Published:Updated:

`அலிகரா... ஹரிகரா?!' - உத்தரப்பிரதேசத்திலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!

அலிகர் | உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத் தேர்தல் குறித்த தகவல்கள் இந்திய அளவில் கவனம் பெற்றுவருகின்றன. சரி, கள நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு நேரடி விசிட் அடித்தோம்... இனி உத்தரப்பிரதேசத்திலிருந்து... நாங்கள், நச்சினார்க்கினியன், பியர்சன்..!

`அலிகரா... ஹரிகரா?!' - உத்தரப்பிரதேசத்திலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!

உத்தரப்பிரதேசத் தேர்தல் குறித்த தகவல்கள் இந்திய அளவில் கவனம் பெற்றுவருகின்றன. சரி, கள நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு நேரடி விசிட் அடித்தோம்... இனி உத்தரப்பிரதேசத்திலிருந்து... நாங்கள், நச்சினார்க்கினியன், பியர்சன்..!

Published:Updated:
அலிகர் | உத்தரப்பிரதேசம்

``பேசாம நாம ரெண்டு பெரும் இங்கயே செட்டில் ஆயிடலாம் ப்ரோ.”

அலிகர் ரயில் நிலையத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் பேட்டரி ரிக்‌ஷாவில் போகும்போது எங்கள் இருவரில் யார் இந்த வாக்கியத்தைச் சொன்னோம் என்று நினைவில்லை. ஆனால் நிச்சயம் இருவரின் எண்ண ஓட்டமும் அதுவாகவே இருந்தது.

நச்சினார்க்கினியன்: ``லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் ப்ரோ! அழகழகான பகட்டில்லாத குட்டிக் கட்டடங்கள், ரொம்ப இதமான ஓர் உணர்வு… அலிகர்கிட்ட நான் விழுந்துட்டேன்.”

பியர்சன்: ``பாருங்களேன் ப்ரோ, போற வழியில எல்லா ரோடுலயும் எதாவது ஒரு கட்டடம், `இது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சொந்தம்னு’ போட்ருக்கு.”

ந.இனியன்: ``ஆமா. ஒரு நகரமே ஒரு பல்கலைக்கழகத்தோடு தன்னை ஏதோ ஒருவிதத்தில் இணைச்சுக்கிட்டு இருக்குறது ரொம்ப ஆச்சர்யமாத்தான் இருக்கு!”

இருவரும் `சுங்கி’ என்று அழைக்கப்படும் அலிகர் பல்கலைக்கழகத்தின் பெரும் வாயிலில் வந்திறங்கினோம். ஒரு டீ குடிக்கப் போனபோது பேப்பர் பார்க்க கேட்டோம். இல்லை என்றார்கள். இந்த நகரத்தில் நாங்கள் இருந்த நான்கு நாள்களில் ஒரு நாளிதழ் விற்கும் கடையைக்கூடப் பார்க்க முடியவில்லை. `இந்த இந்த இடத்துலல்லாம் பேப்பர் கிடைக்கும்ப்பா’ என்று தகவலாகச் சொன்னார்களே தவிர, நம் தமிழ்நாடுபோல டீக்கடைதோறும் பேப்பர் என்ற கலாசாரத்தை பார்க்கவே முடியவில்லை. இது இந்நகரத்தைப் பற்றிய ஒட்டுமொத்த மதிப்பீட்டுக்கு முக்கியமாகப்பட்டது.

முதலில் நாம் அலிகரைப் புரிந்துகொள்வோம்!

உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியிலுள்ள அலிகர் மாவட்டம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், கரும்பு விவசாயம் மற்றும் பூட்டு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குப் பெயர்பெற்றது.

அலிகர் | உத்தரப்பிரதேசம்
அலிகர் | உத்தரப்பிரதேசம்

அலிகர் மாவட்டத்தின் மக்கள்தொகையில் 60%-க்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களில் விவசாயத்தைப் பிரதான தொழிலாகக்கொண்டவர்கள். கரும்பு, உருளைக்கிழங்கு போன்ற பொருள்களை அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டமாக அலிகர் உள்ளது. நகரத்தைப் பொறுத்தவரை சிறு தொழிற்சாலைகளை நம்பியே மக்கள் வாழ்கிறார்கள்.

மொத்தம் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய இந்த மாவட்டத்தில் கடந்த முறை அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளது. தற்போது ஜாட் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் அதிகம் வாழும் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி, தனது கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தள் கட்சிக்கு (ஆர்.எல்.டி) ஒதுக்கியுள்ளது. ஆக, அலிகர் மாவட்டத்தைக் கைப்பற்ற சமாஜ்வாடி கட்சிக் கூட்டணிக்கும், பாஜக-வுக்கும் கடும் போட்டி நிலவிவரும் நிலை பரவலாகக் காணப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலிகர் | உத்தரப்பிரதேசம்
அலிகர் | உத்தரப்பிரதேசம்

நாமிருக்கும் `அலிகர்’ பல்கலைக்கழக நகர் தொகுதி, கடந்த 2017 சட்டமன்றத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல் எனத் தொடர்ந்து அலிகர் நகரில் அனைத்துத் தேர்தல்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆதிக்கம் செலுத்திவந்தாலும், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது. இந்த வெற்றியின் தாக்கம் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பிருக்கிறதா? இந்தக் கேள்விதான் தற்போது இந்தத் தொகுதியை வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது.

அலிகர் | உத்தரப்பிரதேசம்
அலிகர் | உத்தரப்பிரதேசம்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நகரத் தொகுதியை பொறுத்தவரை பாஜக-வின் எம்.எல்.ஏ சஞ்சீவ் ராஜாமீது நிலுவையிலுள்ள பழைய வழக்கின் காரணமாகப் போட்டியிட முடியாததால், அவரின் மனைவி முக்தா ராஜாவை களமிறக்கியுள்ளது பாஜக. சமாஜ்வாடி கட்சியின் சார்பாக முன்னாள் அமைச்சரும், பூட்டுத் தொழிற்சாலையின் அதிபதியான ஷபர் ஆலம் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் சல்மான் இம்தியாஸ் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்வதற்கு முதல் நாள் அவர்மீதான பழைய வழக்கைக் காரணம் காட்டி, மாவட்டத்துக்குள் வருவதற்கு தடைவிதித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``தேர்தல் நேரத்தில் பழைய வழக்கைக் காரணம் காட்டி போடப்பட்ட தடை, பாஜக தூண்டுதலில் நடத்தப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நெருக்கடி கொடுப்பதற்காக நிகழ்த்தப்பட்ட செயல்” என அலிகர் பல்கலைக்கழக மாணவரும், கேரள காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவின் மாநில நிர்வாகியுமான வசீல் தெரிவித்தார்.

காங்கிரஸ் தோல்வி பயத்தில் இருப்பதாகவும், ``முதல்வர் யோகி ஆதித்யநாத் அலிகர் மாவட்டத்துக்கு நிறைய வளர்ச்சித் திட்டங்களை செய்திருக்கிறார். அதுவே தேர்தல் வெற்றி வாய்ப்புகளை தங்களுக்குப் பெற்றுக் கொடுக்கும்’’ என்றும், ``இது போன்ற பழிவாங்கல் செயல்களில் ஈடுபட பாஜக-வுக்கு அவசியம் இல்லை” என்றும் இப்பகுதியைச் சேர்ந்த பாஜக-வின் மூத்த நிர்வாகி சஞ்சய் கோயல் தெரிவித்தார்.

அலிகர் தொகுதியின் மக்கள் மனசு!

இத்தொகுதியில் பலதரப்பட்ட மக்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக, மார்க்கெட் பகுதி மற்றும் பொது இடங்களுக்குச் சென்று கேட்டோம்.

அலிகரின் அமிர் நிஷான் மார்க்கெட்டில் ஜவுளிக்கடை நடத்தும் ராஜிவ் ஆதித்யா நம்மிடம் பேசியபோது, ``ஜிஎஸ்டி-யின் காரணமாக இரட்டிப்பாக வரி கட்டுகிறோம். இதனால் சிறு வியாபாரிகள்தான் பெருமளவில் பாதிக்கப்படுகிறோம்” என்று தெரிவித்தார். மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் கடைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய உதவித்தொகை தரக்கோரி அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் நிறைவேற்றாததால் அமிர் நிஷா பகுதியில் பல கடைகள் தற்போதுவரை திறக்கப்படாமலேயே இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார்.

`அலிகரா... ஹரிகரா?!' - உத்தரப்பிரதேசத்திலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!

முதல்வர் யோகி ஆதித்யநாத், ரேஷன் பொருள்களை அனைவருக்கும் வழங்குவதாகச் சொன்னாலும், திட்டமிட்டு இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் ரேஷன் பொருள்களைக் குறைவாகத் தருவதாக தனது துணிக்கடையில் அடுக்கிவைத்தவாறு முஹம்மது அயூப் தெரிவித்தார்.

செருப்புக்கடை வைத்திருக்கும் மொஹம்மது அன்வரோ, ``யோகிஜியின் ஆட்சியில் மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் செய்து கொடுத்ததால் தனது ஓட்டு யோகிக்கு தான்” என்று தெரிவித்தார்.

இந்தத் தொகுதியின் உள்ளார்ந்த பிரச்னைகளைப் புரிந்துகொள்ள சசிகாந்த் எனும் ஒரு சமூகச் செயற்பாட்டாளரைச் சந்தித்தோம். `அலிகரைப் பொறுத்தவரை தனது குடும்பம் உட்பட பல ஆயிரம் குடும்பங்கள் பூட்டுத் தொழில்கள் நசிந்ததால் பாதிக்கப்பட்டதாகவும், ஒருகாலத்தில் கான்பூர் உள்ளிட்ட உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்து இங்கு பணிக்கு வந்து வேலை செய்தார்கள், ஆனால் அரசின் தவறான கொள்கைகள் காரணமாக இந்தத் தொழிலே பாதிக்கப்பட்டுள்ளது’ என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்மிடம் பேசிய சில அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள், ``தேர்தலில் ஓட்டளிப்பது சாதியின் அடிப்படையிலோ அல்லது மத அடிப்படையிலோ இருக்கக் கூடாது. மாறாக, திட்டங்களின் அடிப்படையிலும் மக்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்தும் இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தனர்.

அலிகர் பல்கலைக்கழகம்
அலிகர் பல்கலைக்கழகம்

அதன் பிறகு ஓய்வுபெற்ற பேராசிரியரும், விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்டுவருபவருமான அசோக் ப்ரகாஷிடம், பேசினோம். ``இந்த ஒட்டுமொத்தப் பகுதி விவசாயிகளுக்கும் சத்தா மில் என்னும் கரும்பு ஆலைதான் வேலை தந்தது. ஆனால் கடந்த காலத்தில் அது மூடப்பட்டதும், விவசாயிகளுக்குத் தரவேண்டிய பல நிலுவைத் தொகையைத் தராததும் ஒட்டுமொத்த கரும்பு விவசாயத்தையே இந்தப் பிராந்தியத்தில் பாதித்துள்ளது” என்று நம்மிடம் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை வரும் பிப்ரவரி 10 முதல் ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நிகழவுள்ளது. அலிகரோ முதல் கட்டமான 10-ம் தேதியே தனக்கான தேர்தலைச் சந்திக்கிறது.

தொழிலாளர்கள் பிரச்னை, கரும்பு விவசாயம் என்று என்ன சிக்கல்கள் இருந்தாலும், `அலிகர் நகரின் பெயரை ஹரிகர் என்று மாற்றுவோம்’ என்ற ஆளும் பாஜக அரசின் `அலிகரா... ஹரிகரா’ என்ற கோஷம் தேர்தல் நேரத்தில் பல தரப்பிலும் புதிய தாக்கங்களை உருவாக்கலாம் என்பதே அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.

அலிகர் தொகுதி

2017- பாஜக வெற்றி

சஞ்சிவ் ராஜா - பா.ஜ.க

வாக்குகள்- 113,752

வாக்கு சதவிகிதம் -46.22%

சமாஜ்வாடி கட்சி

சபர் ஆலம்

வாக்குகள்-98,312

வாக்கு சதவிகிதம்- 39.95%

2012 -சமாஜ்வாடி கட்சி வெற்றி

சபர் ஆலம்- சமாஜ்வாடி கட்சி

வாக்குகள்- 68,291

வாக்கு சதவிகிதம்- 37%

அஷுதோஷ் வர்ஷ்னே- பாஜக

வாக்குகள்-45,205

வாக்கு சதவிகிதம்- 24%

2007-சமாஜ்வாடி கட்சி வெற்றி

சமீர் உல்லாஹ் - சமாஜ்வாடி கட்சி

வாக்குகள்- 44,541

வாக்கு சதவிகிதம்- 37%

சஞ்சிவ் ராஜா-பாஜக

வாக்குகள்-36,689

வாக்கு விகிதம் -30%

2002- இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி

விவேக் பன்சால்- இந்திய தேசிய காங்கிரஸ்

வாக்குகள்-47,801

வாக்கு சதவிகிதம்- 42%

தீபக் மிட்டல் - பாஜக

வாக்குகள்- 23,357

வாக்கு சதவிகிதம்- 20%

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism