Published:Updated:

மீண்டும் விஸ்வரூபம் எடுப்பாரா விஜயகாந்த்..?! பரிதவிக்கும் தொண்டர்கள்!

பிரபலங்கள் ஆரம்பிக்கும் கட்சிக்கு, அந்தப் பிரபலங்கள்தாம் எல்லாமே. அவர்கள் எழுந்தால் அந்தக் கட்சியும் எழும். அவர்கள் படுத்தால் அந்தக் கட்சியும் படுத்துவிடும். இதோ, விஜயகாந்த் படுத்ததும் தே.மு.தி.க-வும் படுத்துவிட்டது.

Vijayakanth
Vijayakanth

68-வது பிறந்தநாளைக் கொண்டாடி முடித்திருக்கிறார், விஜயகாந்த். பிறந்தநாள் விழாவில், ’என்ன நடக்கிறது’ என்பதையே உணர்ந்துகொள்ள முடியாத நிலையில் அவரைக் கண்டபோது, உண்மையிலேயே உள்ளம் வலித்தது. அந்தக் கணம், அவரைப்பற்றி ஏதேனும் எழுத வேண்டுமென்று தோன்றியது.

காரணம் சொல்கிறேன்...

Vijayakanth
Vijayakanth

விஜயகாந்த் எனக்கு விருப்பமானவர். என் சிறுவயதில் அவர்மீது பித்துப்பிடித்து அலைந்தவனாக நான் இருந்திருக்கிறேன். ’என்னை ஏம்மா செகப்பா பெத்தே’ என்று, என் அம்மாவிடமும் சண்டையிட்டிருக்கிறேன். நான் தியேட்டருக்குப் போய் பார்த்த முதல் படமும் விஜயகாந்த் படம்தான். அந்தப் படம், 'வல்லரசு'. அப்புறம், நான் ’ஜெய்ஹிந்த்’ பார்த்து அர்ஜூன் ரசிகனாக மாறிவிட்டேன்.

அந்தக் காலங்கள் அலாதியானவை. 'ஐ லவ் இண்டியா' சொல்லி உறங்குவேன். 'தாயின் மணிக்கொடி' அலாரம் வைத்து விழிப்பேன். அர்ஜூனைப் போல தேசியக்கொடியை கையில் பச்சைகுத்திக்கொள்ள வேண்டும் என்று, பாட்டிகளைத் தேடி அலைந்தேன். ஒரு பாட்டியைக் கண்டுபிடித்தும்விட்டேன். ‘பார்க்க சின்னப் பையனா இருக்கே... வீட்டுக்குப் போ...’ என்று விரட்டிவிட்டார் அவர். அந்த ஆசையும் அத்தோடு போனது. இன்னமும், நான் அர்ஜூன் வெறியன்தான். 'வல்லக்கோட்டை'யையும் 'வந்தே மாதரம்'படத்தையும் முதல்நாள் முதல் காட்சி பார்த்த நாலு பேரில் நானும் ஒருவன். ஆனால், அர்ஜூனுக்கு இணையாக விஜயகாந்த் மீதும் அன்பு வைத்திருந்தேன், வைத்திருக்கிறேன். அடிப்படைக் காரணம், 'தாயகம்' படம். அந்தப் படத்தின் இறுதிக்காட்சி இருக்கிறதே... அதை இப்போது பார்த்தாலும் கண்ணு வெடிக்கும், கன்னம் துடிக்கும். சமீபத்தில் வந்த சுதந்திரதினத்தின்போதுகூட, சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்ட காட்சியாகவும் அதுவே இருந்தது. வேறு எந்தப் படத்தின் காட்சியும் அதன் அருகில்கூட வரமுடியாது.

Vijayakanth
Vijayakanth

கவனித்ததுண்டா? அர்ஜூன் கூட, கொஞ்சம் மேட்டிமைத்தனமாக தேசப்பற்றைக் காட்டுவார். ஆனால் விஜயகாந்த், தரைலோக்கலுக்கு இறங்கியடிப்பார். தாயகம் அந்த வகை! தமிழ்நாட்டு இளைஞர்களின் மனத்தில் தேசப்பற்றை ஊட்டியதில், விஜயகாந்த்துக்கு தனிப் பங்கு கொடுத்தே ஆகவேண்டும். இதனாலேயே, விஜயகாந்த் மீது தீராப்பற்று கொண்டு திரிந்தார் எங்க ஊர் மணி அண்ணன். அவர், பார்ப்பதற்கு விஜயகாந்த் மாதிரியே இருப்பார். டெய்லர் கடை வைத்திருந்தார். கடை முழுவதும் விஜயகாந்த் சிரிப்பார், முறைப்பார், ராதிகாவை கட்டிப்பிடிப்பார், வாசிம்கானின் கையை உடைப்பார்... இன்னும் என்னென்னமோ செய்துகொண்டிருப்பார். ஆண் பிறந்தால் ’விஜயகாந்த்’ என்றும், பெண் பிறந்தால் ’விஜயகாந்தி’ என்றும் பெயர் வைக்கப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தார். நல்லவேளை, ஆண் பிறந்தான்!

Vijayakanth
Vijayakanth

’ராஜ்ஜியம்’ படம் அப்போது ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் ஆரம்பப் பாடலின் ஒவ்வொரு வரியும் ஒவ்வோர் ஊரில் படமாக்கப்பட்டதாகச் சொல்வார்கள். அதில் சேலமும் ஒன்று. சேதி அறிந்து, மணி அண்ணன் காலையிலேயே குளித்துமுடித்து குங்குமம் வைத்துக் கிளம்பிவிட்டார். ஆனால், அவர் செல்வதற்குள் படப்படிப்பு முடிந்து பெட்டி கட்டிவிட்டார்கள். ’என்னடா... இப்படி ஆகிப்போச்சு’ என்று அவர் வருந்திய காட்சிகள் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கின்றன. அதற்குப் பிறகு, அவரால் விஜயகாந்த்தை நேரில் சந்திக்க முடியவில்லை. கடைப் படங்களைப் பார்த்துக்கொண்டே காலத்தை ஓட்டிவிட்டார். ஆனாலும், விஜயகாந்த் மீதான வெறியைப் பல ஆண்டுகளுக்கு அப்படியே தக்கவைத்திருந்தார். இப்போது போய் கேட்டாலும், ‘என்ன இருந்தாலும் அவர் எங்க கேப்டன்டா...’ என்றே சொல்லுவார்.

இதுபோல எத்தனையோ லட்சம்பேரை ரசிகர்களாகப் பெற்றிருந்தார் விஜயகாந்த். எல்லோருமே அவருக்காக எதையும் இழக்கத் தயாராக இருந்த படைவீரன்கள். ‘கட்டி வா என்றால் வெட்டி வருவான்...’ என்போம் அல்லவா, அதே போன்றவர்கள். ஆனால், அப்படிப்பட்டவரை காலம் காகிதமென கசக்கி எறிந்ததை நினைக்கையில், மனம் கனக்கிறது. அதிலும், அவரது சொத்து ஏல விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ‘கடன்தாரர்’ என்ற வார்த்தையைப் பார்த்து, அவரின் ரசிகர்கள் எத்தனை நாள்கள் அழுதார்கள் எனத் தெரியவில்லை. மணி அண்ணன் நான்கு நாள்கள் அழுதிருக்கிறார்.

Vijayakanth
Vijayakanth

விஜயகாந்த் வித்தியாசமான நடிகர். ரஜினிக்கு ஸ்டைல் இருந்தது. கமலுக்கு நடிப்பு இருந்தது. ஆனால், விஜயகாந்த்திடம் அது இரண்டுமே குறைவாகவே இருந்தது. காமெடியும் சுமாராகவே செய்வார். ஆனாலும், திரைத்துறையில் உச்சங்களை எட்டினார், அவர். ஆச்சர்யம்தான். இனம்காண முடியாத ஏதோ ஒன்று அவரை இவ்வளவு தூரம் இழுத்துவந்திருக்கிறது. அமைதியான 'ரமணா'வாகவும் அவர் அசரடித்திருக்கிறார், ஆக்ரோஷமான 'நரசிம்மா'வாகவும் அவர் அதகளப்படுத்தியிருக்கிறார். உண்மையிலேயே ஆச்சர்யம்தான்!

அப்போது, ’ஊமை விழிகள்’ படத்தின் தயாரிப்புப் பணிகளில் இருந்தார், ஆபாவாணன். எல்லா கேரக்டர்களுக்கும் ஆள்பிடிக்க முடிந்தவரால், அந்த போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு மட்டும் ஆளைப்பிடிக்க முடியவில்லை. அது, நல்ல வெயிட்டான கேரக்டர் வேறு. அதனால், ’யாராவது முன்னணி நடிகர் நடித்தால் நன்றாகயிருக்கும்’ என்று ஆபா நினைக்கிறார். ஆனால், அனுபவம் இல்லாத ஆபாவை நம்ப பெரிய நடிகர்கள் மறுக்கிறார்கள். விரக்தியில் வீதியில் நடந்துகொண்டிருக்கும்போது, விஜயகாந்த் அவர் நினைவுக்கு வருகிறார். ‘இது, இளைஞர்களால் எடுக்கப்படும் படம்’ என்று ஆபா சொல்லியதுமே, விஜயகாந்த் மகிழ்கிறார். சம்பளம் பற்றியெல்லாம் அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

Vijayakanth
Vijayakanth

’ஊமை விழிகள்’ எத்தனை பேரின் வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தது என்பது குறித்து, தனியாக ஆய்வுதான் நடத்த வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான், அருண்பாண்டியனும் விஜயகாந்த்துக்கு பழக்கமாகிறார். படப்பிடிப்பு தருணங்களிலேயே, இருவருக்குள்ளும் இரும்பென நட்பு இறுகுகிறது. அந்த நட்புக்காக, பின்னாளில் அருண் பாண்டியன் தயாரித்து நடித்த ‘தேவன்’ படத்தில், தயங்காமல் இரண்டாம் நாயகனாக நடித்துக்கொடுத்தார், விஜயகாந்த்.

விஜய்-'க்கு நாளைய தீர்ப்பு' எதிர்பார்த்த ரிசல்ட் தராத நேரமது. அடுத்து, 'செந்தூரபாண்டி' கதையை எழுதிக்கொண்டிருந்தார், சந்திரசேகர். ‘அந்த அண்ணன் கேரக்டருக்கு விஜயகாந்த் தான் சரிப்படுவார்’ என்று அவருக்குத் தோன்றுகிறது. ஆனால், எப்படிக் கேட்பது என்று சங்கோஜப்படுகிறார். ஏனென்றால், விஜயகாந்த் படங்கள் அப்போது ரஜினி படங்களுக்கு இணையான வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருந்தன. ஆனாலும், சந்திரசேகர் நம்பிக்கைகொள்கிறார். விஜயகாந்த்தை அடையாளம் காட்டிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ அவர் எடுத்ததுதானே! அந்த நம்பிக்கையில் கேட்டேவிடுகிறார். ‘இதை நீங்க கேட்கணுமா சார். எப்போ எங்கே வரணும்னு மட்டும் சொல்லுங்க’ என்று சொல்கிறார், விஜயகாந்த்.

Vijayakanth
Vijayakanth

அடுத்த சில மாதங்களில், தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வந்தான், செந்தூரபாண்டி. வசூலையும் வலுவாகக் கொடுத்தான். விஜய்-யும் தமிழ்நாடு முழுக்க அறிந்த முகமாக மாறினார். விஜய்-யின் அடுத்த படத்தின் செய்திகள், ‘விஜயகாந்த்தின் தம்பி நடிக்கிறாம்பா...’ என்றே எதிர்கொண்டது, தமிழ்நாடு. அப்புறம், சூர்யாவுக்கும் ஒரு கஷ்டகாலத்தில் கைகொடுத்தார் விஜயகாந்த். 'பெரியண்ணா' வந்தான். ஆனால், படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. ஆனாலும், அந்தக் காலங்களில் சூர்யாவுக்கு அது ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுக்கவே செய்தது. இப்படி, எப்போதுமே இளம் திறமைகளை வளர்த்துவிடும் மனம் கொண்டவராகவே இருந்திருக்கிறார், விஜயகாந்த்.

சொல்லித் தெரியவேண்டியதில்லை... கோயம்பேட்டில் இருக்கும் விஜயகாந்த்தின் அலுவலகம், சென்னையின் அன்ன சத்திரங்களில் ஒன்று. ’வியாழக்கிழமை விஜயகாந்த் ஆபீஸுக்கு போ...’ என்று ஒரு படத்தில் வசனம்கூட பேசுவார்கள். அந்த அலுவலகத்தில் பசியாறியவர்களின் வாழ்த்துதான், இப்போதும் அவரை காத்துக்கொண்டிருப்பதாகப் படுகிறது. இன்றைய நடிகர் சங்கத்தின் அவலக்கூத்துகளைப் பார்க்கும்போது, எல்லோருக்கும் விஜயகாந்த்தான் நினைவுக்குவருவார்.

2001 - 2005 வரைக்கும் விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார். இதுவரை நடிகர் சங்கத்தை எம்.ஜி.ஆர் எடுத்து நடத்தியிருக்கிறார், ராதாரவி நடத்தியிருக்கிறார், சரத்குமார் நடத்தியிருக்கிறார். ஆனால், விஜயகாந்த் அளவுக்கு எவரும் திறம்பட நடத்தியதில்லை. தியாகராய நகரில் கம்பீரமாக எழுந்து கொண்டிருக்கும் நடிகர் சங்க கட்டடத்தின் அஸ்திவாரம், விஜயகாந்த் சிந்திய வியர்வையில்தான் போடப்பட்டிருக்கிறது. விஷால் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் அதுவே உண்மை.

Vijayakanth
Vijayakanth

சேலத்தில், மஹாலட்சுமி ஐயங்கார் பேக்கரி இல்லாத ஊர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அங்கே, எவர் நுழைந்தாலும் விஜயகாந்த்தைப் பற்றி சில வார்த்தைகளேனும் பேசிவிட்டுதான் வெளியே வருவார்கள். ஏனென்றால், அந்தக் கடையின் முதலாளி விஜயகாந்த்தால் வளர்த்துவிடப்பட்டவர். விஜயகாந்த்தின் படம், கடையின் நடுவாந்திரமாக மாட்டப்பட்டிருக்கும். விஜயகாந்த் வீடு ஏலத்துக்கு வந்த செய்தியை, அந்தக் கடையில் அமர்ந்துதான் படித்திருக்கிறான், என் நண்பன். போன் பண்ணி சொன்னான். ’விதிதான் எத்தனை கொடிய, இரக்கமற்ற விலங்கு’ என்று நினைத்துக்கொண்டேன்.

விஜயகாந்த் எங்கே வீழ்ந்தார்?

2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், மதுரை தோப்பூரில் வைத்து கட்சியைத் தொடங்கினார், விஜயகாந்த். அவரின் மாவட்டம் அது. அதனாலேயே கூட்டம் அள்ளியது. மதியம் 3 மணிக்கெல்லாம் விழா மேடை ரெடி. 4 மணிக்கு அங்கே வந்தார் விஜயகாந்த். அந்த நடையும் அந்தச் சிரிப்பும், அந்த கைதட்டலும்... என்னவென்று சொல்வது... தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டதாகவே தமிழன் நினைத்தான். அந்த மேடையில் அன்று பிரேமலதாவோ சுதீஷோ இல்லை. சுந்தர்ராஜனும் ராமு வசந்தனும்தான் மையமாக இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு அந்தக் கட்சியின் நிலைமை அப்படியே எதிர்நிலையில் இருக்கிறது. பிரேமலதா கட்சியின் மகளிரணித்தலைவி ஆகிவிட்டார். சுதீஷ், மாநிலங்களவை உறுப்பினராக அடி போட்டுக்கொண்டிருக்கிறார். அவர் மகன் விஜயபிரபாகரன், கட்சிக்காரர்களை மனம் போன போக்கில் நடத்திக் கொண்டிருக்கிறார். சந்தேகமே இல்லாமல், விஜயகாந்த் சறுக்க ஆரம்பித்த இடம் இதுதான்.

Vijayakanth
Vijayakanth

தோப்பூர் மேடையில், ‘என் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் என் உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களே...’ என்று விஜயகாந்த் சொல்லெடுத்தபோது, ‘தலைவா’ என்று தட்டிகளை உடைத்து வீசிய தொண்டன், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை. அவன், சினிமா டிக்கெட்டை அப்படி கிழித்து வீசிய காலத்தில்கூட நிம்மதியாக இருந்தான். அவனை தொண்டனாக்கி, தெருத் தெருவாக கொடிகட்டவைத்து, விஜயகாந்த் அப்படி எதை அடைந்தாரோ தெரியவில்லை.

அங்கே, கட்சிக் கொள்கையையும் சொன்னார், விஜயகாந்த். ‘எல்லாரும் வயிறு நிறைய சாப்பிடணும், எல்லாரும் சொந்த வீட்டுல நிம்மதியா தூங்கணும், எல்லாருக்கும் மருத்துவ வசதி கிடைக்கணும்... இதுதான் என் கொள்கை’ என்று அறிவித்தார். எளிமையான, வலிமையான கொள்கைகள். ஆனால், அதை எப்படிச்செய்ய வேண்டும் என்பதற்குதான், விஜயகாந்த்திடம் எந்த வேலைத் திட்டமும் இல்லை. அவர் கைவசம் இருந்த ஒரே திட்டம், வீட்டுக்கே தேடிவரும் ரேஷன் பொருள்கள். அது, 'விருதகிரி' படத்தில் பாடல் காட்சியாக வைப்பதற்கு மட்டுமே பயன்பட்டது. ‘எனக்கிந்த பணம் காசு மேல எல்லாம் ஆசை இல்லை’ என்பதும், அதே மேடையில் விஜயகாந்த் சொன்னது தான். அவருக்கு ஆசை இல்லை. ஆனால், அவருக்கு அருகில் இருந்தவர்களுக்கு அது அதிகமாகவே இருந்து தொலைத்தது. ஆசை ஆவியெனவும், பேராசை பேயெனவும் அவர்களைப் பிடித்தாட்டியதன் விளைவே, விஜயகாந்தின் கட்சி இன்று அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது.

Vijayakanth
Vijayakanth

இடையில், எதிர்க்கட்சித் தலைவராக அமரும் வாய்ப்பும் அவருக்கு வந்தது. ஆயிரம் சொன்னாலும், அது அவருக்கு அ.தி.மு.க கொடுத்த வெற்றி. ஆனால், அதை ஏற்க விஜயகாந்த்துக்கும் மனமில்லை, அவர் கட்சியினருக்கும் மனமில்லை. ஆணவம் அவர்களைத் தடுத்தது. அதேபோல, எதிர்க்கட்சித் தலைவராகவும் ஏமாற்றினார் விஜயகாந்த். ஒரு உருப்படியான தீர்மானத்தைக்கூட அவரது கட்சி, சட்டமன்றத்தில் கொண்டுவரவில்லை. சட்டமன்றத்தில் அ.தி.மு.க காரர்களை அவர் அடிக்கப்பாய்ந்தது சாகசச்செயல்தான். ஆனால், அது சரியான செயல் அல்ல. அடிப்படையில், பிரபலங்கள் ஆரம்பிக்கும் கட்சிக்கு அந்தப் பிரபலங்கள்தான் எல்லாமே. அவர்கள் எழுந்தால் அந்தக் கட்சியும் எழும், அவர்கள் படுத்தால் அந்தக் கட்சியும் படுத்துவிடும். இதோ, விஜயகாந்த் படுத்ததும் தே.மு.தி.க-வும் படுத்துவிட்டது. கட்சிக்கு காரியம் செய்வதற்கு தான் இப்போது காசு சேர்க்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அரசியலை அணுகுவதில், விஜயகாந்த்துக்கு ஆரம்பத்தில் இருந்தே குழப்பம்தான். கட்சிப் பெயரிலேயே அதகளத்தை ஆரம்பித்துவிட்டார், அவர். தேசியத்தையும் திராவிடத்தையும் இணைத்து, எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக கட்சிக்குப் பெயர் வைத்தார். ’இது என்ன புது உருட்டா இருக்கு...’ என்று, அரசியல் ஆய்வாளர்கள் அலாரம் வைத்தெழுந்து புலம்பினார்கள். ஆனால், ‘பாட்டிலா முக்கியம்... பாட்டிலுக்குள் இருக்கும் பானம் தான் முக்கியம்...’ என்று சிரித்தார், கேப்டன். அதாவது, முதல் தேர்தலில் ‘எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை, தனியாகத் தான் நிற்பேன்’ என்று அவர் எடுத்த நிலைப்பாட்டுக்கு, மக்களிடையே மாஸ் ரெஸ்பான்ஸ். கிட்டத்தட்ட, எட்டு சதவிகித வாக்குகளை அவருக்கு அள்ளிக்கொடுத்தார்கள். சும்மா சொல்லக்கூடாது. அன்று, அறிவாலயம் அரண்டது, திண்டிவனம் திகைத்தது, போயஸ்கார்டன் பொருமியது. ஆனால், அடுத்த தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததன் வாயிலாக, ’நானும் சராசரி அரசியல்வாதிதான்’ என்று காட்டினார், விஜயகாந்த்.

Vijayakanth
Vijayakanth

அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் ஆடியது, இன்னும் நாராசமான ஆட்டம். ’மக்களோடும் கடவுளோடும் மட்டும்தான் கூட்டணி’ என்று டிபன் டைமில் அறிவித்துவிட்டு, டின்னர் டைமில் பா.ஜ.க-வோடு கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இதைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால், ‘மோடியை ’குஜராத்தின் பெரியார்’ என்று அவர் அள்ளிவிட்டதெல்லாம், அவர் ஆசையாகக் கும்பிடும் அழகருக்கே அடுக்காது. அவரது அரசியலின் அழிவு அங்கே தான் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. ‘என்னது, மோடி பெரியாரா? அப்போ, அமித்ஷா என்ன அண்ணாவா?’ என்று திட்டித்தீர்த்தது திராவிடபூமி. ஆனால், அதை அவர் உணரவே இல்லை. அடுத்த சட்டமன்றத் தேர்தலில், முன்பைவிட மோசமாக கூட்டணிக்கூத்தை அரங்கேற்ற ஆரம்பித்தார்கள், அவரும் அவர் குடும்பத்தினரும்.

இன்னும் நினைவிருக்கிறது. உளுந்தூர்பேட்டை மேடையில், ‘நாம் கூட்டணி வைக்கலாமா... தனித்துப் போட்டியிடலாமா...’ என்று, தொண்டர்களை நோக்கி கேட்டார், விஜயகாந்த். விஜயகாந்த்தின் தொண்டர்களில் பலர் உழைக்கும் வர்க்கத்தினர். அதனால், உண்மையை உடைத்துப் பேசிவிடுவார்கள். அன்றும் பேசினார்கள். ‘தனித்துப் போட்டியிடுவோம் தலைவா...’ என்று ஒரே குரலில் உரக்கச் சொன்னார்கள். விஜயகாந்த் ஆடிப்போனது, அவரது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ‘நீங்க சொல்றதை கேட்டுக்கிறேன். ஆனால், நான்தான் முடிவு எடுப்பேன்’ என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். அப்புறம், ’மக்கள் நல நாடகக் கழகம்(!)’ சார்பாக அவர் ராஜா வேஷம் கட்டியதும், அந்த நாடகத்தைப் பார்க்க ஆட்களே வராததும், அனைவரும் அறிந்த கதைதான். எனவே, அதை விரிவாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

Vijayakanth
Vijayakanth

அனைத்துக்கும் மேலே, பகையுணர்ச்சியிலும் பழிதீர்க்கும் மனநிலையிலும் ஆரம்பிக்கப்படும் எதுவுமே, சரியான திசையில் செல்லாது. விஜயகாந்த் ஆரம்பித்த கட்சி அப்படியானது. என்ன சொல்லி சமாளித்தாலும், தி.மு.க-வை வீழ்த்திவிட வேண்டும் என்றே விஜயகாந்த் கட்சி தொடங்கினார். அவரது மண்டபம் இடிக்கப்பட்டதுதான், அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பப்புள்ளி. இங்கே, ’எம்.ஜி.ஆரும் அதைத்தானே செய்தார்’ எனலாம். அது சரிதான். ஆனால், அவரது கட்சியின் இன்றைய நிலையென்ன..? அவரையே மறந்துவிட்ட மனிதர்கள் அல்லவா அங்கு நிறைந்திருக்கிறார்கள்! கொள்கையோ லட்சியமோ அற்ற கட்சிகள் ஈசல்கள் போன்றவை. காலை பிறந்து, மதியம் வரை உற்சாகமாகப் பறந்து, மாலை மடிந்துவிடும். தே.மு.தி.க மாலையில் இருக்கிறது. அ.தி.மு.க மதியத்தில் இருக்கிறது. அவ்வளவுதான் இரண்டு கட்சிக்கும் இடையே இருக்கும் வித்தியாசம்.

கண்டிப்பாக, விஜயகாந்த் கடும் உழைப்பாளி. திரைத்துறையில் நுழையவும் சரி, நுழைந்தபின் உச்சம் தொடவும் சரி, அவர் அனுபவித்த கஷ்டநஷ்டங்கள் ரஜினிக்கு சமானமானவை. ஒரு சம்பவம்... நடிகர்களை அழைத்துக்கொண்டு ஏதோ ஓர் ஊருக்குச் சென்றிருக்கிறார், விஜயகாந்த். அநேகமாக ஏதேனும் கலைநிகழ்ச்சிக்காக இருக்கக்கூடும். அது ரயில் பயணம். இரவு நேரம் நெருங்குகிறது. அப்போதுதான் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யாததை உதவியாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். விஜயகாந்த்துக்கும் செல்கிறது செய்தி. கொஞ்சமும் யோசிக்காமல், வேட்டியை மடித்துக்கட்டி களமிறங்கியிருக்கிறார், விஜயகாந்த். அடுத்து, ஒரு ரயில் நிலையத்தில் வண்டி நிற்கிறது. கிடைத்த நேரத்தில் கில்லியாய் பாய்ந்து, ஒரு ஹோட்டலைக் கண்டுபிடித்துவிடுகிறார். ’கைகளில் சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் அவர் நடந்துவந்த காட்சியை இப்போதும் மறக்க முடியவில்லை’ என்பார், உடன்சென்றவர்கள்.

அடுத்தென்ன? அவரது சொத்துகள் ஏலத்துக்கு வந்திருக்கின்றன. அவரை தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடிய கட்சிகள், இப்போது வேண்டாத சுமையாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்களின் மனத்தில் இருந்தும் அவர் பெயர் மங்கிக்கொண்டிருக்கிறது. ’போனாப் போகுதுடா... நாம போராடுவோம்’ என்று அவருக்கு நம்பிக்கை அளிக்க, நண்பன் இப்ராஹிமும் இப்போது இல்லை. பாண்டியராஜன் அ.தி.மு.க-வில் அடைக்கலமாகி அமைச்சர் பதவியை அடைந்துவிட்டார். பார்த்திபன் தி.மு.க-வுக்கு வந்து, ’நாடாளுமன்றம் இப்படித்தான் இருக்கும்’ என்பதைப் பார்த்துவிட்டார். ஆனால், அவர்களை அரசியலுக்கு அழைத்துவந்து அடையாளம் கொடுத்த விஜயகாந்த், விருகம்பாக்கம் வீட்டில் விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருக்கிறார். விதி, இரக்கமில்லாத விலங்கேதான்!

அவர், மீண்டுவர வேண்டும்... எல்லோரின் வேண்டுதலும் அதுவே!