Published:Updated:

சரத் பவாரின் வெற்றிக்குப் பின்னணியில் தமிழர்! யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

மகாராஷ்டிரத்தில் இன்று இரண்டாவது பெரிய கட்சியாக தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவாகியிருக்கிறது என்றால் அதற்கு இந்த பிராண்டிங்கும் ஒரு காரணம்.

சரத்பவார் மற்றும் ரோகித் பவார்
சரத்பவார் மற்றும் ரோகித் பவார்

மகாராஷ்டிரத்தில் 1990-களில் சிவசனோவின் கையைப் பிடித்துக்கொண்டு குட்டிப் பையன்போல பாரதிய ஜனதா நடந்து கொண்டிருந்தது. சிவசேனா கொடுக்கும் தொகுதிகளைப் பெற்றுக்கொள்வதும், வெற்றி பெற்றதும் அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பதுதான் மகராஷ்டிரத்தில் பாரதிய ஜனதாவின் வேலை. 1995 முதல் 1999-ம் ஆண்டு வரை சிவசேனா மகாராஷ்டிரத்தில் ஆட்சி புரிந்தது. பாரதிய ஜனதா அதனுடன் ஒட்டிக் கொண்டிருந்தது. இரு கட்சிகளுமே இந்துத்துவத்தை பின்னணியாகக் கொண்டவை என்பதால் ஓரளவுக்கு ஒத்துப்போயின.

அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே
அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே
ஆட்டம்காட்டும் சிவசேனா; ஆடிப்போன பி.ஜே.பி!- மகாராஷ்டிராவில் பலிக்காத அமித் ஷா வியூகம்

காலம் ஓடியது... யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வருமல்லவா... ஒரு கட்டத்தில் பாரதிய ஜனதா பிக் பிரதர் ஆனது. சிவசேனா தேய்ந்து போனது. பாரதிய ஜனதா கட்சி கொடுக்கும் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு மகாராஷ்டிரத்தில் சிவசேனா போட்டிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி மகாராஷ்டிரத்தில் முதன்முறையாக ஆட்சியில் அமர்ந்தது. பாரதிய ஜனதாவுக்கு சிவசேனா ஆதரவு கொடுத்தாலும், அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. அதிகாரத்திலிருந்து 19 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சிவசேனாவும் இப்போது பதவி சுகத்துக்கு ஆசைப்படுகிறது. இதனால், பாரதிய ஜனதா கட்சியுடன் இப்போது முரண்டு பிடிக்கிறது. `சரி... ஜெயிச்சுட்டா ஆட்சில சம பங்கு' என்று சிவசேனாவை பா.ஜ.க சமாதானப்படுத்தியது. மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகளும் வெளிவந்தன. பாரதிய ஜனதா கட்சி 105 இடங்களிலும் சிவசேனா 54 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 56 இடங்களும் கிடைத்தன. மற்றவை உதிரி கட்சிகளுக்கு.

தேர்தல் பிரசாரத்தில் ரோகித் பவார்
தேர்தல் பிரசாரத்தில் ரோகித் பவார்

பேசியபடி, அமைச்சரவையில் 50 சதவிகித பங்கு தர வேண்டுமென்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வெற்றி பெற்றதும் பாரதிய ஜனதா தலைமைக்கு நினைவுபடுத்தினார். பாரதிய ஜனதா உறுதிமொழியை மறந்து, 30 சதவிகிதம் 40 சதவிகிதம் என்று பேரம் பேசியது. ஆனால், சிவசேனாவோ முதல் இரண்டரை ஆண்டுகள் பா.ஜ.க. அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஆதித்யா தாக்கரேதான் முதல்வராக இருக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தது. அதோடு, எழுத்துபூர்வமாகவும் உறுதிமொழி கேட்டது. சிவசேனா படியாத காரணத்தினால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப் போவதாக பாரதிய ஜனதா மிரட்டியது. பதிலுக்கு , `குடியரசுத் தலைவரை உங்கள் பாக்கெட்டிலா வைத்துள்ளீர்கள்' என்று ஆவேசமாக கேட்டார் உத்தவ் தாக்கரே.

தங்களுக்கு சிவசேனா துரோகம் இழைத்ததாக பா.ஜ.க குமுறியது. பாரதிய ஜனதா கட்சியை விட்டால் மகாராஷ்டிரத்தில் இப்போதைக்கு பெரிய கட்சி சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சியுடன் கைகோப்பதில் சிவசேனாவுக்கு பல சங்கடங்கள் இருக்கின்றன. ஆனால், சரத்பவாவருடன் சமாதானமாகப் போவதில் சிவசனோவுக்கு பிரச்னை இருக்கப் போவதில்லை. பாரதிய ஜனதாவும் சரத்பவாரிடம் ஆதரவு கேட்கத் தயங்காது. ஆதரவு அளிப்பதும் அளிக்காததும் அவர் எடுக்கும் முடிவாக இருக்கும். எனவே, இப்போதைக்கு மகாராஷ்டிரத்தில் `கிங் மேக்கர்' சரத்பவார்தான். சரத்பவாருக்கு மகராஷ்டிரத்தில் அமோகமாக மக்கள் ஆதரவு கூடியுள்ளது. இதற்குப் பின்னணியில் சரத் பவாருக்காக செய்யப்பட்ட பிராண்டிங் வேலைகளும் இருக்கின்றன. அந்த பிராண்டிங்கின் உச்சக்கட்டமாக இரு விஷயங்கள் நடந்தன.

மழையில் நனைந்தபடி பேசும் சரத்வபார்
மழையில் நனைந்தபடி பேசும் சரத்வபார்
`சரத் பவார் மற்றும் ஆளுநரை சந்தித்த சிவசேனா!’ - மகாராஷ்டிரா முதல்வர் ரேஸில் முந்துவது யார்?

தேர்தல் நெருங்கும் சமயத்தில், கடந்த செப்டம்பர் 26-ம் தேதி, மகாராஷ்டிர மாநிலக் கூட்டுறவு வங்கி ஊழலில் விசாரணைக்கு வருமாறு சரத்பவாருக்கு அமலாக்கத்துறை அழைப்பு விடுத்தது. சம்மன் எதுவும் அனுப்பாத நிலையில், அமலாக்கத்துறை ஆஜராகச் சொன்னது சரத் பவாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தேர்தல் நேரத்தில் தன்னுடைய இமேஜை பாதிக்கும் வகையில், அமலாக்கத்துறை செயல்படுவதாக சரத்பவார் கொந்தளித்தார். தேர்தல் பிரசாரத்துக்காக பூனாவில் இருந்த சரத் பவார் உடனடியாக, ``அடுத்த நாளே மும்பை வந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறேன்" என்று முழங்கினார். சரத் பவாரின் இந்த முழக்கத்தை மகாராஷ்டிர மக்கள் வெகுவாக ரசித்தனர்.

பின்னர், மும்பை கமிஷனரே இந்த விஷயத்தில் தலையிட்டு, ``இந்த சமயத்தில் நீங்கள் வந்தால், மும்பையில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடும்" என்று கேட்டுக்கொண்டதையடுத்து, அமலாக்கத்துறை முன் ஆஜராவதை சரத்பவார் தவிர்த்தார். இரண்டாவதாக, தேர்தல் பிரசாரத்தின் கடைசிக் கட்டத்தில் சதாரா மக்களவை இடைத் தேர்தலில் கொட்டிய மழையில், நனைந்துகொண்டே சரத்பவார் நிகழ்த்திய உரை மக்கள் மனதில் பெரும் மாற்றத்தையே உண்டாக்கியது.

ரோகித் பவார்
ரோகித் பவார்

வழக்கமாக தலைவர்கள் பேசும் நேரத்தில் மழை பெய்தால், யாராவது தலைவருக்குக் குடைபிடித்துக்கொண்டு நிற்பார்கள். இங்கே, சரத் பவாரும் மக்களோடு மக்களாக மழையில் நனைந்தபடி பேச, இணையத்தில் அந்தப் புகைப்படம் வைரலானது. தேர்தல் நேரத்தில் இந்தப் புகைப்படம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரத்தில் இன்று இரண்டாவது பெரிய கட்சியாக தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவாக்கியிருக்கிறது என்றால் அதற்கு இந்த பிராண்டிங்கும் ஒரு காரணம்.

`தாளாற்றித் தந்த பொருளெல்லாம்...!' - திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பின்னணியில் இருந்து பிராண்டிங் வேலையை சிறப்பாகச் செய்தவர் ஒரு தமிழர். சென்னையைச் சேர்ந்த அவரின் பெயர் ஜான் ஆரோக்கிய சாமி. அதேவேளையில், சிவசேனாவுக்கு இந்த பிராண்டிங் வேலையை பார்த்தது பிரபல பிரசாந்த் கிஷோர். மகாராஷ்டிரத்தில் பிரசாந்த் கிஷோரின் உத்தி பலிக்கவில்லை. தமிழரான ஜான் ஆரோக்கியசாமி செய்த வேலைகளுக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. மகாராஷ்டிரத்தில் வாரிசு அரசியல் உச்சத்தை அடைந்துள்ளது. பால்தாக்கரே குடும்பத்திலிருந்து ஆதித்யா தாக்கரே சரத் பவார் குடும்பத்திலிருந்து ரோகித் பவார், காங்கிரஸ் கட்சியின் சுஷில்குமார் ஷிண்டேவின் மகள் பிரீனிதி ஆகியோர் வாரிசுகளில் முக்கியமானவர்கள்.

ஜான் ஆரோக்கியசாமி
ஜான் ஆரோக்கியசாமி

இதில், பிரீனிதி ஏற்கெனவே எம்.எல்.ஏ-யாக இருந்தவர். இதில் 34 வயதே நிரம்பிய ரோகித் தோற்கடித்தது பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவரும் அந்த மாநில அமைச்சருமான ராம் ஷிண்டேவை என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் மற்றும் பிரீனிதிக்கு பிராண்ட் வேலையைப் பார்த்தவர் ஜான் ஆரோக்கியசாமி. கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுடன் ஒப்பிட்டு `ஹிட்மேன் ரோகித் பவார்' என்று விளம்பரப்படுத்த மக்களிடம் நன்றாக ஒர்க்அவுட் ஆனது. கிராமப்புறங்களில் இந்த விளம்பர உத்தி நல்ல பலனைக் கொடுத்தது. விளைவாக, ரோகித், கர்ஜத் ஜாம்கெத் தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். பிரீனிதியும் சோலாப்பூர் தொகுதியில் இருந்து மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். பிரீனிதியை ஜெயலலிதா போன்று `அம்மா' என்ற முத்திரையுடன் ஜான் ஆரோக்கியசாமி டீம் பிரபலப்படுத்தியது. பெண்கள் மத்தியில் அந்த உத்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. மகராஷ்டிரத்தில் ஜான் ஆரோக்கியசாமி டீமுக்கு கிடைத்த வெற்றி அவரின் பெயரை வட இந்தியத் தலைவர்களிடத்திலும் கொண்டு சேர்த்துள்ளதாம்!