Published:Updated:

முதல்வர் உத்தவ்தான், ஆனால்...? - ஆட்சியையும் கட்சியையும் விட்டுக்கொடுக்காத தாக்கரே குடும்பம்

மகாராஷ்டிராவில் அரசியல் பிரச்னைகள் முடிவடைந்த நிலையில் இன்று மாலை உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 24-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாயின. அதே நாளில்தான் அந்த மாநிலத்தின் அரசியல் சர்ச்சைகளும் தொடங்கியது. சுமார் ஒரு மாதத்தைக் கடந்து நடைபெற்று வந்த அரசியல் குழப்பம் தற்போதுதான் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளது. சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சிமைக்க உள்ளது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை முதல்வராக பதவியேற்கவுள்ளார். துணை முதல்வர் பதவி தேசியவாத காங்கிரஸுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க அல்லாத பல மூத்த தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவை எப்படியாவது முதலமைச்சர் அரியாசணத்தில் அமரவைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தது சிவசேனா. ஆனால், இரண்டரை ஆண்டுகள் ஆட்சிக்கு பா.ஜ.க ஒத்துழைக்காததால் அந்த கூட்டணியிலிருந்து வெளியில் வந்து தற்போது காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியோடு ஆட்சியமைக்கவுள்ளனர். இந்தக் கூட்டணியிலாவது ஆதித்யாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு இரு கட்சித் தலைவர்களும் சம்மதிக்கவில்லை.

ஆதித்ய தாக்கரே - உத்தவ் தாக்கரே
ஆதித்ய தாக்கரே - உத்தவ் தாக்கரே

சிவசேனாவைச் சேர்ந்த யாராக இருந்தாலும் சரி, ஆனால் எப்படியேனும் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் முதல்வர் பதவியேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டணி கட்சிகளின் முடிவுக்கு முழு மனமில்லாமல் சம்மதித்துள்ளார் உத்தவ் தாக்கரே. என்னதான் அவர் முதல்வராக பதவியேற்றுக்கொண்டாலும் அவருக்குப் பின்னால் நிழல் முதல்வராக இருந்து ஆதித்ய தாக்கரேதான் மகாராஷ்டிராவை ஆளுவார் என அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

`ட்ரோஜன் குதிரை’ அஜித் பவார்…அமித் ஷாவை உடைத்த சரத் பவாரின் அரசியல்!

தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஆதித்யா வெற்றி பெற்றுவிட்டார். அவருக்கு முதல்வர் பதவிதான் இல்லாமல் போய்விட்டது; அமைச்சர் பதவியாவது கிடைக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அதுவும் வழங்க வாய்ப்பில்லை என்று கட்சிக்குள் பேசப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அரசுப் பதவிகளில் இருந்தால் கட்சியின் நற்பெயர் பாதிக்கப்படும் என்பதால், ஆதித்ய தாக்கரே கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தபடியே ஆட்சியில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

ஆதித்யாவுக்கு அமைச்சர் பதவி வழங்காதது கட்சிக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. உத்தவ் மற்றும் ஆதித்யா இருவரும் அரசுப் பதவி வகித்தால் கட்சியில் கவனம் செலுத்த முடியாமல் போகும், அதுவே ஆதித்ய தாக்கரே கட்சியில் இருந்தால் கட்சி தொடர்பான பிரச்னைகளுக்கு அவர் உதவுவார். மேலும், 29 வயதே ஆன ஆதித்ய தாக்கரேவை கட்சியின் முகமாக நிறுத்தி, பல்வேறு மாவட்டங்களில் சிவசேனா தங்கள் கட்சியை வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனாவில் உள்ள மூத்த தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே, சஞ்சய் ரத்தோட், ஆஷிஷ் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.