Published:Updated:

`எங்கள் குழந்தைகள், வீட்டில் சிறைப்பட்டுள்ளனர்!’ - விமானத்தில் ராகுல் காந்தியிடம் கதறிய பெண்

சத்யா கோபாலன்

‘விமான நிலையத்தைத் தாண்டி நாங்கள் அனுமதிக்கப்படவில்லை, பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகின்றனர். இதிலிருந்தே காஷ்மீர் இயல்பான நிலையில் இல்லை எனத் தெரிகிறது” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.

rahul gandhi
rahul gandhi

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இதற்கிடையில் 'காஷ்மீரிலிருந்து வெளிவரும் செய்தி கவலையளிப்பதாக உள்ளது' என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.

leaders in srinagar
leaders in srinagar
Twitter/@INCIndia

இதை மறுத்த காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்,” ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வரவேற்கிறேன், உங்களுக்காக விமானம் அனுப்பவும் தயாராக உள்ளோம். நீங்கள் இங்கு நடப்பதை நேரில் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்” என்று கூறியிருந்தார். ஆளுநரின் அழைப்பை ஏற்ற ராகுல், நான் காஷ்மீர் வருவதற்கு விமானம் தேவையில்லை, அங்குள்ள மக்களை நேரில் சந்திப்பதற்கு சுதந்திரம் மட்டும் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தான் சொன்னபடியே நேற்று முன்தினம் காஷ்மீர் சென்றார் ராகுல் காந்தி. அவருடன் குலாம் நபி ஆசாத், கே.சி வேணுகோபால், ஆனந்த் சர்மா, திரிணாமுல் காங்கிரஸின் தினேஷ் திரிவேதி, தி.மு.க-வின் திருச்சி சிவா, சிபி,ஐ கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஜா, சரத் யாதவ் போன்ற பல தலைவர்கள் சென்றிருந்தனர்.

women on flight
women on flight

டெல்லியிலிருந்து விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்ட அவர்கள், சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஸ்ரீ நகர் சென்றடைந்தனர். விமான நிலையத்திலேயே அனைத்து தலைவர்களையும் வழிமறித்த அதிகாரிகள், 'இதற்கு மேல் செல்ல உங்களுக்கு அனுமதி இல்லை' எனக் கூறினர். நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகும் எதுவும் செய்யமுடியாததால், அனைவரும் விமான நிலையிலிருந்தபடியே மீண்டும் டெல்லி திரும்பினர்.

`அங்கே இயல்பான சூழல் இல்லை!’ - ஸ்ரீநகரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி!

டெல்லி விமானத்தில், ராகுல் காந்தி மற்ற தலைவர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது, அதே விமானத்தில் பயணித்த ஒரு பெண், ராகுல் காந்தியைப் பார்த்ததும் காஷ்மீர் பற்றிய தன் ஆதங்கத்தை கொட்டத்தொடங்கிவிட்டார். “காஷ்மீரில் உள்ள எங்கள் குழந்தைகள் வெளியில் வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே சிறைப்பட்டுள்ளனர். என் சகோதரர் ஒரு இதய நோயாளி, கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக அவர் மருத்துவரைச் சந்திக்க முடியாமல் கஷ்டப்பட்டுவருகிறார். நாங்கள் பல்வேறு வழிகளில் மன உழைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம். நாங்கள் பெரும் பிரச்னையில் இருக்கிறோம்” எனக் கூறி கதறி அழுதுள்ளார்.

அந்தப் பெண் ராகுல் காந்தியிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே சில பாதுக்காப்பாளர்கள் அவரின் கையைப் பிடித்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். பின்னர் ராகுல் காந்தி, அவரின் கையைப் பிடித்து ஆறுதல் கூறினார். இந்தச் சம்பவம் அடங்கிய வீடியோ, இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்த வீடியோவை டேக் செய்து, ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “இன்னும் எத்தனை நாள்களுக்கு இதே நிலை நீடிக்கும். காஷ்மீரில் இருக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளைத் தடை செய்வதைவிடவும் பெரிய அரசியல் மற்றும் தேச விரோதம் வேறு எதுவும் இல்லை. இதற்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டியது ஒவ்வொருவரின் கடமை. நாங்கள் குரல் எழுப்புவதை நிறுத்த மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.