Published:Updated:

``தி.மு.க நிர்வாகிகளுக்கு அடுத்த அசைன்மென்ட்'' - ஐபேக் ஐடியாவில் அதிரடித் திட்டங்கள்!

தி.மு.க தலைமை அலுவலகம்-அண்ணா அறிவாலயம்
தி.மு.க தலைமை அலுவலகம்-அண்ணா அறிவாலயம்

ஐபேக் நிறுவனம் வகுத்துள்ள இந்த மாஸ்டர் திட்டத்துக்கு தி.மு.க-வினர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்கிற கேள்வியும் இப்போதே எழுந்துள்ளது. 'ஒன்றிணைவோம் வா' திட்டத்திலேயே ஆட்களைச் சேர்க்கவும், செலவு செய்யவும் நிர்வாகிகள் படாதபாடுபட்டது, தலைமைக்குத் தெரியும்.

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு ஐபேக் நிறுவனத்தின் ஆலோசனையில் சில சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளது தி.மு.க தலைமை. அடுத்த சில வாரங்களுக்குள் அனைத்து நிர்வாகிகளும் இந்த அறிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு குறிப்பிட்டுள்ள விவரங்களைத் தி.மு.க தலைமைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும் கறார் காட்டியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க-வைத் தயார் செய்யும் விதமாக இந்த மாஸ்டர் திட்டத்தைத் தமிழகம் முழுவதும் செயல்படுத்திட முடிவு செய்துள்ளது ஐபேக் நிறுவனம்.

ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்
ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்

தி.மு.க-வின் தேர்தல் வியூகத்தை வடிவமைக்கப் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கடந்த ஜனவரி மாதம் முறைப்படி நியமிக்கப்பட்டார். அவரது ஐபேக் நிறுவனம் தி.மு.க-வின் தேர்தல் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பும் வெளியானது. அதற்குக் கட்சியினர் மத்தியில் ஆரம்பத்தில் சலசலப்பு ஏற்பட்டாலும் அதைத் தலைமைக் கழகம் சரிகட்டிவிட்டது. அதன் தொடர்ச்சியாக மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் தி.மு.க சார்பில் `ஒன்றிணைவோம் வா' என்கிற திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டம் ஐபேக் நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்தத் திட்டமாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க நிர்வாகிகளின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் தொடங்கி தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் கலந்துரையாடுவது வரை ஐந்து அம்ச திட்டம், ஒன்றிணைவோம் வா திட்டத்தில் இடம்பெற்றது.

இந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மேலும், சில திட்டங்களை ஐபேக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்தத் திட்டங்கள் குறித்த சுற்றறிக்கைகள் மாவட்ட வாரியாக தி.மு.க நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை எல்லாம் தேர்தலை மையப்படுத்திய மாஸ்டர் திட்டங்களாக உள்ளன. அந்தச் சுற்றறிக்கையின் நகல் நம் கைக்கும் கிடைத்துள்ளது. முதலில் கட்சி பிரதிநிதிகள் குறித்த தகவல்களைச் சேகரித்தல் என்று ஒரு சுற்றறிக்கை உள்ளது.

அதில், "சமூகத்தின் முக்கிய தூண்களாகச் செயல்பட்டு நன்மதிப்பைப் பெற்றுள்ள முக்கிய தி.மு.க நிர்வாகிகள், சக குடிமக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள கட்சி சாரா பிரமுகர்களை ஒன்றிணைத்து கூட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது கட்சித் தலைமை. அதற்கு மாவட்ட வாரியாகக் கட்சியின் அனைத்துப் பொறுப்பாளர்கள் விவரங்களையும் கட்சித் தலைமைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

சுற்றறிக்கையில் உள்ள படிவம்
சுற்றறிக்கையில் உள்ள படிவம்

ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் வார்டுகளிலிருந்தும் கட்சியில் எந்தவிதப் பொறுப்பிலும் இல்லாமல் உள்ள புகழ்பெற்ற 10 - 15 கட்சி உறுப்பினர்களை அடையாளம் கண்டு பட்டியல் இட வேண்டும். அவர்களுடன் தலைவர் அவ்வப்போது ஆலோசனை நடத்தும் வாய்ப்புள்ளதால் அவர்கள் பற்றிய விவரங்களைக் கட்சித் தலைமைக்கு முழுமையாக அனுப்ப வேண்டும்” என்று குறிப்பிட்டு அதற்குத் தனி பட்டியல் ஒன்றையும் இணைத்துள்ளார்கள். தமிழக மக்களின் நலன்காக்க மீண்டும் ஒன்றிணைவோம் என்று குறிப்பிட்டு அந்த சுற்றறிக்கை முடிந்துள்ளது.

``பொதுநலன், சமூக நலன் விரும்பும் ஆளுமையாளர்களை அடையாளம் காண்பதற்கான சுற்றறிக்கை” என்று மற்றொரு அறிக்கையையும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ``ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தத்தம் துறையில் பிரபலமான 400 முதல் 500 முன்மாதிரி பிரதிநிதிகளைக் கண்டறிய வேண்டும். மருத்துவர்கள், தொழிலதிபர்கள், மளிகைக் கடை உரிமையாளர்கள், கல்வி மையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற அரசின் மூத்த அதிகாரிகள், சமூகப் பணி மற்றும் தொண்டு நிறுவனத்தினர், ஊடகங்கள் மற்றும் பத்திரிகை, கலைத்துறையினர் என ஒவ்வொரு பஞ்சாயத்து, நகர, மாநகரம், எனப் பட்டியல் தயார் செய்ய வேண்டும். அந்த பிரபலங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 20 நபர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லவர்களாக இருக்க வேண்டும்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்
ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைப் பிடித்திருக்கலாம்!

ஏனென்றால் தேர்ந்தெடுக்கப்படும் இதுபோன்ற முக்கிய நபர்களோடு, தமிழகத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்த அவ்வப்போது தலைவர் ஆலோசனை நடத்துவார். எனவே, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் மேற்குறிப்பிட்ட சரியான பட்டியலைத் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் அவர்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து தலைமைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று தலைமை கழகம் அறிவுறுத்துகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது இரண்டாவது சுற்றறிக்கை.

மூன்றாவதாக, ``கட்சிகள் சாராத ஆளுமையாளர்களைச் சேகரித்தல் தொடர்பாக அறிக்கை” அனுப்பியுள்ளனர். இந்த அறிக்கையில், “தி.மு.க நடத்திய ஒன்றிணைவோம் வா திட்டம் நோய்த் தொற்று அதிகரித்த நேரத்திலும் மக்கள் பணியில் முன்னின்று களப்பணியாற்றியதை உணர்த்தியது. தமிழகம் முழுவதும் நிர்வாகம், மருத்துவம், வணிகம், கலை வேளாண் உள்ளிட்ட துறைகளில் தனித்துவம் வாய்ந்தவர்களைச் சேகரிக்க வேண்டும். மாநில அளவில் 5,000 பேர் கொண்ட பட்டியல் முதலில் உருவாக்கப்படும். அதைத் தலைமைக் கழகம் இருநாள்களுக்கு ஒருமுறை கழக நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொள்ளும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் பகிரப்படும் பெயர் பட்டியலைச் சரிபார்த்து அது தொடர்பான அறிக்கையைத் தலைமைக்குத் தாமதமின்றி அனுப்பிவைக்க வேண்டும். அந்தப் பட்டியலில் தி.மு.க-வை எதிர்ப்பவர் மற்றும் அவமதிப்பவர்கள் இருந்தால் அந்தப் பெயர்களை நீக்கவும் பரிந்துரை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த 5,000 பேர் கொண்ட பட்டியலை ஐபேக் நிறுவனத்தின் ஊழியர்கள் தமிழகம் முழுவதும் சென்று சர்வே செய்து தயார் செய்துள்ளார்கள். ஒருவேளை ஐபேக் நிறுவனத்தினர், தி.மு.க- வுக்கு எதிரானவர்களை இந்தப் பட்டியலில் சேர்த்திருந்தால் அவர்களை அடையாளம் காணவே இந்த அறிக்கையின் வாயிலாக ஆலோசனை கொடுத்துள்ளார்கள்.

ஒன்றிணைவோம் வா
ஒன்றிணைவோம் வா

இந்தச் சுற்றறிக்கையோடு தி.மு.க தலைமைக் கழகத்தின் கடிதத்தையும் இணைத்து அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் ''கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கழகத் தலைவர் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் இத்தகைய சிறப்புமிக்க பணி வெற்றியடையும் வகையில் இந்த விவரங்களை எல்லாம் கொடுத்துள்ள அட்டவணைப்பட்டியலில் பூர்த்தி செய்து தலைமை கழகத்தின் மின்னஞ்சலுக்கு விரைந்து அனுப்ப வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த சுற்றறிக்கைகள் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறதாம். விரைவில் இந்தப் பட்டியலைத் தயார் செய்து அனுப்பிய பிறகு அடுத்தகட்டமான ஆலோசனைகள் மாவட்ட வாரியாக நடைபெறும்.

பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டல்... சித்தாந்தச் சிக்கலில் தி.மு.க!

ஏற்கெனவே ஒன்றிணைவோம் வா திட்டத்தில் மாவட்ட வாரியாக ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார். அதற்குள் அடுத்த பட்டியல் அடுத்த ஆலோசனை என்று தலைமை கழகத்திலிருந்து வரும் அறிவிப்புகளால் ஆட்டம் கண்டுள்ளனர் தி.மு.க-வினர். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அப்போது தி.மு.க-வுக்குத் தேர்தல் வியூகம் வகுத்த ஓ.எம்.ஜி குழு நமக்கு நாமே என்கிற பெயரில் ஸ்டாலினை வைத்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, ஆலோசனைக்கூட்டங்களும் நடத்தியது. அதே முறையை இப்போது வேறு மாதிரியாக அறிவித்துள்ளது ஐ.பேக் நிறுவனம். ஆனால் இது ஒர்க் அவுட்டாகுமா என்பது தேர்தல் முடிவில்தானே தெரியும் என்று உச் கொட்டுகிறார் தென் மாவட்ட நிர்வாகி ஒருவர்.

ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டம்
ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டம்

ஐபேக் நிறுவனம் வகுத்துள்ள இந்த மாஸ்டர் திட்டத்துக்குக் கட்சியினர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்கிற கேள்வியும் இப்போதே எழுந்துள்ளது. ஒன்றிணைவோம் வா திட்டத்திலேயே ஆட்களைச் சேர்க்கப் படாத பாடுபட்ட கதையை இப்போதும் சொல்லி நொந்துபோகிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.ஐ.பேக் ஐடியா என்ன மாற்றத்தை தி.மு.க-வுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு