷா என்ன தொழில் செய்கிறார் என்று பி.ஜே.பி-யின் முன்னணி நிர்வாகிகள் பலரும் அறியாத நேரத்தில், அவரது தொழில் பற்றி விவரங்களை ஓர் இணையதளம் துப்புதுலக்க ஆரம்பித்தது. அப்போது டெம்பிள் என்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தில் ஜெய் ஷா பங்குதாரராக இருக்கிறார் என்பதைக் கண்டறிந்தனர். அதன்பிறகு, அந்த நிறுவனத்தின் வருமானங்களை ஆராய்ந்தது.

அமித்ஷா, ஜெய்ஷா
அமித்ஷா, ஜெய்ஷா

அந்த நிறுவனத்தின் வர்த்தகம். 2014-15-ம் நிதி ஆண்டில் 50,000 ரூபாயாக இருந்தநிலையில், அடுத்த ஒரே ஆண்டில் (2015-16-ம் ஆண்டில்) 16,000 மடங்கு அதிகரித்து 80.5 கோடிக்கு சொத்து மதிப்பு அதிகரித்தது எப்படி என அந்த ஆங்கில இணையதளம் பரபரப்பு குற்றச்சாட்டை 2017-ம் ஆண்டு கிளப்பியது. அந்த நிறுவனத்திற்கு எந்த அசையா சொத்தும் இல்லை. முதலீடும் இல்லை என்கிற நிலையில் எப்படி இது சாத்தியம் என்று கேள்வியும் எழுப்பினார்கள் எதிர்க்கட்சியினர். நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஜெய் ஷாவின் பெயர் ஊடகங்களில் அதிகம் அடிபடத் தொடங்கியது. மற்றொருபுறம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவிக்கும் முன்பே அதுகுறித்து அமித்ஷாவின் மகனுக்குத் தெரிந்திருந்தது என்று ராகுல் காந்தி ஒருபுறம் குற்றம்சாட்டினார். ஆனால், இதைப்பற்றி எதையும் கவலைப்படாத அமித்ஷா ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் நிரூபித்துக்கொள்ளட்டும் என்று தனக்கே உரியபாணியில் ஒற்றை வரியில் பதில் சொல்லியிருந்தார்.

தன்னைப் பற்றிச் செய்தி வெளியிட்ட இணையதளத்தின் மீது 100 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார், ஜெய் ஷா. ஆனால், முதல் நாள் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெய் ஷா ஆஜராகவில்லை. அதற்கு, அவர் வழக்கறிஞர் சொன்ன காரணம், ``சமூகப்பணியில் இருப்பதால் ஜெய் ஷாவால் ஆஜராக முடியவில்லை” என்றார். அமித்ஷா காந்திநகரில் போட்டியிட்டபோது, அப்பாவின் வெற்றிக்குத் தனயனும் அயராது உழைத்தார். அப்பா உள்துறை அமைச்சரானதும் அமைதியாக இருந்தவர் இப்போது எதிர்ப்பின்றி பி.சி.சி.ஐ-யின் செயலாளர் என்கிற அதிகாரமிக்க பதவிக்கு வந்துள்ளார். கங்குலி கிரிக்கெட் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் பொறுப்பில் இருந்துள்ளார்.

ஜெய் ஷா
ஜெய் ஷா
``பிசிசிஐ தலைவரானதும் இதுதான் எனது முதல் பணி!”- உற்சாகத்தில் கங்குலி

குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணைச் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது பி.சி.சி.ஐ-யின் செயலாளர் பதவிக்கு வந்துள்ளார். பி.சி.சி.ஐ-க்குள் ஜெய்ஷாவை உள்ளே கொண்டுவந்ததில் முன்னாள் கிரிக்கெட் சங்கப் பொறுப்பாளரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான அருண் தாக்கூருக்குப் பெரும் பங்கு உண்டு. அமித்ஷாவின் நெருங்கிய நண்பரான தாக்கூர், கிரிக்கெட் சங்கத்தின் சூட்சுமத்தை நன்கறிந்தவர். அமித்ஷா மகனை உள்ளே நுழைப்பது மட்டும் தாக்கூரின் நோக்கம் அல்ல... மாறாக, தனது தம்பி அருண் தூமலையைப் பொருளாளர் பொறுப்பில் உட்காரவைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார், தாக்கூர்.

பி.ஜே.பி தலைவர்களின் குடும்பம் மட்டுமல்ல, பி.சி.சி.ஐ-யின் பல பொறுப்புகளில் வாரிசுகளே களம் கண்டுள்ளார்கள். டால்மியா வாரிசு, இந்தியா சிமென்ட் சீனிவாசன் மகள், சரத்பவார் வாரிசு, அசோக் கெலாட் மகன் எனப் பலரும் இந்த வாரியத்தில் பதவியைப் பெற்றுள்ளார்கள். காரணம், இந்தியாவில் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பு மட்டுமல்ல, அதிகமான பணம் புழங்கும் அமைப்பும் பி.சி.சி.ஐ-தான். இனி, எதிர்காலத்தில் பி.சி.சி.ஐ தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் எண்ணமும்கூட பி.ஜே.பி-யிடம் இருக்கிறது என்கிறார்கள். ஒருபுறம், கிரிக்கெட் சங்கத்தில் பொறுப்பில் இருந்துகொண்டே மறுபுறம் அப்பாவின் அரசியல் விளையாட்டுகளில் அவ்வப்போது களம் கண்டுவருகிறார், ஜெய் ஷா. குறிப்பாக, அ.தி.மு.க விவகாரத்தில் ஜெய் ஷா சில காரியங்களைச் சத்தமில்லாமல் செய்துவருகிறார்.

ஜெய்ஷா, மோடி, அமித்ஷா
ஜெய்ஷா, மோடி, அமித்ஷா
`பிசினஸ் முதல் பிசிசிஐ வரை...!' - ஜெய் அமித் ஷா பயணம்

எதிர்காலத்தில் குஜராத் அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவார் என்கிறார்கள். இவருடைய அப்பா அமித்ஷா சதுரங்க விளையாட்டில் இருந்த ஆர்வம் காரணமாக, குஜராத் மாநில சதுரங்க சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இப்போது மகன் கிரிக்கெட் விளையாட்டைக் கையில் எடுத்து களம் இறங்க ஆரம்பித்துள்ளார். இருவருமே விளையாட்டை வைத்து அரசியல் ஆட்டத்தை ஆடத்தெரிந்தவர்கள் என்கிறார்கள் பி.ஜே.பியினர்!

அடுத்த கட்டுரைக்கு