Published:Updated:

நீங்க எம்.ஜி.ஆரா... ரஜினியா? இதுல `am waiting' வேணாம் விஜய்!

Vijay
Vijay

ஆண்டுக்கொரு மேடை, அதில் அரசியல் தொடர்பாக ஒரு கேள்வி, அதற்கு அவர் அளிக்கும் உசுப்பேத்தும் பதில் என, அப்படியே இருக்கின்றன அத்தனை காட்சிகளும். ரஜினியின் ரசிகனைப் போலவே விஜய்யின் ரசிகனும், ‘இவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா’ என மண்டை காய்ந்துதான், ஊருக்கு பஸ் பிடிக்கிறான்.

இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் அதிகம் சர்க்கஸ்கள் நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும் பெரிய அளவில் வரவேற்பும் இருப்பதில்லை. ஏனென்றால், இப்போது எங்கெங்கு காணினும் சர்க்கஸ்கள்தான், சர்க்கஸ்காரர்கள்தாம். 'எவர் என்ன பேசுகிறார்கள், என்ன சொல்ல வருகிறார்கள், எதற்காக எதிர்க்கிறார்கள், எதற்காக ஆதரிக்கிறார்கள், எதை நோக்கிப் போகிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள்...’ என எதுவுமே புரிவதில்லை. தமிழ்நாட்டையே 'கலக்கப்போவது யாரு' மேடையாக மாற்றி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான், கொடுமை!

Rajini, Kamal
Rajini, Kamal

தமிழ்நாட்டில் இப்போது அரசியல் சர்க்கஸ்தான் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. நிஜ சர்க்கஸ் ரொம்பவே நன்றாக இருக்கும், குதூகலமாகவும் இருக்கும். ஆனால், இவர்களின் சர்க்கஸோ கொடூரமாகக் கொட்டாவி வர வைக்கிறது. அரசியல் சர்க்கஸ் கம்பெனியில் ஏற்கெனவே ‘ஆன் போர்டு’ அடித்துவிட்டார் கமல். ‘அஞ்சலிகள், ஆறுதல்கள், கண்ணீரில் நனைந்த கண்டனங்கள்’ என, ’நாடு ஒரு பக்கம், நான் ஒரு பக்கம்’ என்று விநோதமான ஒரு பாதையில் பயணிக்கிறார் அவர். நடுவில், கவின்களின் காதல் பஞ்சாயத்துகளுக்கு வேறு, அவர் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. கஷ்டகாலம்தான்! ஆனாலும், அவர் பரவாயில்லை. களத்துக்காவது வந்துவிட்டார். அன்பு நண்பர் ரஜினியோ, ஆண்டுக்கணக்காக ‘ஆன் தி வே’யிலேயே இருக்கிறார்.

ரஜினி 'சிறப்பான' ஆட்டம்... பி.ஜே.பி 'தரமான' வியூகம்... - 'சம்பவம்' எப்போது?

‘வருகிற டிசம்பரில் கட்சி அறிவிப்பு, பிப்ரவரியில் சொந்த சேனல்’ என்று, அவரின் ரசிகர்கள்தாம் பேசிக்கொண்டே இருக்கிறார்களே ஒழிய, அவரிடமிருந்து ஒரு தீர்க்கமான சமிக்ஞையே இல்லை. அவ்வப்போது, ‘இதைத் தப்புன்னும் சொல்ல முடியாது, தப்பு இல்லைன்னும் சொல்ல முடியாது’ என்று ஒரு பேட்டி கொடுத்து விட்டு, ‘அடுத்த படம் வரும்போது பார்க்கலாம் கண்ணுங்களா...’ என்று நகர்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் அவர். இது தமிழனுக்கு வாடிக்கையாகிவிட்ட ஒன்று என்பதால், அவன் இப்போதெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இந்த மாதிரியான ஒரு ’மந்தமான’ நேரத்தில்தான், ’ஆட்டையிலே நானும் இருக்கேங்ண்ணா...’ என்று பிகில் அடித்திருக்கிறார், இளைய தளபதியில் இருந்து தளபதிக்கு புரமோட் ஆகியிருக்கும் விஜய்!

Vijay
Vijay

‘அண்ணன்தான் இன்னும் கட்சி அறிவிப்பை வெளியிட வில்லையே’ என்று கேட்கலாம். ஆனால் எப்போது, ’நான் முதலமைச்சரானால்...’ என்றொரு வார்த்தையை விட்டாரோ, அப்போதே அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். 'கற்பனையாக கேட்கப்பட்ட கேள்விக்குக் கற்பனையாகச் சொன்ன பதில் அது’ என்ற வாதமெல்லாம் எடுபடாது. விஜய் என்ன அஞ்சாங்கிளாஸ் குழந்தையா?! ’அந்தக் கேள்வி எதற்காகக் கேட்கப்படுகிறது, எதை எதிர்பார்த்து கேட்கப்படுகிறது’ என்பதைக்கூட அறியாதவர் அல்லர் விஜய். ஆக, இனியும் விஜய்யை அரசியலுக்கு அப்பால் வைத்து மட்டுமே விவாதித்துக்கொண்டிருக்க முடியாது. அது, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்குச் சமம். அட, அவரே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக ஒருமுறை ‘வாய்ஸ்’ கொடுத்திருக்கிறார் அல்லவா?! ‘அணில்போல உதவினேன்’ என்றும்கூட அறிவித்திருக்கிறார். ஆக, அவரே உணர்த்தியதுபோல, அவருக்கு அரசியல் ஆசை உண்டு! இல்லையென்று விஜய் ஒருவார்த்தை சொல்லட்டும். அந்தக் கணமே, இக்கட்டுரை அதுவாகவே அர்த்தமிழந்துபோகும்!

``அடுத்தவங்க உயரம்... வாய்ப்புகள்ல வர கஷ்டம்... தலை தாங்குற கணம்!'' - `பிகில்' விஜய் பன்ச்கள்

’சந்திரமுகி’ படத்தை அனைவருமே பார்த்திருக்கக்கூடும். 1,000 நாள்வரை ஓடி வரலாறு படைத்த படம் அது. விஷயம், அந்தப் படம் அல்ல. அந்தப் படத்தில் வரும் ஒரு வசனம். அதில், `பேய் வருவதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்' என்று, ஒரு நீண்ட வசனம் பேசுவார் ரஜினி. அதேபோலத்தான், நடிகர்கள் அரசியலுக்கு வருவதையும் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம். எப்படித் தெரியுமா? திடீரென்று அவர்களுக்கு மக்கள் மீது பாசம் வரும். அரசியல்வாதிகள் மீது கசப்பு வரும். ஆட்சியாளர்கள் மீது கோபம் வரும். எல்லாத்துக்கும் மேலே அவற்றையெல்லாம் சொல்லிக்காட்டும் விதத்தில் ஒரு படமாவது வரும். விஜய்யும் அதே பாதையில்தான் பாதம் பிசகாமல் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார். எடுப்பது எந்தவிதமான படமாக இருந்தாலும் சரி, அதில் எங்கேனும் ஒரு இடத்தில் அரசியல் கருத்துகளை நுழைத்துவிடுகிறார் அவர். சமீபகாலமாக அது ரொம்பவே அதிகரித்திருக்கிறது.

Vijay
Vijay

`தலைவா’ படத்திலிருந்து ஆரம்பிக்கிறது, தளபதியின் அரசியல். அதில், எந்த அரசியலையும் நேரடியாகப் பேசிவிடாமல் விவரமாக விலகிநின்றார் விஜய். ஆனால், அதில் சத்யராஜ் யார், சத்யராஜூக்கு அடுத்து அரியணை ஏறும் விஜய் யார் என்பதெல்லாம், தெளிவாகவே புரிந்தது. ’டைம் டூ லீட்’ கேப்ஷன் வேறு! அப்புறம் எப்படிப் புரியாமல் இருக்கும்?! அடுத்து, சிலகாலம் அரசியலுக்கு இடைவெளி விட்டுவிட்டார் விஜய். ஏனென்றால், தலைவா கொடுத்த தலைவலி அப்படிப்பட்டது. ஜெயலலிதா இறந்து, கருணாநிதியும் அமைதியான பிறகு அரசியல் களம் வேறுவிதமாக உருமாறுகிறது. வருகிறது, மெர்சல்!

`அன்று ராகுல், இன்று விஜய்!' - `பிகில்' விவகாரத்தில் தமிழக அரசை எச்சரிக்கும் கே.எஸ்.அழகிரி

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. என, ஊரே மத்திய அரசை ஊறவைத்து, துவைத்து, கசக்கி காயப் போட்டுக்கொண்டிருந்த காலம் அது. விஜய்யும், ’ஊருக்காகக் குரல் கொடுப்போம்’ என்றொரு முடிவை அப்போது எடுக்கிறார். மத்திய அரசின் வரிவிதிப்பு முறையை விமர்சித்து, படத்தில் காட்சி வைக்கிறார். காலையில் ராசிபலன் பார்க்கும்போதே, ’இன்றென்ன பிரச்னை செய்யலாம்’ என்று ஆலோசிக்கும் அந்தக் கட்சி, அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. விஜய், டெல்லிவரை பாப்புலர் ஆகிறார். அடுத்துவந்த ஒரு விருதுவிழாவில், ‘தெரிந்தே பேசினேன்... பிரச்னை வருமென தெரிந்தே பேசினேன்...’ என்று அறிவித்தார் விஜய். `தளபதி டக்கர்டோய்...’ என்று பாராட்டித் தீர்த்தது தமிழ்நாடு. அப்போதே, தீப்பற்றிக்கொண்டுவிட்டது.

Vijay
Vijay

அந்தத் தீயில் எண்ணெய் வார்த்தது ‘சர்கார்’. இப்போது, விஜய் கொஞ்சம் சுதாரித்துவிட்டார். மத்திய அரசை டீலில் விட்டுவிட்டு, மாநில அரசின் பக்கம் பார்வையைத் திருப்பிவிட்டார். காட்சிக்குக் காட்சி, தமிழக நிலவரங்களை ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்தது அந்தப் படம். இங்கேதான் அந்த அதிமுக்கிய கேள்வி எழுந்தது. ’இவரேதான், சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே கட்சிக்கு ஆதரவாகப் பேசினார்’ என்ற கேள்வி, அது. ஒரு கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதும், அப்புறம் அந்தக் கட்சியையே விமர்சிப்பதும், எல்லோரும் செய்யும் ஒன்றுதான். பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் பழ.கருப்பையா வரை, தமிழ்நாடு நிறையவே ‘டேக் டைவர்ஸன்’ பார்ட்டிகளைப் பார்த்திருக்கிறது. ஆனால், ’எந்தப்புள்ளியில் ஆதரவு மனநிலையில் இருந்து எதிர்மனநிலைக்கு வந்தேன்’ என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அது, அவர்களின் கடமை. ஆனால், விஜய் எந்தப்புள்ளியில் அ.தி.மு.க-வில் இருந்து விலகினார்? ஜெயலலிதாவின் அ.தி.மு.க-வுக்கும் எடப்பாடியின் அ.தி.மு.க-வுக்கும் அவர் அப்படியென்ன வித்தியாசத்தை உணர்கிறார்?

`அது ரொமாண்டிக் கத்தி; இது அப்படியல்ல’- `பிகில்'-ஐ சாடும் ஜெயக்குமார்!

விஜய்யிடம், ரஜினி அரசியல் பேசத் தொடங்கிய ஆரம்பகாலங்களின் கூறு, அதிகமாகவே வெளிப்படுகிறது. ரஜினி என்ன செய்வார்? எப்போதேனும் அவர் மேடையேறும்போது, அவரிடம் அரசியல் தொடர்பாக ஒரு கேள்வி கேட்பார்கள். அவரும் ‘எல்லாம் ஆண்டவன் கையில் இருக்கு...’ என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார். ஆனால், கைக்காசைப் போட்டு `தலைவன் இன்றாவது ஒரு முடிவை அறிவிப்பார்’ என்று விழாவுக்கு வந்த ரசிகன், மனமுடைந்து நகர்வான். மறுபடியும் அடுத்தொரு விழா வரும். அதிலும் ரஜினி மேடையேறுவார். அதே மாதிரி மேலே நோக்கி கைகாட்டுவார். ரசிகன் மீண்டும் மனமுடைவான். இதுதான் இதுநாள் வரை ரஜினி செய்ததும் செய்வதும்.

Vijay
Vijay

இப்போது விஜய் என்ன செய்கிறார்? அதே போல ஆண்டுக்கொரு மேடை, அதில் அரசியல் தொடர்பாக ஒரு கேள்வி, அதற்கு அவர் அளிக்கும் உசுப்பேத்தும் பதில் என, அப்படியே இருக்கின்றன அத்தனை காட்சிகளும். ரஜினியின் ரசிகனைப் போலவே விஜய்யின் ரசிகனும், ‘இவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா’ என மண்டை காய்ந்துதான், ஒவ்வொரு முறையும் ஊருக்கு பஸ் பிடிக்கிறான். மக்கள் ஏற்கெனவே ரஜினி என்பவரின் அரசியல் கூத்துக்களைப் பார்த்து, மனம் நொந்து அமர்ந்திருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக, அவர் ஆரம்பித்து வைத்த அரசியல் நாடகம், முடிவே இல்லாமல் நீண்டுகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், ரஜினி புறப்பட்ட அதே இடத்திலிருந்து இன்னொருவர் அதே மாதிரி புறப்பட்டு வருவதை எப்படி ஏற்பது?

விஜய் அரசியல் பன்ச், 'நோ' பேனர், குட்டிக் கதை...'பிகில்' இசை வெளியீட்டில் நடந்தது என்ன?

அடிப்படையில், அரசியல் என்பது கோடி மக்களின் வாழ்வை தீர்மானிக்கும் அலகு. அங்கே எழும் பிரச்னைகள் நிஜம். அது, இயக்குநரால் எழுதப்படும் காட்சி அல்ல. அங்கே கசிந்துவிழும் மக்களின் கண்ணீரும் நிஜம். அது, மேக்கப் மேனால் கண்களில் தெளிக்கப்படும் கிளிசரின் அல்ல. `தளபதி’யாக இருக்கும் ஒரு சினிமா பிரபலம் அவற்றையெல்லாம் அறிந்தும் புரிந்தும் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், ’தலைவனாக’ விரும்பும் ஒரு சினிமா பிரபலம் அந்தப் பிரச்னைகளை அறிந்திருக்க வேண்டும், மக்களின் கண்ணீரையும் புரிந்திருக்க வேண்டும். அது கட்டாயம்!

Vijay
Vijay

ஆம், விஜய் சிலதவற்றைச் செய்திருக்கிறார். பணமதிப்பிழைப்பை எதிர்த்தார். அனிதா வீட்டுக்குச் சென்றார். தூத்துக்குடி மக்களுக்கு உதவி செய்தார். இது நல்ல பண்பு. இதற்காக, அவருக்கு கைதட்டலாம். அவரைப் பாராட்டலாம். ஏன்? அவருக்காக ஒருவிழாகூட நடத்தலாம். ஆனால், மக்கள் எதிர்பார்ப்பது உதவியை அல்ல, தீர்வை! உதவி எவர் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால், தீர்வை களத்தில் செயல்படும் ஒரு அரசியல் தலைவனே கொடுக்க முடியும். விஜய், தீர்வைத் தரும் அரசியல் தலைவனைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, உதவியோடு மட்டும் நின்றுகொள்வது எப்படி சரி? மத்திய அரசும் மாநில அரசும் பார்ட்னர்ஷிப் போட்டு தமிழ்நாட்டை பழிவாங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அரசியல் செய்யாமல், வேறு எந்தத் தருணத்தில் அரசியல் செய்யப்போகிறார் விஜய்?

’தகுதியான இடத்தில் தகுதியானவர்களை மக்கள் அமர வைக்கவில்லை’ என்பது, விஜய் ஒரு குட்டிக்கதையின் மூலம் உணர்த்தியிருக்கும் நீதி. தகுதியானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், தகுதியானவர்கள் களத்தில் இல்லை என்றே பொருள். அந்தத் தகுதி தனக்கிருப்பதாகக் கருதினால், விஜய் களமிறங்கலாமே? இப்படி, ஆடியோ விழாக்களிலேயே அரசியல் பேசி ரசிகனை உசுப்பேத்திக் கொண்டிருப்பதன் மூலம் என்ன பயன்? ஆக, விஜய்யைத் தடுப்பது ஒரு விஷயமாகவே இருக்க வேண்டும். அது, வியாபாரம்! விஜய் இப்போது ஒரு பிராண்ட். அவரை வைத்து கோடிகளில் வியாபாரம் நடந்துகொண்டிருக்கிறது. அவருமே அதனால் பயனடைந்து கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் பணி முதலில் பலி கேட்பது, பணத்தையும் வசதியான வாழ்வையும்தான். அதை இழக்கத் துணிபவர்களே வரலாற்றில் தலைவன்களாக மாறுகிறார்கள். மற்றவர்கள், வெற்று வியாபாரிகளாகவே எஞ்சுகிறார்கள். விஜய், இந்த இரண்டு பக்கத்தில் எந்தப் பக்கம்? இப்போதுவரை, விஜய் இரண்டாவது பக்கமே!

Pawan kalyan
Pawan kalyan

விஜய்க்கு உதாரணம் காட்ட ஒருவர் இருக்கிறார். அவருக்கும் பிடித்தவர்தான் அந்த நபர். அவர் பெயர், பவன் கல்யாண்! ஆந்திரத்தில், இப்போதும் உச்ச நடிகர் பவன். கிட்டத்தட்ட விஜய்யின் வயதுதான் அவருக்கும். பவனுக்கு, கோடிகளில் சம்பளம் கொடுக்க அங்கே நிறைய தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனானப்பட்ட ராஜமவுலியே, பவன் கால்ஷீட்டுக்காகப் பல ஆண்டுகளாகத் தவம் இருக்கிறார். ஆனால், அவர் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. 2012-ம் ஆண்டு இறுதியில் வெளியான `கேமராமேன் கங்காதோ ராம்பாபு’ படத்தில், பவன் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அடுத்த இரண்டு வருடங்களில், ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிளக்கப்பட்டது. எங்கும் பிரச்னைகள். ஆந்திர மக்கள் அமைதியிழந்து தவித்த நாள்கள் அவை. அப்போதுதான், ‘இனியும் என்னால் காலம் தாழ்த்த முடியாது. அது மக்களை ஏமாற்றுவது போலாகிவிடும்’ என்று அறிவிக்கிறார் பவன். அந்த உணர்வு வந்த இரண்டே மாதங்களில், பவன் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார்.

‘மெர்சல்’ ரிலீஸுக்கும் நாங்கதான் காரணம்... - ‘சர்கார்’ பிரச்னைக்கும் நாங்கதான் காரணம்!

அதற்குச் சில வாரங்கள் முன்னாலேயே, கட்சி ஆரம்பிப்பதற்கான படிவத்தை தேர்தல் ஆணையத்தில், பவன் சமர்ப்பித்திருந்தார். இதோ, இப்போது பவன் அரசியலில் இறங்கி, ஒரு தேர்தலையும் சந்தித்து முடித்திருக்கிறார். தோற்றுவிட்டார்தான். ஆனால், `களம் நின்றேன்’ என்ற கர்வம், அவரை காத்து நிற்கிறது. இப்போதும், அவர் களத்தில்தான் நிற்கிறார். ‘I am not a Seasonal Bird' என்றே, எல்லோருக்கும் பதில் சொல்லி வருகிறார். யாருக்குத் தெரியும்?! அடுத்து வரும் தேர்தல்களில், அவருக்கென ஒரு பெருவெற்றியைக் கையில் வைத்திருக்கலாம் காலம். ஏனென்றால், மாநில நலனுக்காகக் கோடிகளில் புரளும் ஒரு வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டு வந்தவரை, அவ்வளவு எளிதில் மக்கள் கைவிட்டுவிட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அப்படியே தோற்றாலும்கூட, பவனால் காலரைத் தூக்கிவிட்டுச் சொல்ல முடியும், ‘நான் களமிறங்கினேன். போராடினேன்’ என்று. அந்தத் திருப்தி போதாதா?

Pawan Kalyan
Pawan Kalyan

பவனின் அந்த `தில்’ ஏன் இங்கு இருக்கும் நடிகர்களுக்கு இல்லை தெரியுமா? பதில் எளிது. பவன், அரசியலை கீழிருந்து மேலே பார்க்கிறார். அதாவது, மக்களின் பக்கத்தில் இருந்து அரசியலை அவர் பார்க்கிறார். ஆனால், இங்கு இருக்கும் நடிகர்களோ, அரசியலை மேலிருந்து கீழாகப் பார்க்கிறார்கள். அதாவது, தங்களுக்கானதாக, தங்களின் உயர்வுக்கானதாக, மட்டுமே அவர்கள் அரசியலைக் கருதுகிறார்கள். அதனால்தான், சினிமாவில் அத்தனையையும் அனுபவித்து முடித்தபிறகு, காலம்போன கடைசியில் கட்சி ஆரம்பித்து, ‘இனிமேல் என் வாழ்க்கை மக்களுக்கானது’ என்று அறிவிக்கிறார்கள். இதை ஏதோ, மக்களுக்காக அவர்கள் செய்த மாபெரும் தியாகம் போலவும் காட்டிக்கொள்கிறார்கள். இதற்குப் பெயர்தான் தியாகம் என்றால், தியாகம் பழிப்பு காட்டிவிட்டு திரும்பிப் படுக்கும்!

``என் ரசிகனை எதும் பண்ணாதிங்க!'' - விஜய் எச்சரிக்கை | Bigil

’ஏன், எம்.ஜி.ஆர் மிகத் தாமதமாகத்தானே முழுநேர அரசியலுக்கு வந்தார். அவரை ஏற்றுக்கொள்ள வில்லையா மக்கள்?’ என்று சிலர் கேட்கக்கூடும். எம்.ஜி.ஆர் மட்டுமல்ல, என்.டி.ஆர் கூட அப்படித்தான். இது, எதையுமே மறுக்கவில்லை. ஆனால், இருவருக்குமே, இப்போது அரசியல் ஆசையில் இருக்கும் நடிகர்கள் அறிய வேண்டிய இன்னொரு பக்கம் இருக்கிறது.

MGR
MGR

எம்.ஜி.ஆர், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னரே, அரசியல்வாதி! அதாவது, 1950-களின் பிற்பகுதியிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்துவிட்டார் அவர். அதுவும், அவர் அரசியலில் இறங்க முடிவெடுத்தபோது, தி.மு.க ஒன்றும் ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு பெரிய கட்சியாக வளர்ந்து நிற்கவும் இல்லை. ஆனால், எம்ஜிஆரின் தேர்வு தி.மு.க-வாகவே இருந்தது. ஆக, எம்.ஜி.ஆர் ஆட்சி அரியணைக்காக அரசியலில் நுழையவில்லை என்பது தெளிவு. அனைத்துக்கும் மேலே, எம்.ஜி.ஆர், அண்ணா எனும் மாபெரும் தலைவனை அடியொற்றி அரசியலுக்கு வந்தவர். அவரது படங்கள், அந்த மகத்தான தலைவனின் கொள்கைகளைப் பேசின. அவரும், ஊர்தோறும் மேடையேறி ’அண்ணா பாசறையில் இருந்து வந்தவன் நான்’ என்று அறிவித்தார். அது, அவருக்கு ஒரு நம்பகத்தன்மையைக் கொடுத்தது. இதைவிட, 40 வயதில்தான், நாயகனாக அறிமுகமாகும் வாய்ப்பு எம்ஜிஆருக்கு வருகிறது. அந்த வகையில் பார்த்தால், சினிமாவுக்கு வந்து உச்சநட்சத்திரமாக மாறத் தொடங்கியிருந்த மிகச்சில ஆண்டுகளிலேயே, அவர் அரசியலுக்கு வந்துவிட்டார்.

எம்.ஜி.ஆரைப் பார்த்து அரசியல் ஆசையை வளர்த்துக்கொண்டவர்தான் என்.டி.ஆர். இன்னும் சொன்னால், எம்.ஜி.ஆரை ஒரு அண்ணன் ஸ்தானத்தில் வைத்திருந்தவர். ஆனால், அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை எடுத்தது ஒரு எதிர்பாராத தருணத்தில். அப்போது, இந்திரா காந்தி பிரதமர். சஞ்சய் காந்தி இறந்து, ராஜீவ் காந்தி காட்சிக்கு வந்திருந்தார். பிற்கால ராஜீவைப்போல் அல்லாமல், முற்கால ராஜீவ் அதிக முரட்டுத்தனம் கொண்டவர். 1982-ம் ஆண்டு ஹைதராபாத் விமானநிலையத்தில் வைத்து, ஆந்திர காங்கிரஸின் மூத்த தலைவர் அஞ்சையாவை மிகமோசமாக அவமதித்தார் ராஜீவ். ஆந்திராவே அப்போது கொதித்தது.

NTR
NTR

அந்தச் சம்பவமே, என்.டி.ஆரையும் கட்சி ஆரம்பிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றது. முடிவெடுத்த சில மாதங்களிலேயே, கட்சியைத் தொடங்கி விட்டார் என்.டி.ஆர். அது மட்டுமல்லாமல்,  `ஆத்ம கௌரவம் (சுய மரியாதை)’ எனும், எவராலும் அசைக்க முடியாத ஒரு கொள்கையையும் அறிவித்தார். காங்கிரஸ் தலைமையின் எதேச்சதிகாரப் போக்கால் ஆத்திரப்பட்டுக் கிடந்த ஆந்திரம், என்.டி.ஆரின் பக்கம் அப்படியே சாய்ந்தது. அறியவும்... ஆந்திரத்தில் எழுந்த முதல் பிராந்திய கட்சி, நந்தமுரி தாரக ராமராவ் எனும் சினிமா பிரபலம் ஆரம்பித்த, ’தெலுங்கு தேசம்’தான்.

இதுதான் வரலாறு. எம்.ஜி.ஆரும் என்டிஆரும் ‘சினிமாவிலிருந்து வந்தார்கள். நாட்டை ஆண்டார்கள்’ என்ற இருவரிக்குள் அடங்கிவிடும் தலைவர்கள் அல்ல. அவர்களுக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றில் அவர்கள் வகித்த பங்கு இருக்கிறது. இவர்கள் இருவரையும் மேலோட்டமாக அணுகியதன் விளைவுதான், அமிதாப் பச்சனும் சிவாஜி கணேசனும் அரசியலில் அடைந்த தோல்விகள். மக்கள் ஒன்றும் வந்தவர்கள் போனவர்களையெல்லாம் அரியணையில் அமரவைக்கும் அளவுக்கு, அறிவில்லாதவர்கள் அல்ல என்பதற்கு, அந்த இரண்டு நட்சத்திங்களுமே ஆகச்சிறந்த உதாரணங்கள். இங்கே, எல்லோரின் பின்னாலும் ஒரு கூட்டம் இருக்கிறது. விஜய் மட்டுமல்ல, விஷாலாலும்கூட 1,000 பேரை கூட்டி கூட்டம் போடமுடியும். ஆனால், அந்தக் கூட்டம் மட்டுமே மக்கள் அல்ல. மக்கள் என்பவர்கள் அந்தக் கூட்டத்துக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களின் மனதை வெல்ல வேண்டுமானால், களத்தில் இயங்க வேண்டும். எம்.ஜி.ஆரையும் என்.டி.ஆரையும் பவனையும்போல!

விஜய் அரசியல் குறித்து எப்போது என்ன பேசினார்? வருடத்தை க்ளிக் செய்யுங்கள்!  

ஆக, விஜய் இனியும் காலம் தாழ்த்தக் கூடாது. அப்படிக் காலம் தாழ்த்தினால், அவரும் இன்னொரு சினிமா பிரபலமாகவே அடையாளப்பட்டுப்போவார். விஜய்க்கு அது நடக்கக் கூடாது, என்பதே விருப்பம்!

பின் செல்ல