Published:Updated:

`பேப்பர் கட்டிங் சொல்லும் செய்தி; ப்ரைம் டார்கெட் யார்?!'- மநீம அலுவலகத்தில் ஒரு `ஸ்பாட் விசிட்'

ம.நீ.ம அலுவலகத்தில் கமல்ஹாசன்
ம.நீ.ம அலுவலகத்தில் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் என்னென்ன பணிகள் நடக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள ஒரு ஸ்பாட் விசிட் அடித்தோம்.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க-வும் தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்தும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்தத் தேர்தல்களில் பங்கேற்காத கமலின் மக்கள் நீதி மய்யம், 2021 சட்டப் பேரவை தேர்தல் பணிகளைத் தொடங்கவுள்ளது.

கமல்
கமல்

பிப்ரவரி மாதம் 21-ம் தேதி கட்சியின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. அன்று 2021 தேர்தலுக்கான சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. அதாவது அன்றைய தினமே கட்சியின் தேர்தல் குழு அறிவிக்கப்படவுள்ளது. மேலும் அன்றுமுதலே அடுத்த ஆண்டு தேர்தலுக்கான விருப்பமனுவும் பெறப்படுகிறது.

`தயாராகும் வேட்பாளர் பட்டியல்; 55 வாரப் பயணம்!' - மக்கள் நீதி மய்யத்தின் பிப்ரவரி பிளான்

விருப்பமனு பெறப்பட்ட உடனே வேட்பாளர் தேர்வு என 20-20 கிரிக்கெட் போட்டியின் வேகத்தில் பறக்கிறது மநீம -இன் 2021 பணிகள். தேர்தலுக்கு ஒரு வருடத்துக்கு முன்னதாகவே வேட்பாளர் தேர்வு செய்வது ஏன்? இப்போதே வேட்பாளர் தேர்வு என்றால், நாடாளுமன்றத் தேர்தலைப் போல கூட்டணி இல்லாமல் களம் காணுமா? தேவைப்பட்டால் கமலும் ரஜினியும் இணைவார்கள் போன்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளியா எனப் பல கேள்விகள் எழுந்தன. சரி, மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் என்னென்ன பணிகள் நடக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள ஒரு ஸ்பாட் விசிட் அடித்தோம்.

மநீம அலுவலகம்
மநீம அலுவலகம்

மக்கள் நீதி மய்யம் கொடிக் கம்பம். அதைத் தொட்டு பெரிய கேட். செக்யூரிட்டிகளிடம் விஷயத்தைச் சொல்லி என்டரி போட்டு உள்ளே சென்றோம். முதலில் ஒரு வரவேற்பறை. அதில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அங்கிருந்த சுவர்கள், பின்னணியில் சட்டப்பேரவையுடன் கூட கமல் பட காலண்டர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மற்றொரு பக்கத்தில் சில பேப்பர் கட்டிங்கள் `பின்' செய்யப்பட்டிருக்க, அந்தப் பக்கம் திரும்பினோம். ஆம் ஆத்மியின் எழுச்சி, ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி, மாநிலங்களை இழக்கும் பா.ஜ.க, ஜி.டி.பியின் புள்ளி விவரங்கள் எனப் பலவிதமான பேப்பர் கட்டிங். கட்சியின் சில நிர்வாகிகள் அந்த வரவேற்பறையிலிருந்து கூட விவாதிப்பார்கள் என்பதை பின்னர் தெரிந்து கொண்டோம்.

கொஞ்ச நேரத்தில் அங்கு கட்சியின் சில நிர்வாகிகள் வரத் தொடங்கினார்கள். வெளியூரிலிருந்தும் சிலர் வந்திருந்தனர். அவர்களில் சிலர் பூங்கொத்துடன் வந்திருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட இளைஞர் அணிப் பொறுப்பாளர்கள் என்பதும், நிர்வாகிகளைச் சந்தித்து வாழ்த்துப்பெற வந்ததாகவும் தெரிவித்தனர். அங்கிருந்தபோது கட்சி அலுவலகத்தில் இருக்கும் உணர்வே இல்லை. காரணம் மற்ற கட்சி அலுவலகங்கள் போன்று யாரும் அங்கு கரை வேட்டியில் இல்லை. பெரும்பாலும் வெள்ளைச் சட்டை, கறுப்பு பேன்ட் அல்லது கறுப்புச் சட்டை. மற்றும் சிலர் தினசரி அலுவலகப் பணிக்குச் செல்வது போல் வந்திருந்தனர். கேட்டால், `இங்கு உடைக் கட்டுப்பாடு என்பதே கிடையாது' என்றனர்.

நிர்வாகிகளுடன் கமல்
நிர்வாகிகளுடன் கமல்

கட்சிக்காக உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதைப் புரிந்துகொள்ள முடிந்தது. வரும் 23 -ம் தேதியை இலக்காக வைத்து உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்சியில் இருக்கும் நிர்வாகி ஒருவர் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அவர்களில் கட்சிக்காகப் பணியாற்றும் சிலரை அடையாளம் கண்டு அவர்கள் குறித்து உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தில் `ஸ்பெஷலாக' தெரிவிக்க வேண்டும் எனவும் பேசிக்கொண்டார்கள். இது எதற்கு என விசாரித்தபோது, பின்நாள்களில் பொறுப்பாளர்களை நியமிக்கும்போது பணிசெய்த உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

ஒருகட்சி செய்த தவறை மற்றொரு கட்சி சரி செய்துவிடும் என்றால், மூன்றாவதாக எங்களைப் போன்ற கட்சிகள் வரவேண்டியதே இல்லையே..!
கவிஞர் சினேகன்

முன்னதாகவே வேட்பாளர் தேர்வு செய்யப்படுவது குறித்து விசாரித்தோம். ``எங்கள் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளைப் போன்று மக்களுக்குத் தெரிந்த முகம் கிடையாது. அதனால் முன்னதாகவே வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டால் அவர்களால் கட்டாயம் மக்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் கூட்டணி ஏற்பட்டாலும் எங்கள் வேட்பாளர்கள் விட்டுக் கொடுப்பார்கள்" என்கின்றனர் நிர்வாகிகள். தேவைப்பட்டால் ரஜினியுடன் கூட்டணி வைக்கலாம் என்ற பேச்சு தொடர்பாக விசாரித்தபோது, ``ரஜினி - கமலைப் பொறுத்தவரையில், அவர்களுக்கிடையே பேச வேறு மூன்றாவது நபர் தேவையில்லை. அவர்களே அமர்ந்து பேசுவார்கள். ரசிகர்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் இருக்கும். அப்படி ஒன்று நடந்தால் யார் முதல்வர் என்ற கேள்விகளுக்கு அவர்கள் இருவருமே பேசி ஒரு முடிவோடுதான் மக்களைச் சந்திப்பார்கள். ஆனால், அதுதான் நடக்கும் எனச் சொல்ல முடியாது. நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றுதான் பணிகள் நடைபெறுகின்றன" என்றனர்.

ரஜினி, கமல்
ரஜினி, கமல்

முதல் கட்டடத்தின் முதல் மாடியில்தான் ம.நீ.ம தலைவர் கமலின் அறை இருக்கிறது. முதல் கட்டடத்துக்குப் பக்கத்திலே ஒரு கட்டடத்தில் வார் ரூம் என்ற அறை இருக்கிறது. சமூக வலைதளம், முக்கிய முடிவுகள் உள்ளிட்ட பல வேலைகள் இங்கு நடக்கின்றன. வார் ரூம் என்பது தற்போது அனைத்துக் கட்சிகளிலும் இருக்கும் இரு அமைப்புதான். இதில், 10 முதல் 15 நபர்கள் வரை வேலை பார்க்கிறார்கள். மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் பணியும் தலைமை அலுவலகம் மூலம் செய்யப்படுகிறது.

"கணக்குப்பிள்ளை மாதிரியான ஒருவர்தான் பிரசாந்த் கிஷோர்!" - கமல் சிறப்புப் பேட்டி

``தொண்டர்களின் பணியை எளிமைப்படுத்த 4 தலைமை அலுவலகம் என்பதை கமல் அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி, சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் தலைமை அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் மதுரையிலும் அமைக்கப்படும். இதன் மூலம் தொண்டர்கள் எதற்கெடுத்தாலும் சென்னை வர வேண்டி இருக்காது" என்றனர் அங்கிருந்த நிர்வாகிகள் சிலர். மேலும், தேர்தல் பணிகள் தொடங்கிய பின்னர் எல்லா மாதமும் கமல்ஹாசன் இந்த 4 தலைமை அலுவலகங்களிலும் சில நாள்கள் பணியாற்றுவார் என்ற தகவலும் இருக்கிறது.

`தேர்தல் வித்தகர் பிரசாந்தை ஏன் நீக்கினார் கமல்?!'- மக்கள் நீதி மய்யம் சொல்லும் அதிர்ச்சிக் கணக்கு

அலுவலகத்தைச் சுற்றி வரும்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் கவிஞர் சினேகனைச் சந்தித்தோம். அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். சமீபத்தில் பட்ஜெட் தொடர்பான கமல்ஹாசனின் ட்வீட்டில் தமிழக அரசின் கடன் உயர்ந்ததுக்கு ஆளும் அ.தி.மு.க அரசை மட்டுமல்லாமல் தி.மு.கவையும் விமர்சித்திருந்தார். உங்களின் பிரைம் டார்கெட் அ.தி.மு.கவா இல்லை தி.மு.க வா? என்ற கேள்வியை முன்வைத்தோம். ``இரண்டு பேரும்தான். நடக்கும் பிரச்னைகளுக்கு ஆளும் அரசை மட்டுமே குறைசொல்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஒருவர் செய்த தவறை மற்றொரு கட்சி சரிசெய்துவிடும் என்றால், மூன்றாவதாக எங்களைப் போன்ற கட்சிகள் வரவேண்டியதே இல்லையே. ஆனால், அது நடக்கவில்லை. மாநிலத்தின் கடன் பிரச்னைக்கு இரு கட்சிகளும்தான் காரணம். மக்கள் நலன்தான் பிரைம்" என்றார். நன்றி சொல்லி புறப்பட்டோம்.

கமல்
கமல்

இதுபோக கமலிடம் `55 வார திட்டம்' என்ற ஒரு திட்டமும் இருக்கிறது. கட்சியின் 3- வது ஆண்டு விழாவுக்குப் பின்னர் சராசரியாகத் தேர்தலுக்கு 55 வாரங்கள் இருக்கும். மூன்றாம் ஆண்டு நிகழ்வில் மாநிலம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வு இருக்கும். அதன் பின்னர் சின்னதா ஒரு இந்தியன் 2 சூட். அதன் பின்னர் மாவட்டம் தோறும் பயணம்தான். `இந்தியன் 2', `தலைவன் இருக்கிறான்' ஆகிய இரு படங்களும் தேர்தலுக்கு முன்பாகவே வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள். இரண்டும் அரசியல் படம் என்பது அதற்குக் காரணம். அது மட்டுமல்லாமல், தேர்தல் நேரத்தில் கலையை முழுமையாகக் கையில் எடுக்கும் திட்டமும் இருக்கிறதாம். நாடகம், பாடல் உள்ளிட்ட கலைப் பிரசார விஷயங்களுக்கு ஸ்கிரிப்ட் பணிகளும் நடக்கின்றன.

எடப்பாடி அரசு 4-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருப்பதைக் கொண்டாடி வரும் வேளையில், அனைத்துக் கட்சிகளின் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. முடிவு, என்றுமே மக்கள் கையில்...!

அடுத்த கட்டுரைக்கு