Published:Updated:

பிரதமர் திட்டம்; காங்கிரஸைக் கைப்பற்ற நினைத்து தோல்வியடைந்த பிரசாந்த் கிஷோர்?! - பகீர் பின்னணி

பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸ் கட்சியின் பலவீனங்களாக பிரசாந்த் கிஷோர் சொன்ன விஷயங்கள் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களே ஆமோதிக்கும்படியாகத்தான் இருந்தன. ஆனால், அவற்றைச் சரிசெய்ய கிஷோர் சொன்ன யுக்திகள்தான் காங்கிரஸ் தலைமையையே ஆட்டம் காணவைத்தன.

பிரதமர் திட்டம்; காங்கிரஸைக் கைப்பற்ற நினைத்து தோல்வியடைந்த பிரசாந்த் கிஷோர்?! - பகீர் பின்னணி

காங்கிரஸ் கட்சியின் பலவீனங்களாக பிரசாந்த் கிஷோர் சொன்ன விஷயங்கள் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களே ஆமோதிக்கும்படியாகத்தான் இருந்தன. ஆனால், அவற்றைச் சரிசெய்ய கிஷோர் சொன்ன யுக்திகள்தான் காங்கிரஸ் தலைமையையே ஆட்டம் காணவைத்தன.

Published:Updated:
பிரசாந்த் கிஷோர்

இந்திய அரசியல் அரங்கில் கடந்த சில வாரங்களாக, பெரும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விஷயம் `பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேரவிருக்கிறார்' என்பது! ஆனால் பின்னர், காங்கிரஸ் கட்சியின் அழைப்பை பிரசாந்த் கிஷோர் நிராகரித்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகவே, பரபரப்பு மெல்ல அடங்கிப்போனது. இந்த நிலையில், இந்த நிகழ்வுக்குப் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் விளையாட்டை பிரசாந்த் கிஷோர் விளையாடியிருக்கிறார் என்ற அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி
சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. தொடர் தோல்விகளால் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்துவந்த காங்கிரஸ் ஜி-23 மூத்த தலைவர்கள், கட்சியை மறுசீரமைக்க வேண்டும், கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து நேரு குடும்பம் விலகியிருக்க வேண்டும் என்றெல்லாம் போர்க்கொடி உயர்த்தினர். அதைத் தொடர்ந்து கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டது. தோல்விக்குப் பொறுப்பேற்று ஐந்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் பதவி விலக அறிவுறுத்தப்பட்டனர். மேலும், மீண்டும் சோனியா காந்தியே கட்சியின் தலைவராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ``கட்சியை வலுப்படுத்தத் தேவையான மாற்றங்களை கொண்டுவர, எதிர்காலத் திட்டங்கள், வரவிருக்கும் தேர்தல்கள் குறித்த முக்கிய முடிவுகளை சோனியா காந்தி எடுப்பார்" என காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`கொக்கொக்க கூம்பும் பருவத்து' வந்த கிஷோர்:

இந்த தருணத்துக்காகத்தான் இத்தனை நாள்கள் காத்திருந்தேன் என்பதுபோல, காங்கிரஸ் கூடாரத்துக்குள் மீண்டும் தனது காலடியை எடுத்துவைத்தார் பிரசாந்த் கிஷோர். சோனியா காந்தியை நேரில் சந்திந்து, காங்கிரஸ் கட்சிக்கு என்னெவெல்லாம் பலவீனங்கள், அவற்றை எப்படியெல்லாம் சரிசெய்வது, எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவருவது உள்ளிட்ட தேர்தல் வியூகங்கள், கட்சி மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து முழு டேட்டாவும் தன்னிடம் இருப்பதாகவும், இவற்றைச் செய்தால் 2024-ல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பேசினார். தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த காங்கிரஸ் தலைமைக்கு பிரசாந்தின் வார்த்தைகள் நம்பிக்கையைக் கொடுத்தன. தொடர்ந்து மூன்று நாள்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர்
ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர்

சுமார் 600 பக்க பவர்பாயின்ட் பிரசன்டேஷனை விளக்கிய கிஷோர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பலவீனங்கள் என்னென்ன, 11 மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தவேண்டிய அவசியம் என்ன, எந்தெந்த மாநிலங்களில் தனித்தும், கூட்டணிவைத்தும் தேர்தலில் போட்டியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைத் தெளிவுபடுத்தினார். ஆனால்...

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

கிஷோர் போட்ட கண்டிஷன், கிறங்கிப்போன காங்கிரஸ்:

காங்கிரஸ் கட்சியின் பலவீனங்களாக பிரசாந்த் கிஷோர் சொன்ன விஷயங்கள் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களே ஆமோதிக்கும்படியாகத்தான் இருந்தன. ஆனால், அவற்றைச் சரிசெய்ய கிஷோர் சொன்ன யுக்திகள்தான் காங்கிரஸ் தலைமையையே ஆட்டம் காணவைத்தன என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காங். தலைமைக்கு ஷாக்:

``காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடரலாம். ராகுல் காந்திக்கு நாடாளுமன்றக்குழுத் தலைவர் பொறுப்பைக் கொடுக்கலாம். நேரடி நிர்வாகி போன்று அல்லாமல், கட்சித் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்புச் செயலாளர் போன்ற புதிய பதவியை பிரியங்கா காந்திக்கு உருவாக்கிக் கொடுக்கலாம். ஆனால், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரை முழு நேர செயல் தலைவராக நியமிக்க வேண்டும். அவரிடமே கட்சி விவகாரங்கள், அன்றாடச் செயல்பாடுகளை கவனித்துக்கொள்ளும் சுதந்திரத்தைக் கையளிக்க வேண்டும். அதேபோல, யு.பி.ஏ கூட்டணித் தலைவராக ஒரு மூத்த காங்கிரஸ் தலைவரையும் நியமிக்கலாம். இதன் மூலம் குடும்ப அரசியல் என்ற பிம்பத்தை உடைக்கலாம்" என நேரு குடும்பத்துக்கே ஷாக் கொடுக்கும்படியான பரிந்துரைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கியிருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

தனக்கு அதிக அதிகாரம்:

காங்கிரஸில் நேரு குடும்பத்தின் ஆதிக்கத்தைக் குறைக்க லாகவமாக காய்நகர்த்திய பிரசாந்த் கிஷோர், தனக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான கண்டிஷன்களையும் அடுக்கியிருக்கிறார். அதாவது, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தகவல் தொடர்புகள் அனைத்தும் ஐ-பேக் குழுவிடம்தான் இருக்க வேண்டும். குறிப்பாக, காங்கிரஸ் சார்பில் எந்தத் தொகுதியில், யாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அதிகாரமும் தங்களுக்கு இருக்க வேண்டும். மேலும், எதிர்வரும் குஜராத், ம.பி., இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தைத் தங்களுக்கு வழங்க வேண்டும். மாநிலக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் தனது குழுவே மேற்கொள்ளும். இவற்றையெல்லாம் நிர்வகிக்க, கட்சியில் தனக்குரிய பதவியையும், அதிகாரத்தையும் கொடுத்தால், திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கட்டமைப்புப் பணிகளை முறையாகச் செய்து அனைத்தையும் சாத்தியமாக்குவதாக அடித்துப் பேசியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி

அந்த நிலையில், கிஷோரின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்யவும், பரிந்துரைகள் குறித்த கருத்துகள் சந்தேகங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை சோனியா காந்தி நியமித்தார். இது சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்ட சிறப்புக்குழு, தன் இறுதி அறிக்கையை சோனியா காந்தியிடம் சமர்ப்பித்தது.

அதில், பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைக்கு உடன்படவில்லை; மேலும், பிரசாந்த் கிஷோர் சொல்வதையெல்லாம் செய்தால் காங்கிரஸ் காரிய கமிட்டி, மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஓரங்கட்டப்படும். பிரசாந்த் கிஷோரின் ஆதிக்கமே மேலோங்கும். ஒருவேளை காங். வெற்றிபெற்றால்கூட அது பிரசாந்த் கிஷோருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கப்படும் என அச்சம் தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம், சில தலைவர்கள் கிஷோரின் பரிந்துரைக்கு ஆதரவு நிலைப்பாட்டிலும் இருந்திருக்கின்றனர். மற்ற கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுப்பதை விட்டுவிட்டு, முழுமையாக காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுலுக்குக் கிளம்பிய சந்தேகம்:

பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகளைக் காதுகொடுத்துக் கேட்டும், அவற்றைப் பரிசீலிக்கும் முடிவிலும்கூட சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் இருந்தார்கள். ஆனால், தொடக்கம் முதலே ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைக் கூட்டத்திருந்து ஒதுங்கியே இருந்திருக்கிறார். காரணம், பிரசாந்த் கிஷோரின் பின்னணியில் பா.ஜ.க இருக்கலாம் என்ற சந்தேகமும், பின்னாளில் கிஷோர் கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடலாம் எனவும் முன் யோசனையில் இருந்ததாக ராகுலுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் கசியவிட்டுவருகின்றனர். ராகுல் ஆதரவுத் தலைவர்களும் பிரசாந்த் கிஷோர் மீது நம்பகத்தன்மை இல்லாமல், ஒருவித சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்த்துவருகின்றனர்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இணைய மறுத்தாரா... மறுதலிக்கப்பட்டாரா?

பிரசாந்த் கிஷோர் எதிர்பார்த்ததுபோல காங்கிரஸ் தலைமை முழுமையான ஒத்திசைவு வழங்கவில்லை. காங்கிரஸில் இணைத்துக்கொள்ள விரும்பினாலும், பிரசாந்த் கிஷோருக்கு உயரிய பதவி வழங்குவது, கண்டிஷன்களை ஏற்பது உள்ளிட்டவை குறித்து மூத்த தலைவர்கள் அடங்கிய காரிய கமிட்டியே முடிவெடுக்கும் எனக் கைவிரித்துவிட்டது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே, தெலங்கானா மாநில தேர்தலில் சந்திரசேகர ராவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுப்பதற்கான ஒப்பந்தத்தை, தான் முன்னர் தலைமை வகித்த ஐ பேக் நிறுவனத்துக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். இதனால், தெலங்கானா மாநில காங்கிரஸ் உட்பட தேசிய காங்கிரஸ் தலைவர்களும் பிரசாந்த் கிஷோருக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றனர். இந்த அதிருப்தியில்தான் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையும் முடிவிலிருந்து பின்வாங்கியிருக்கிறார்.

`நன்றி' சொல்லி எஸ்கேப் ஆன காங்; சமாளித்த கிஷோர்:

அந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா ``பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்துவிட்டார். இருந்தாலும், அவர் கட்சிக்குக் கொடுத்த ஆலோசனைகளுக்காக மிகுந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்!" என மேலோட்டமாகக் கூறினார்.

ரன்தீப் சுர்ஜிவாலா
ரன்தீப் சுர்ஜிவாலா
Twitter

அதன் பிறகு கட்சியில் இணையாதது குறித்து விளக்கமளித்த பிரசாந்த் கிஷோர், ``காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயலாற்ற அந்தக் கட்சி கொடுத்த ஆஃபரை நான் நிராகரித்துவிட்டேன். காங்கிரஸில் நான் இணைவதைக்காட்டிலும், அந்தக் கட்சி தன்னுடைய கட்டமைப்பு பிரச்னைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது அவசியம். காங்கிரஸுக்கு தலைமையும், ஒருங்கிணைப்பும்தான் தேவை" என பதிலளித்துச் சமாளித்தார்.

நிதிஷ் - பிரசாந்த் கிஷோர்
நிதிஷ் - பிரசாந்த் கிஷோர்
twitter

பி.கே-வின் பி.எம் ஆசை:

முன்பு காங்கிரஸ் கட்சியையும், தலைமையையும் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்த பிரசாந்த் கிஷோர், திடீரென காங்கிரஸ் கட்சியின் மீது அதீத அக்கறைகொண்டு செயல்படுவதற்குக் காரணம், பிரசாந்த் கிஷோரின் பிரதமர் ஆசைதான் என அரசியல் நோக்கர்கள் சிலர் பகீர் கிளப்புகின்றனர். ``ஏற்கெனவே, கடந்த 2015-ம் ஆண்டு, பீகார் சட்டமன்றத் தேர்தலில், பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுத்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றிபெற்றது. அதன் பிறகு, பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து துணைத் தலைவரானார். ஆனால், கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கிஷோர் கட்சியிலிருந்து வெளியேறினார். இதற்குக் காரணம், கட்சியின் தலைமைப் பொறுப்பைக் குறிவைத்து பிரசாந்த் கிஷோர் செயல்பட்டதுதான் எனக் கூறப்படுகிறது.

அதேபோல, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுத்துக்கொண்டே, மம்தாவுக்கு எதிராக, மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜியை வளர்த்துவிட்டு, கட்சியை அவரின் அதிகாரத்துக்குள் கொண்டுவர முயன்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பிரசாந்த் கிஷோர் - மம்தா
பிரசாந்த் கிஷோர் - மம்தா

தொடர்ந்து பஞ்சாப்பிலும் காங்கிரஸ் கட்சியைச் சிதைக்க, சித்துவைவைத்து சித்து விளையாட்டு காட்டிய பின்னணியிலும் பிரசாந்த் கிஷோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டே, காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான முயற்சிகளில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டார். ஆனால், அதிருப்தி காங்கிரஸ் தலைவர்களின் ஜி-23 குழுவின் எதிர்ப்பால் அந்த முயற்சி கைகூடாமல் போனது.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் எதிர்பார்த்தபடியே காங்கிரஸ் கட்சி ஐந்து மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்தது. இந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பிரசாந்த் கிஷோர், மீண்டும் காங்கிரஸை நோக்கி அடியெடுத்து வைக்க முயன்றிருக்கிறார். அவரின் நோக்கம் காங்கிரஸ் கட்சியை நேரு குடும்பத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்; தனது ஆதிக்கத்தின்கீழ் கட்சியைக் கொண்டுவந்து, காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக மாற வேண்டும். ஏற்கெனவே மாநில அளவில் பலம் வாய்ந்த கட்சிகளாக இருக்கும் திமுக, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சிகளுக்குப் பணியாற்றியும்/பணியாற்றவும் இருப்பதால், அவர்களின் உதவியுடன், காங்கிரஸையும் ஒரே புள்ளியில் இணைத்துவிட்டால் தனது கனவு சாத்தியமே எனத் திட்டமிட்டார் பி.கே என பகீர் செய்திகள் உலாவருகின்றன. காங்கிரஸை இணைக்க முடியாத சூழலில் பி.கே-வின் அடுத்த திட்டம் என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism