பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

100 நாள்கள்... 9 நாடுகள்... 28 மசோதாக்கள்!

Narendra Modi
பிரீமியம் ஸ்டோரி
News
Narendra Modi

இன்ஃபோகிராபிக்ஸ்: எம்.மகேஷ்

மோடியின் ஆட்சி நூறாவது நாளைக் கடந்திருக்கிறது. வழக்கம்போல் சர்ச்சைகளும் பாராட்டுகளும் விமர்ச னங்களும் நூறு நாள்களை ஆக்கிரமித்திருக்கின்றன. தன் இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த எடுப்பிலேயே அடித்து ஆட ஆரம்பித்திருக்கிறார் மோடி. ஒரே காரணம்... முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 300க்கும் மேல் எம்.பி-க்கள் கிடைத்திருக்கும் துணிச்சல். இந்தத் துணிச்சலே இன்னொருபுறம் எதிர்ப்பாளர்களின் விமர்சனப் பொருளாகவும் மாறியிருக்கிறது.

மோடி என்றால் பயணம் இல்லாமலா? நூறு நாள்களில் ஒன்பது நாடுகளுக்குப் பயணம் சென்றிருக்கிறார். மாலத்தீவு, இலங்கை, கிர்கிஸ்தான், ஜப்பான், பூட்டான், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்றவர் சமீபத்தில் ரஷ்யாவுக்கும் சென்றபோது, ‘ஒரு பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக’ அறிவித்து வந்துள்ளார். நம்நாடு இருக்கும் நிலையில் இது தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பினாலும் ‘அது கடனில்லை. லைன் ஆஃப் கிரெடிட்’ என்று விளக்கம் தரப்பட்டது. அதாவது, பணமாகக் கொடுக்காமல் நம்மிடம் பொருள் அல்லது சேவையை வாங்கிக்கொண்டு அதற்கு ஈடாகப் பணமாகத் திருப்பித்தர வேண்டும். இது மிகவும் நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணங்களைத் தவிர்த்து, மோடி செய்துள்ள பல விஷயங்கள் ஒரே நேரத்தில் சாதனையாகவும் வேதனையாகவும் பார்க்கப்படுவதுதான் முரண்நகை. இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகளவிலான மசோதாக்களை நிறைவேற்றிய முதல் மக்களவைத் தொடர் என்ற சாதனையும் இதில் அடக்கம்.

இவற்றில் முத்தலாக், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், என்.ஐ.ஏ மற்றும் உபா சட்டத்திருத்தங்கள், தேசிய மருத்துவ ஆணைய மசோதா, ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற மசோதாக்கள் கடும் எதிர்ப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளன. முத்தலாக் தடைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே இருந்தது. முத்தலாக் முறையை எதிர்ப்பவர்கள் கூட மோடி அரசு இந்த விஷயத்தில் காட்டும் ஆர்வத்தையும் வேகத்தையும் சந்தேகிக்கிறார் கள். ஒருபுறம் ‘பெண்ணுரிமைக்கான முயற்சி’ என்று மோடி ஆதரவாளர்கள் மார்தட்ட, ‘சபரிமலை விவகாரத்தில் பெண்ணுரிமை என்ன ஆச்சு?’ என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

100 நாள்கள்... 9 நாடுகள்... 28 மசோதாக்கள்!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் எழுந்த சர்ச்சை இன்னும் அடங்கவில்லை. காஷ்மீரின் முக்கியத் தலைவர்களுக்கு வீட்டுக்காவல், ராணுவம் குவிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட பதற்றம் அடங்காத நிலையில் மோடி அரசின் முடிவு, காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கையையும் நிம்மதியையும் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ என்று ‘ஒரே’ திசையில் பயணிக்கும் திட்டங்கள் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானியவிலையில் சிலிண்டர், விவசாயிகளுக்கு உதவும் கிசான் சமான் திட்டம், மழைநீரைச் சேகரிக்கும் ஜல்சக்தி திட்டம், போக்சோ சட்டத்திருத்தம், போக்குவரத்துச் சட்டத்திருத்தம் எனச் சில விஷயங்கள் பாராட்டத்தக்கவை. ஆனால் இவையெல்லாம் அறிவிப்புகள் என்ற நிலையில் இருக்கின்றனவே தவிர, அவை நடைமுறைக்கு வரும்போதுதான் விடை தெரியும். சென்ற ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘தூய்மை இந்தியா’ திட்டமும் பாராட்டுக்குரியதுதான். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்பட்டு முழுவெற்றி அடையவில்லையே?

இன்னொருபுறம் பொருளாதார நிலையில் ஏற்பட்டிருக்கும் தேக்கநிலை, மோடி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மே 1 அன்று ரூ.69.64 ஆக இருந்து, செப்டம்பர் 4-ல் ரூ.72.07 ஆக எகிறியிருக்கிறது.

இந்தப் பலவீனத்திலிருந்து மீள்வதற்காக வங்கிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் 1,76,000 கோடியை அரசு வாங்கியிருப்பதும் இதன் ஒரு பகுதிதான். மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளின் கையிருப்பு 14 சதவிகிதமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் 28 சதவிகிதமாக இருப்பதால் இதை வாங்குவதால் பிரச்னையில்லை என்கிறார்கள் சிலர். ஆனால் இது விதை நெல்லைச் சமைப்பதற்குச் சமம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள் பலர்.

மத்திய அரசின் பொருளாதாரச் சுழற்சி நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. வாராக்கடன்களால் வாட்டமாகியுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு 70,000 கோடி ரூபாய் மறுமூலதனம் செய்யப்படுவதாக அரசு அறிவித்திருந்ததால் இந்த உபரிநிதி, வங்கிகளின் மறுமூலதனத்துக்கும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய நிதியை வாங்குவது, ரிசர்வ் வங்கியின் நிதியாதாரத்தையும் செயல்பாட்டையும் முடக்கிவிடுமென்ற பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கைகள் துளியும் பொருட்படுத்தப்படவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட தாக்கமும் இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலைக்குக் காரணமென்ற வாதம் வலுத்துள்ளது. “கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடியை இந்தியப் பொருளாதாரம் சந்தித்துவருகிறது” என்கிறார் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை, மோடி எதிர்ப்புதான் இதன் அடிப்படை என்று மறுக்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவைச் சந்தித்து ஐந்து சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. கடந்த ஏழாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த அளவுக்குப் பெரும்சரிவு ஏற்பட்டிருப்பது இப்போதுதான். பொருளாதார மந்தநிலையால் விற்பனைச் சரிவு, வேலையிழப்பு அதிகரித்துள்ளது.

100 நாள்கள்... 9 நாடுகள்... 28 மசோதாக்கள்!

கடந்த 40 ஆண்டுகளில் வேலையின்மை அதிகரித்திருப்பது இந்தக் காலகட்டத்தில்தான். மிகப்பெரிய வேலை வாய்ப்பைத் தந்து கொண்டிருந்த மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மிரள வைக்கிறது. ஆட்டோமொபைல் துறை மட்டுமல்லாமல் அதுதொடர்புடைய தொழில்கள், ஜவுளித்துறை எனப் பலதுறைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.

ஏற்கெனவே மத்திய அரசுத்துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலிப்பணியிடங் களின் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் 65 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் செலவினங்கள் துறை. தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலையில் மோடி அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் சட்டத் திருத்தமும், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதும் வேலையில்லாத் திண்டாட்டத்தை விஸ்வரூபமெடுக்க வைக்கவே வாய்ப்பு அதிகமிருக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டமான 100 நாள் வேலைத்திட்டத்தில் பயனாளிகளுக்கு ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது பல தரப்புகளால் வரவேற்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இத்திட்டத்துக்கு 60,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரத்தின் கைது, மோடி அரசின் துணிச்சல் என்று ஒருபக்கம் பாராட்டும் இன்னொருபுறம் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டனங்களும் குவிகின்றன.

கர்நாடகா தொடங்கி கோவா வரை எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்தல், கவர்னர்களைக் கொண்டு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் குடைச்சலைக் கொடுத்தல் ஆகியவற்றை இந்த இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இன்னும் தீவிரமாகச் செய்யத்தொடங்கியிருக்கிறது பா.ஜ.க. யார் என்ன விமர்சித்தாலும் தங்கள் அதிரடி நடவடிக்கைகளைத் தொடரத்தான் செய்கிறார்கள் ‘கிருஷ்ணன்’ அமித்ஷாவும் ‘அர்ஜுனன்’ மோடியும். துணிச்சல் நல்லதுதான். ஆனால் அது நாட்டுக்கு நல்லதாக இருக்கவேண்டுமே?