Published:Updated:

மோடி எல்லைக்குச் சென்றாரா... செட்டப்பா?! - கோபண்ணா vs நாராயணன்

மருத்துவமனையில் மோடி
மருத்துவமனையில் மோடி

பிரதமர் மோடி சிறு வயதில் டீக்கடையில் உட்கார்ந்து தரையைத் துடைப்பது தொடங்கி, காயமடைந்த வீரர்களுடனான ராணுவ மருத்துவமனை சந்திப்புவரை மோடி தொடர்பான புகைப்படங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக 2014-ம் ஆண்டு முன்னிறுத்தப்பட்டார் நரேந்திர மோடி. அப்போது அவர் குஜராத் மாநில முதல்வர். 'இந்தியாவிலேயே வளர்ச்சியடைந்த மாநிலம் என்றால் அது குஜராத்தான், மோடி தலைமையால்தான் அது சாத்தியமானது’ என்றெல்லாம் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது என்றாலும், அடுத்த உயரத்தைப் பிடிக்க அவர் தயாராகியிருந்தார். அப்போதுதான், நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்ற பிரசாரத்தை மோடி முன்னெடுத்தார். அவரது பிரசாரத்தில், “சிறு வயதில் நான் டீக்கடையில் வேலை பார்த்தேன்” என்ற பிரசாரம் நன்கு எடுபட்டது.

சர்ச்சைக்குரிய புகைப்படம்
சர்ச்சைக்குரிய புகைப்படம்

மோடி சிறுவயதாக இருந்தபோது தரையைத் துடைப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியானது. அந்தக் கறுப்புவெள்ளைப் படம் சமூக வலைதளங்களில் வைரலானது. டீக்கடையில் அவர் வேலை செய்தபோது எடுக்கப்பட்ட படம் அது என்று சொல்லப்பட்டது. மோடியைப் புகழ்வதற்கு அவரின் ஆதரவாளர்கள் ஒருபுறம், மோடியை இகழ்வதற்கு அவரின் எதிராளிகள் மறுபுறம் என அந்தப் புகைப்படம் மூலைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில், அந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆராயும் முயற்சியிலும் சிலர் இறங்கினர். அதில், அந்தப் படத்தில் இருப்பது மோடி அல்ல என்றும், அது வேறொரு நபர் என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனாலும்கூட, மோடி வெற்றிபெற்ற பிறகும் அந்தப் படம் பற்றிய சர்ச்சை ஓயவில்லை. அந்தப் படம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் ஒருவர் கேட்டார். அதற்கு, ‘இப்படியொரு படம் பதிவுகளில் இல்லை’ என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் வந்தது. ஆகவே, அது ஒரு ‘ஃபோட்டோஷாப்’ வேலை என்றும், ஒரிஜினல் படத்தில் இருப்பவரின் தலையைத் துண்டித்துவிட்டு, அதில் மோடியின் தலையை ஒட்டியிருக்கிறார்கள் என்று சொல்லி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டது.

எல்லையில் இந்திய ராணுவம்
எல்லையில் இந்திய ராணுவம்

உறக்கத்தில் கிடந்த அந்தப் படம், சமீபத்தில் மீண்டும் தட்டியெழுப்பப்பட்டு இணையத்தில் சுற்றுக்குவிடப்பட்டது. காரணம், சமீபத்தில் இந்தியா – சீனா எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கும் சீனா ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எல்லைப் பகுதிக்கு பிரதமர் மோடி சென்றார். சீனா ராணுவத்தினருடனான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தனர். காயமடைந்த வீரர்களைச் சந்திக்க லே ராணுவ மருத்துவமனைக்கு பிரதமர் சென்றார். அங்கு ராணுவ வீரர்களை அவர் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகின. அந்தப் புகைப்படங்களால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

அந்த மருத்துவமனை மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. வரிசையாகக் கட்டில்களில் ராணுவ வீரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் பிரதமர் நலம் விசாரிக்கிறார். ஒரு ராணுவவீரரின் தோள்பட்டையைத் தொட்டு அவரிடம் நலம் விசாரிப்பது போன்ற ஒரு புகைப்படமும் இருக்கிறது. இந்தப் புகைப்படங்களை வைத்துதான் சர்ச்சை கிளம்பியது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் தத் என்பவர், ‘அது ஒரு மருத்துவமனையைப் போலத் தெரியவில்லை’ என்று சர்ச்சையை ஆரம்பித்தார்.

லே ராணுவ மருத்துவமனையில் மோடி
லே ராணுவ மருத்துவமனையில் மோடி

அவரைத் தொடர்ந்து, ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும் சமூகவலைதள செயற்பாட்டாளர்களும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். ‘அது ஒரு மருத்துவமனை மாதிரியே தெரியவில்லை. அது மருத்துவமனையே அல்ல. அங்கு எந்தவித மருத்துவ உபகரணங்களும் இல்லை. அந்தப் படத்தில் இருப்பது உண்மையான ராணுவ வீரர்கள் அல்ல. அவர்கள் நடிகர்கள். சீன ராணுவத்தினரால் காயமடைந்த வீரர்கள் என்று சொல்கிறார்கள்… ஆனால், அவர்களின் உடலில் எந்தக் காயமும் இல்லை. சொல்லிவைத்த மாதிரி எல்லோரும் ஒரே மாதிரியான நிலையில் அமர்ந்திருக்கிறார்கள்’ என்று விமர்சித்த காங்கிரஸாரும் வலைதளவாசிகளும் மொத்தத்தில் அது ஒரு நாடகம் என்று குற்றம்சாட்டினர்.

கிரிக்கெட் வீரர் தோனி அதே இடத்துக்குச் சென்று ராணுவ வீரர்களுடன் இருப்பதுபோன்ற ஒரு படத்தை வெளியிட்டு, அது ஒரு கூட்ட அரங்கு என்றும், மருத்துவமனை போல அதை மாற்றிவிட்டார்கள் என்றும் சிலர் கூறினர். அங்கு ஒரு காணொலி புரொஜெக்டர் இருப்பதையும் கண்டுபிடித்து சிலர் குறிப்பிட்டனர். கடைசியில் ராணுவத்துக்கே இந்த விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தோனி ராணுவ வீரர்களுடன்
தோனி ராணுவ வீரர்களுடன்

ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர் லே பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டார். இந்த மருத்துவமனை தொடர்பாக ஆதாரமற்ற வகையில், தவறான நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. துணிச்சலான நம் ராணுவ வீரர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பாக சந்தேகங்கள் எழுவது துரதிர்ஷ்டவசமானது. இந்திய ராணுவம் அங்குள்ள வீரர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்துவருகிறது. இது ராணுவ மருத்துவமனையின் ஒரு பகுதிதான். கொரோனா நெருக்கடி காரணமாக, 100 படுக்கை வசதிகளுடன் இந்த அறை தயார்ப்படுத்தப்பட்டது. இந்த அறை முன்பு ஆடியோ வீடியோ அரங்கமாகப் பயன்படுத்தப்பட்டது” என்று கூறப்பட்டது.

2014-ல் பிரதமர் நாற்காலியில் அமர்ந்த பிறகு மோடியின் பல புகைப்படங்கள் சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் உள்ளாகியிருக்கின்றன. அவர் பயணம் செய்யும் பகுதியின் பாரம்பர்ய உடைகளை அவர் அணிந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் தொடர்பாக எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் கருத்துகள் எழுவதுண்டு.

மோடி
மோடி

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ‘அரிதாக நிகழ்ந்த சூரிய கிரகணத்தைத் தம்மால் காண முடியவில்லையே’ என்று வருத்தப்பட்ட புகைப்படம் ஒன்றை தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூலர்ஸ் கண்ணாடி அணிந்திருந்தார். அதை பலர் விமர்சிக்கத் தொடங்கினர். பிரதமர் அணிந்திருந்த கண்ணாடியின் விலை 1,40,000 ரூபாய் என்று கூறினார்கள். ‘ஏழைத்தாயின் மகன் அணிந்திருக்கும் கண்ணாடியின் விலையைப் பார்த்தீர்களா…’ என்று சிலர் விமர்சித்தனர். சிலர், ‘ஒரிஜினல் MAYBACH கண்ணாடியின் விலை ஒன்றரை லட்சம் ரூபாய். ஆனால், நீங்கள் அணிந்திருப்பது போலி. போலியான சீன பொருள்களை பிரதமர் பயன்படுத்துகிறாரா?’ என்று சிலர் விமர்சித்தனர். மோடியின் ஆதரவாளர்கள் #CoolestPM என்று ஹேஷ்டாக் உருவாக்கி டிரெண்டாக்கினார்கள். எப்படியோ, அந்தப் புகைப்படம் ஒரு விவாதத்தை அப்போது கிளப்பியது.

இதேபோல இன்னொரு சர்ச்சை. சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி, அந்த நாட்டு இளவரசருடன் சேர்ந்து எடுத்துக்கொண்டது போன்ற ஒரு புகைப்படம். அதில் அரேபியர்கள் அணியக்கூடிய ‘கெஃபியே’ என்ற தலைப்பாகையை பிரதமர் மோடி அணிந்திருப்பது போல இருந்தது. அது இணையத்தில் வைரலானது. சவுதி அரேபியா இளவரசரை மகிழ்விப்பதற்காக மோடி அந்தத் தலைப்பாகையை அணிந்தார் என்றும், இந்து மதத்தைச் சேர்ந்த மோடி, சவுதி அரேபியாவிலிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்காகவும் அந்தத் தலைப்பாகையை அணிந்தார் என்றும் பலர் பதிவிட்டார்கள். பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ புகைப்படம் வேறு மாதிரியாக இருந்தது. அந்தப் புகைப்படத்தில் பிரதமர் கெஃபியே அணிந்திருக்கவில்லை.

சவுதி அரேபியா இளவரசருடன் மோடி
சவுதி அரேபியா இளவரசருடன் மோடி

இப்படியாக பிரதமர் மோடியின் புகைப்படங்கள் உண்டாக்கும் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு ஊடகப் பிரிவின் தலைவரான கோபண்ணாவிடம் பேசினோம்.

“மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, எல்லையில் காயமடைந்த ராணுவ வீரர்களைச் சந்தித்தார். மோடியைப் போல அல்லாமல், எந்தவித ஆர்ப்பாட்டமும் விளம்பரமும் இல்லாமல் இயல்பாக மன்மோகன் சிங் சென்றுவந்தார். மோடிக்கு முன்பாக இருந்த பிரதமர்கள் இயல்பானவர்களாக இருந்தார்கள். அவர்கள் நல்ல அரசியல் பின்னணி கொண்டவர்களாக இருந்தார்கள். சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு தங்கள் அரசியல் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். எப்போதும் குறுகிய அரசியல் நோக்கத்துடனும் காழ்ப்புணர்வுடனும் அவர்கள் செயல்பட்டதில்லை.

கோபண்ணா
கோபண்ணா

ஜவஹர்லால் நேரு மிக உயர்ந்த தலைவர், நாட்டு மக்களால் நேசிக்கப்பட்டவர். அவர், போர் நிகழ்ந்தபோது போர் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் சென்று ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தினார். ராணுவ வீரர்களுடன் இரண்டரக் கலந்தார். ஆனால், மோடி எல்லையிலிருந்து 250 கி.மீ தொலைவுக்கு இந்தப் பக்கம் ஓர் இடத்தைத் தேர்வுசெய்து சென்றுவந்துள்ளார். மருத்துவமனைக்கு அவர் சென்றதாகக் கூறுவது செட்டப் மாதிரியே தெரிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமோக வெற்றியைப் பெற்ற பிரதமர் மோடி, இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்களின் நன்மதிப்பை இழந்துவருகிறார்” என்றார்.

``எத்தனை விமானம் வேண்டும்... முதல்வரை லிஸ்ட் கொடுக்கச் சொல்லுங்கள்'' - கொதிக்கும் வானதி சீனிவாசன்!

இது குறித்து பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “இது குறித்து மிகத் தெளிவான விளக்க அறிக்கையை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. பிரதமர் மீதான காழ்ப்புணர்வுடன் இத்தகைய தேவையற்ற, மலிவான விமர்சனங்களை சிலர் செய்துகொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்களைப் பற்றி கவலையில்லை.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

ஆனால், பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் இத்தகைய விமர்சனங்களை வைப்பது என்பது அவர்களின் மலிவான அரசியல் தரத்தைக் குறிக்கிறது. பிரதமர் எதற்காக அங்கு சென்றார் என்பதைப் புரிந்துகொண்டு உலகமே பாராட்டுகிறது. ஆனால், இங்கு இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள், குறிப்பாக தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி முன்வைக்கும் விமர்சனங்கள் மிகவும் தரம் தாழ்ந்தவையாக உள்ளன. இதன் மூலம் அவர்களுக்கு தேசபக்தி இல்லை என்பது புலனாகிறது" என்றார்.

எதிர்க்கட்சியினரும் மோடியை விரும்பாதவர்களும்தான் மோடியை விமர்சிக்கிறார்கள் என்று பார்த்தால், இந்துத்வா அமைப்பைச் சேர்ந்த சிலரும் அவரை விமர்சிக்கவே செய்கிறார்கள்.

பிரவீன் தொகாடியா
பிரவீன் தொகாடியா

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச செயல் தலைவரான பிரவீன் தொகாடியாவும், பிரதமர் மோடி சிறு வயதில் தேநீர் விற்றார் என்று சொல்லப்படுவதை விமர்சித்துள்ளார். “பிரதமர் மோடி தொடர்பான இதுபோன்ற கதைகள் அனைத்தும் பொதுமக்களின் இரக்கத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே அடிப்படையாக் கொண்டவை” என்று கூறியிருக்கிறார் பிரவீன் தொகாடியா.

மோடியும் சர்ச்சைகளும் பிரிக்க முடியாதவை போல!

அடுத்த கட்டுரைக்கு