Published:Updated:

வருங்கால சி.எம் வேட்பாளர்?- 53 வருட வரலாற்றில் முதல் முறையாகத் தேர்தல் களம் காணும் தாக்கரே வாரிசு

ஐந்து தசாப்த கால கட்சியான சிவசேனாவின்`வருங்கால முகம்' என்று வர்ணிக்கப்பட்டுவரும் ஆதித்யா, தங்கள் கட்சியின் ஆஸ்தான தொகுதியான வார்லியில் களம் காண்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில், பி.ஜே.பி-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிவசேனா 18 தொகுதிகளிலும் பி.ஜே.பி 23 தொகுதிகளிலும் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சியையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் பின்னுக்குத் தள்ளின. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் இந்த இரு கட்சிகளும் கைகோக்க முடிவுசெய்துள்ளன. ஆனால், தொகுதி இழுபறியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றன இரு கட்சிகளும். தொகுதி இழுபறிக்கு மத்தியில், சிவசேனா தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் ஒன்று நடந்துள்ளது.

aditya thackeray
aditya thackeray

ஆம். அது ஜூனியர் தாக்கரே எனும் ஆதித்யா தாக்கரேயின் தேர்தல் போட்டிதான். அனைவரும் எதிர்பார்த்த விஷயம்தான் இது. 29 வயதாகும் ஆதித்யா, உத்தவ் தாக்கரேயின் மூத்த மகன். சிவசேனாவின் இளைஞர் அமைப்பான யுவசேனாவின் தலைவராக இருக்கும் ஆதித்யா, கடந்த ஐந்து வருடங்களாக அரசியல் களத்தில் சுழன்றுவருகிறார். ஐந்து தசாப்த காலக் கட்சியான சிவசேனாவின் `வருங்கால முகம்' என்று வர்ணிக்கப்பட்டுவரும் ஆதித்யா, தங்கள் கட்சியின் ஆஸ்தான தொகுதியான வார்லியில் களம் காண்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Vikatan

``மராட்டியம் மராட்டியருக்கே, இந்தியா இந்துக்களுக்கே'' என்ற அரசியல் முழக்கக் கொள்கையுடன், 1966-ல் பால்தாக்கரே ஆரம்பித்த கட்சிதான் சிவசேனா. அவரின் வழியே ஐந்து தசாப்தங்களாகத் தேர்தல் களம் கண்டுள்ளது, சிவசேனா. ஆனாலும் இதுவரை அவரின் குடும்பத்திலிருந்து எவருமே தேர்தல் களத்தில் போட்டியிட்டதில்லை. ஆதித்யா போட்டியிடுவது உறுதி என்றால், 53 ஆண்டுக்கால சிவசேனா வரலாற்றில், தாக்கரே குடும்பத்திலிருந்து தேர்தலில் போட்டியிடும் முதல் நபராக ஆதித்யா இருப்பார்.

aditya thackeray
aditya thackeray

``நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பினால், அதற்கும் தயார்'' என இரண்டு மாதங்களுக்கு முன்பே சூசகமாகத் தெரிவித்துள்ளார் ஆதித்யா. இளைஞர் பிரச்னைகள், கவிதை, போட்டோகிராஃபி, கால்பந்து ஆகியவற்றில் ஆர்வமுடைய ஆதித்யா, சிவசேனா உறுப்பினர்களிடையே மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடியவர். துடிப்புமிக்க இளைஞரும்கூட. இதனால் சிவசேனா இளைஞர்களிடையே பிரபலமாக வலம்வந்துகொண்டிருக்கிறார்.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பிரபலத்தைப் பயன்படுத்தி, அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த சிவசேனா முயன்றுவருகிறது என்கின்றன, மராட்டிய ஊடகங்கள். அதற்கேற்பவே, கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில், ``எனது தந்தை பால் தாக்கரேவுக்கு அளித்த சத்தியத்தின்படி, `சிவ் சைனிக்' (சிவசேனா உறுப்பினர்கள்) ஒருவரை முதல்வராகக் கொண்டுவர இந்தத் தேர்தலில் உழைப்போம்' எனப் பேசினார், உத்தவ் தாக்கரே. இதனால் ஆதித்யா தேர்தலில் போட்டியிடுவது உறுதி என தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

aditya and uddhav thackeray
aditya and uddhav thackeray

கூட்டணிக் குழப்பம்!

288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில், கடந்த தேர்தலில் கூட்டணி இழுபறியாலேயே பி.ஜே.பி-யும், சிவசேனாவும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதில் 122 தொகுதிகளில் பி.ஜே.பி-யும், 63 இடங்களை சிவசேனாவும் கைப்பற்ற, `ஆட்சியில் பங்கு' என்ற முறையில் இரு கட்சிகளும் கூட்டணிக்குக் கைகோத்தன. கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் தொகுதிப் பங்கீட்டில் நீண்ட இழுபறி ஏற்பட்டது. 288 தொகுதிகளில் 144 தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று சிவசேனா முரண்டுபிடிக்க, பி.ஜே.பி-யோ 'நாங்களே அதிக இடங்களில் போட்டியிடுவோம்' என்று முறுக்கியது.

Vikatan

இதனால் கூட்டணியில் பிளவு ஏற்பட, 288 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளவர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கி அதிரடி காட்டினார், உத்தவ் தாக்கரே. அதன்பின் அமித் ஷா தலையிட, தொகுதிப் பங்கீட்டில் சுமுகத் தீர்வு ஏற்பட்டது. அதன்படி, பி.ஜே.பி 144 தொகுதிகளிலும், சிவசேனா 122 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், முதல்வர் பதவிக்குத்தான் சிக்கல் எனக் கூறப்படுகிறது.

aditya thackeray
aditya thackeray

'இந்த முறை முதல்வர் பதவியை எங்கள் கட்சிக்குக் கொடுக்க வேண்டும்' என சிவசேனா கேட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பி.ஜே.பி தரப்பிலோ, 'பட்நாவிஸ் முதல்வராக இருக்கட்டும், உங்களுக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுக்கப்படும்' என்று உறுதிகொடுக்கப்பட்டுள்ளதாக மராட்டிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை, ஆதித்யா தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால், அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவிவருகிறது.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு