Published:Updated:

சாதாரண பார்க்கிங் பஞ்சாயத்து! - டெல்லி நீதிமன்றத்தை அதிரவைத்த கலவரம்

டெல்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸாரும் வழக்கறிஞர்களும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி நீதிமன்ற கலவரம்
டெல்லி நீதிமன்ற கலவரம் ( PTI )

டெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கம் போல் நேற்றும் வழக்குகள் நடந்துகொண்டிருந்துள்ளன. அப்போது பிற்பகலில் நீதிமன்றத்தில், குற்றவாளிகளை ஏற்றிக்கொண்டு வந்த போலீஸாரின் வாகனத்தை நிறுத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக வழக்கறிஞரின் காரில் மோதிவிட்டது. இதனால் அந்த வழக்கறிஞருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சிலநிமிடங்களில் வாக்கு வாதம் கைகலப்பாகி பெரிதாக வெடித்துள்ளது.

டெல்லி நீதிமன்ற கலவரம்
டெல்லி நீதிமன்ற கலவரம்
Twitter

இதைத் தொடர்ந்து சில போலீஸார் இணைந்து அந்த வழக்கறிஞரை தனியாக அழைத்துச் சென்று நீதிமன்ற சிறையில் அடைத்து அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அதே நீதிமன்றத்தில் பணியாற்றும் சில வழக்கறிஞர்கள், போலீஸ் பிடியில் உள்ள விஜய் வர்மா என்ற வழக்கறிஞரை விடுவிக்கச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களைச் சிறைக்குள் அனுமதிக்க மறுத்த காவலர்கள், வழக்கறிஞர்களைத் திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதையும் மீறி அந்த வழக்கறிஞர்கள் அங்கேயே நின்றதால் போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறையிலிருந்து வெளியில் வந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அவர்களுடன் இன்னும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் சேர்ந்துகொண்டதால் ஆர்ப்பாட்டம் பெரிய போராட்டமாக மாறியுள்ளது. அப்போது சில போலீஸ் வேன்கள், இரு சக்கர வாகனங்கள், ஜீப் ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதில் கொந்தளித்த காவலர்கள், வழக்கறிஞர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று பல மணி நேரம் டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியுள்ளது. பின்னர் உள்ளூர் போலீஸார் வந்து இந்த மோதலை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

டெல்லி நீதிமன்ற கலவரம்
டெல்லி நீதிமன்ற கலவரம்
Twitter

இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``நேற்று வழக்கறிஞருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்த பிறகு, சில வழக்கறிஞர்கள் நேராக நீதிமன்ற சிறைக்கு வந்து, அங்கு வேலை செய்துகொண்டிருந்த காவலர்களைத் தாக்கினர். அங்கிருந்த அரசு உடைமைகளையும் அடித்து நொறுக்கினர். வழக்கறிஞர்களைச் சமாதானப்படுத்த முயன்ற போலீஸ் உயர் அதிகாரிகளையும் வழக்கறிஞர்கள் தாக்கியுள்ளனர். இதனால் 2 உயர் அதிகாரி உட்பட 20 போலீஸார் காயமடைந்துள்ளனர். வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுவதுபோல், நாங்கள் எந்த வழக்கறிஞரையும் தாக்கவில்லை, துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர் - 3 - “எல்லோரிடமும் கேட்டுவிட்டு 370-ஐ நீக்கியிருக்க முடியாது!”

ஆனால், காவலர்கள்தான் தங்களை முதலில் தாக்கியதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள தடயவியல் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வுசெய்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் சோதனையிடப்பட்டுள்ளது. இவை அனைத்தின் முடிவில்தான் யார் மீது குற்றம் உள்ளது எனத் தெரியவரும்.

டெல்லி நீதிமன்ற கலவரம்
டெல்லி நீதிமன்ற கலவரம்
Twitter

சம்பவம் நேற்று நடந்து முடிந்திருந்தாலும், போலீஸாரும் வழக்கறிஞர்களும் தங்கள் பக்கம் எந்தத் தவறும் இல்லை என்பது போல பல வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். நாளை டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.