Published:Updated:

மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி... சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்ததினப் பகிர்வு!

தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1920-ம் ஆண்டு எம்.என்.ராய் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே இந்தியாவில் மூன்று கம்யூனிஸ்ட்கள் இருந்தனர். பம்பாயில் எஸ்.ஏ.டாங்கே, கல்கத்தாவில் முஷாபர் அகமது, தமிழ்நாட்டில் நம் சிங்காரவேலர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ் நிலத்துக்கென்று மிக நீண்ட நெடிய வரலாறு உண்டு. பல முற்போக்கு சமத்துவக் கருத்துகளின் பிறப்பிடமாக இந்த நிலம் இருந்திருக்கிறது மட்டுமன்றி உலகின் எந்த மூலையிலும் அறிவுபூர்வமான கருத்துகள் உருவானால் அதை உள்வாங்கி பின்பற்றுகிற நிலமாகவும் திகழ்ந்திருக்கிறது. இது தமிழ் நிலத்துக்கே தமிழர்களுக்கே உரிய தனித்துவமான மாண்பு. ஆனால், இந்த மாண்பில் உச்சம் தொட்ட ஒருவர் வாழ்ந்திருக்கிறார் இந்த மண்ணில்.

பாரதிதாசன்
பாரதிதாசன்

கடலின் உரிமையாளர்களான மீனவர்களைப் பற்றித் திரைப்படங்களில் காட்டும்போதெல்லாம், கடலின் மீதான அவர்களின் ஆளுமையைப் பறைசாற்ற, உலகின் பல நாடுகளிலிருந்து விதவிதமான பொருள்களை இந்த மண்ணுக்குக் கொண்டு வருவதாக அல்லது கடத்தி வருவதாகக் காட்சிப் படுத்துவார்கள். அது உண்மையோ, கற்பனையோ. ஆனால், அதே கடல் மார்க்கமாக உலகின் பல பகுதிகளிலிருந்து புரட்சிகரக் கருத்துகளை புத்தகங்கள் மூலமாகவும் செய்தித்தாள்கள் மூலமாகவும் கொண்டுவந்து தன் சிந்தனையைக் கூர்த்தீட்டிய ஒருவர் இம்மண்ணில் உண்டு. அவர்தான் பாவேந்தர் பாரதிதாசனால்,

``போர்க்குணமிகுந்த செயல் முன்னோடிப் பொது உடமைக்கு ஏகுக அவர் பின்னாடி'' எனக் கவிபாடப்பட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்.

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்...இந்தியாவில் முதன்முதலில் மே தினத்தைக் கொண்டாடியவர்... இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் எனப் பல பெருமைகளை தன்னகத்தே கொண்டவர் அவர்.

``இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!"
சிங்காரவேலர்

சென்னையில் ஒரு வசதியான மீனவக் குடும்பத்தில் 1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தவர் சிங்காரவேலர். திருவல்லிக்கேணியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், மாநிலக் கல்லூரியில் இலங்களை பட்டப்படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார். 1907-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு பணியாற்றத் தொடங்கினார். அதேவேளையில், காந்தியக் கொள்கையால் கவரப்பட்டு இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திலும் தன்னை ஐக்கியப் படுத்திக்கொண்டார். அதற்கு முன்னதாகவே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் கொதித்தெழுந்த அவர், அயோத்திதாசப் பண்டிதர் தலைமையில் செயல்பட்டு வந்த பௌத்த சங்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தார்.

லெனின்
லெனின்

இந்தநிலையில் 1917-ம் ஆண்டு ரஷ்ய மண்ணில் புரட்சி வெடிக்கிறது. கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைக் கைப்பற்றுகின்றனர். இதைப் பத்திரிகைகளிலும் நூல்களின் வாயிலாகவும் அறிந்துகொண்ட சிங்காரவேலர் மனதிலும் புரட்சிகரச் சிந்தனை துளிர்விடத் தொடங்குகிறது. இயல்பிலேயே, பொதுவுடமை, சமத்துவம், சுய மரியாதை ஆகிய கருத்துகளில் நாட்டம் கொண்ட சிங்காரவேலருக்கு, அதை விஞ்ஞான வழியில் வெளிப்படுத்தும் மார்க்சியத் தத்துவத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.

`நம் நாட்டில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் இரக்கமற்ற அயல்நாட்டு ஆட்சியாளர்களின் விலங்குகளிலிருந்து மட்டுமன்றி, வர இருக்கும் இந்திய முதலாளிகளின் தளைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டால்தான் உண்மையான சுதந்திரத்தோடு இருக்க முடியும்’’
- சிங்காரவேலர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1920-ம் ஆண்டு எம்.என்.ராய் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே இந்தியாவில் மூன்று கம்யூனிஸ்ட்கள் இருந்தனர். பம்பாயில் எஸ்.ஏ.டாங்கே, கல்கத்தாவில் முஷாபர் அகமது, தமிழ்நாட்டில் நம் சிங்காரவேலர். கம்யூனிஸ்ட் இயக்கக் கருத்துகளை இந்தியாவில் அவருக்கு யாரும் கற்பிக்கவில்லை. யார் மூலமாகவும் அவர் தெரிந்துகொள்ளவில்லை. தன் தேடுதல் வழியாக அவர் கண்டடைந்த தத்துவம்தான் கம்யூனிசம். மார்க்ஸ், லெனின் கருத்துகளை எவரின் பரிந்துரையுமின்றி இந்தியாவின் தெற்கு மூலையில் ஒரு மீனவக் கிராமத்திலிருந்து உள்வாங்கியவர் சிங்காரவேலர். எனில் அவரின் அறிவுத் தேடலும் அரசியல் தேடலும் எந்தளவுக்கு வேட்கை நிறைந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் அவர் சிந்தனைச் சிற்பி என்றும் முன்னோடிகளில்லா முன்னோடி எனவும் அழைக்கப்படுகிறார்.

அயோத்திதாசர்
அயோத்திதாசர்
“இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்!”

காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், கம்யூனிசக் கருத்துகளை தான் செல்லுமிடமெங்கும் எடுத்துச் சென்றார் சிங்காரவேலர். திரு.வி.கவால் தொடங்கப்பட்ட சென்னை தொழிலாளர் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். அதுவரை வெறும் ஊதிய உயர்வுப் போராட்டங்களையும் உரிமைகளை கேட்டுப் பெறுகின்ற அமைப்பாகவும் மட்டுமே செயல்பட்டு வந்த தொழிற்சங்கத்தை வேறு ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்தார் சிங்காரவேலர். முதலாளியம், மூலதனம் குறித்தும் கம்யூனிசம் குறித்து தொழிலாளர்களுக்கு விளக்கி தொழிலாளர்களின் அறிவுத்தளத்தை விரிவு படுத்தினார்.

1922-ல் பீகாரின் கயா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், தமிழகத்தின் சார்பாகக் கலந்துகொள்கிறார். அனைவரும் சகோதர சகோதரிகளே எனவும் இன்னும் பல பெயர்களிலும் போராட்டத்துக்கு வந்தவர்களை அழைத்துக்கொண்டிருக்க, `தோழர்களே, நான் ஒரு கம்யூனிஸ்ட். உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரதிநிதி’ எனப் பேசத் தொடங்குகிறார் சிங்காரவேலர். அதுமட்டுமன்றி இந்தியத் தொழிலாளர்கள் நலன் குறித்தும் இங்கே நடைபெற வேண்டிய புரட்சி குறித்தும் மிக ஆவேசமாகப் பேசி முடிக்கிறார் சிங்காரவேலர். அப்போதுதான் நமக்கு முன்னாடியாக இந்த நிலத்தில் ஒரு கம்யூனிஸ்ட் உருவாகிவிட்டான் என்பதை வட இந்தியக் கம்யூனிஸ்ட்கள் உணர்ந்து கொள்ளத் தொடங்குகின்றனர். இவன் நம்மவன் எனவும் அடையாளம் கண்டுகொண்டனர்.

``இடதுசாரி சிந்தனையை எடுத்துச் செல்லவும் தொழிலாளர் அரசமைக்கவும், காங்கிரஸில் ஊடுறுவவும் சிங்காரவேலர்தான் மிகச்சிறந்த மனிதர். அவர் தலைமையேற்று முசாபர் அகமது, சௌகத் உஸ்மானி, குலாம் ஹூசைன் இன்னும் யாராக இருந்தாலும் இயங்கவேண்டும் என'' 1922-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் வாழ்ந்துவந்த எம்.என்.ராய், பம்பாயில் வாழ்ந்த எஸ்.எஸ் டாங்கேக்குக் கடிதம் எழுதுகிறார். இந்தக் கடிதத்தில் இருந்தே சிங்காரவேலரின் தனித்தன்மையையும் தலைமைப் பண்பையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

காந்தி
காந்தி

ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து தன் வழக்கறிஞர் தொழிலைத் தூக்கி எறிந்த சிங்காரவேலர், இந்திய மக்களின் முழுமையான சுதந்திரத்துக்கு காங்கிரஸ் செல்லும் வழி மட்டும் போதாது என 1923-ம் ஆண்டு மே தினம் அன்று `இந்துஸ்தான் லேபர் கிஸான்' கட்சியைத் தொடங்கினார். மே தினத்தையும் கொடியேற்றிக்கொண்டாடினார். இந்தியாவில் கொண்டாடப்பட்ட முதல் மே தினக் கொண்டாட்டம் அதுதான். அதோடு, லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், `தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார்.

சிங்காரவேலர்
சிங்காரவேலர்

``காந்தியின் தலைமையில் அமைந்த காங்கிரஸ் பேராயக் கட்சியைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. சிங்காரவேலர் தலைமையில் அமைந்துள்ள இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி உண்மையில் சிறியதாக இருந்தாலும் உறுப்பினர் மிகுதியாக இல்லையென்றாலும் அரசு அஞ்ச வேண்டியது அந்தக்கட்சிக்குத்தான்'' என சிங்காரவேலர் கட்சி தொடங்கிய நாளில் காவலர்கள் எழுதி வைத்த ரகசியக் குறிப்புகள் இவை. எனில் சிங்காரவேலர் மீதான வெள்ளையர்களின் அச்சத்தை இதன் மூலமாக நாம் புரிந்துகொள்ள முடியும்.

எனக்கு வயது 84. ஆயினும் தொழிலாளி வர்க்கத்திற்கு என் கடமையைச் செய்ய நான் இங்கே வந்துள்ளேன். உங்கள் மத்தியில் நான் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன?
- சிங்காரவேலர் (கடைசி மாநாட்டில்)

1925-ம் ஆண்டு, டிசம்பர் 28 முதல் 30 வரை, இந்தியக் கம்யூனிஸ்ட்களின் முதல் மாநாடு கான்பூரில் நடைபெற்றது அதற்குத் தலைமை தாங்கியது சிங்காரவேலர்தான். அப்போது அவர் ஆற்றிய உரைக்கு பலத்த வரவேற்பு இருந்தது. 1928-ம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார் சிங்காரவேலர். அதற்காக அவருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தார். அப்போதும், மார்க்சியம், கம்யூனிசம் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார் சிங்காரவேலர். தந்தை பெரியார் 1931-ம் ஆண்டு உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பெரியாரின் வேண்டுதலுக்கு இணங்க குடியரசில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார் சிங்காரவேலர். அதுமட்டுமன்றி கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையையும் தமிழில் மொழிபெயர்த்து குடியரசில் வெளியிட்டார். 1945 ஜூன் 24-ம் தேதியன்று சென்னை அச்சுத் தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு எழுச்சிமிகு உரையாற்றினார். அதுவே அவர் கடைசியாகக் கலந்துகொண்ட மாநாடு.

மார்க்ஸ்
மார்க்ஸ்

தமிழ் ஆங்கிலம் மட்டுமல்லாது, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்திருந்தார். ஆனாலும், தமிழ் மொழிக்காகப் பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார் மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியும் அவரே, சென்னை மாமன்ற உறுப்பினராக இருந்தபோது அதைக் கொண்டு வந்தார் சிங்காரவேலர். வெறும் தத்துவங்களைப் படித்து அதை அப்படியே நடைமுறைப்படுத்த முயலாமல் இந்த மண்ணுக்கு ஏற்றவகையில் அதை மாற்றி மக்களிடம் கொண்டு சேர்த்ததே சிங்காரவேலரின் தனித்தன்மையாக இன்றளவும் போற்றப்படுகிறது. குறிப்பிட்ட சிந்தனைகளுக்குள் மட்டும் முடங்கிப் போய்விடாமல் தன் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருந்தார் சிங்காரவேலர்.

தனக்குக் கீழ் இருப்பவர் எத்தனை கோணத்துக்கு வளைந்து தனக்கு வணக்கம் வைக்க வேண்டும் எனக் கட்டளையிடும் அரசியல்வாதிகள் வாழ்ந்துவரும் இக்காலச் சூழலில், ஒருமுறைக்கு மேல் வணக்கம் வைத்தாலே, `இது என்ன பூர்ஷ்வா கும்பிடு, எதற்காக இந்த அடிமைப்புத்தி' எனவும் அவர் பேசும்போது யாராவது கைதட்டினால், ``நீங்கள் கைதட்டுவதற்காகப் பேசவில்லை, சிந்திப்பதற்காகவே பேசுகிறேன்'' எனவும் மிகக் கடிந்துகொள்ளும் பழக்கமுடையவராக இருந்திருக்கிறார் சிங்காரவேலர்.

தான் கொண்ட கொள்கையை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் வைத்திருக்காமல் நடைமுறை வாழ்விலும் அதைப் பின்பற்றினார் சிங்காரவேலர். தான் சேகரித்து வைத்திருந்த 10,000 புத்தகங்களையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாரி வழங்கினார் அவர். புத்தகங்களை மட்டுமல்ல அரிய தத்துவங்களையும் கருத்துகளையும் இம்மண்ணில் விட்டுச்சென்ற சிங்காரவேலர் 1946-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி இம்மண்ணை விட்டுப் பிரிந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு