Published:Updated:

`அலர்ட்’ சிவசேனா; தாக்கரேவின் நைட் விசிட்! - இறுதிக்கட்டத்தில் மகாராஷ்டிரா அரசியல் களம்

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க நாளை கடைசி நாள் என்பதால் அங்கு நடக்கும் அரசியல் பரபரப்புகள் உச்சத்தை எட்டியுள்ளன.

மகாராஷ்டிரா பா.ஜ.க - சிவசேனா கூட்டணி
மகாராஷ்டிரா பா.ஜ.க - சிவசேனா கூட்டணி

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்றுடன் சரியாக 15 நாள்கள் ஆகின்றன. அங்கு அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பா.ஜ.க - சிவசேனா கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முதல்வர் பதவி சண்டை காரணமாக இத்தனை நாள்களைக் கடந்தும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. மகாராஷ்டிராவில் ஐந்து ஆண்டுக்கான சட்டமன்ற ஆயுட்காலம் நாளையுடன் முடிவடைகிறது. எனவே அங்கு ஆட்சியமைக்க நாளை கடைசி நாள் என்ற நிலையில், பதற்றத்தின் உச்சத்தில் உள்ளது அம்மாநில அரசியல் களம்.

ஆதித்ய- உத்தவ் தாக்கரே
ஆதித்ய- உத்தவ் தாக்கரே
Twitter/@AUThackeray

சிவசேனா எம்.எல்.ஏ-க்களை தங்கள் வசம் இழுக்கும் பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் சிவசேனா, மறைமுகமாக உதவும் காங்கிரஸ், தலைவர்கள் சந்திப்பு என அடுத்தடுத்த நிகழ்வுகளால் சூடு பிடித்திருந்த மகாராஷ்டிரா, தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. பா.ஜ.கவுக்கு சுமார் 182 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது என இரு தினங்களுக்கு முன்பு குறுஞ்செய்தி கசிந்தது. இதையடுத்து தங்கள் படையைப் பாதுகாக்கும் முயற்சிகளில் இறங்கியது சிவசேனா.

முன்னதாக, சிவசேனாவைச் சேர்ந்த எம்.எல்.ஏகளுக்கு பொட்டி பொட்டியாகப் பணம் தர பேரம் நடப்பதாக அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா’வில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து நேற்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, மும்பையில் உள்ள தன் வீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கட்சி எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே
Twitter/@AUThackeray

கூட்டம் முடிந்த பிறகு அனைத்து எம்.எல்.ஏக்களும் நேராக பாந்த்ரா பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. சிவசேனா தரப்பு தலைவர்கள் இதை முற்றிலுமாக மறுத்த போதிலும், ஆதித்ய தாக்கரேவின் நைட் விசிட்டால் அனைத்து எம்.எல்.ஏக்களும் ஹோட்டலில்தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

` பா.ஜ.க - சிவசேனா சமரசமே இறுதி வழி!’ - மகாராஷ்டிரா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்பவார்

சிவசேனா தரப்பிலிருந்து உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை முதல்வர் அரியாசனத்தில் அமரவைத்து பார்ப்பதற்காகத்தான் அங்கு இவ்வளவு குளறுபடிகள், பிடிவாதங்கள், சண்டை, சச்சரவுகள் என அனைத்தும் நடக்கின்றன. இந்நிலையில் நேற்று பாந்த்ரா பகுதியில் எம்.எல்.ஏக்கள் தங்கவைப்பட்டுள்ள ஹோட்டலுக்கு இரவு நேரத்தில் ஆதித்ய தாக்கரே நேரில் சென்றுள்ளார்.

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே
ANI

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அவர் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் நள்ளிரவு ஒரு மணிக்கு ஹோட்டலிலிருந்து வீடு திரும்பியுள்ளார். மகாராஷ்டிராவில் நிலவும் மிகவும் இக்கட்டான அரசியல் சூழலில் இன்னும் இரண்டு நாள்களுக்கு எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஹோட்டலிலேயே இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் பா.ஜ.க 105 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும் இன்னும் ஆட்சியமைக்கமுடியாமல் தவித்து வருகிறது.