Published:Updated:

டெல்லி மாநகராட்சித் தேர்தல்: `வெற்றிபெற்றும் கலக்கத்தில் ஆம் ஆத்மி தலைவர்கள்!' - காரணம் என்ன?!

ஆம் ஆத்மி - பாஜக

டெல்லி உள்ளாட்சித் தேர்தல் முடிவில் அதிக இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியிருக்கிறது. இருப்பினும், அதன் தலைவர்கள் கலக்கத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது... காரணம் என்ன?

Published:Updated:

டெல்லி மாநகராட்சித் தேர்தல்: `வெற்றிபெற்றும் கலக்கத்தில் ஆம் ஆத்மி தலைவர்கள்!' - காரணம் என்ன?!

டெல்லி உள்ளாட்சித் தேர்தல் முடிவில் அதிக இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியிருக்கிறது. இருப்பினும், அதன் தலைவர்கள் கலக்கத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது... காரணம் என்ன?

ஆம் ஆத்மி - பாஜக

டெல்லியில் மொத்தம் 250 மாநகராட்சி வார்டுகள் இருக்கின்றன. இதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களம்கண்டனர். டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் திருத்தச் சட்டம், 2022-ன் மூலம் தேசியத் தலைநகரின் மூன்று உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. ஆம் ஆத்மி கட்சியும், பா.ஜ.க-வும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆனால் காங்கிரஸ் 247 வார்டுகளில் மட்டுமே தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இந்தத் தேர்தல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் முன்னோட்டமாகவும் பார்க்கப்பட்டது.

இதனால் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. ஒவ்வொரு கட்சியின் மூத்த தலைவரும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். ஒருவழியாக வாக்கு எண்ணிக்கை டிச 7-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்துவந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 134 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மாநகராட்சியில் 2007-ம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்த பா.ஜ.க 104 வார்டுகளில் வெற்றிபெற்றிருக்கிறது.

ஆம் ஆத்மி - பாஜக
ஆம் ஆத்மி - பாஜக

டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்ற 126 வார்டுகளில் வெற்றிபெற்றால் போதும். இதையடுத்து 15 ஆண்டுக்காலமாக பா.ஜ.க-வின் வசமிருந்த டெல்லி மாநகராட்சி, தற்போது ஆம் ஆத்மியின் வசம் சென்றிருக்கிறது. இருப்பினும் 200 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2015, 2020-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் முறையே 67 மற்றும் 62 இடங்களை வென்றது.

பெரும்பாலான வார்டுகளில் வாக்கு எண்ணிக்கையின் முதல் 6 சுற்றுகள் வரை பா.ஜ.க முன்னிலையிலிருந்தது. எண்ணப்பட்ட வாக்குகளின் சதவிகிதம் உயர்ந்ததால், ஆம் ஆத்மியின் இடங்களும் அதிகரித்தன. பா.ஜ.க அதிக இடங்களைப் பிடிப்பதற்கு ஆம் ஆத்மியின் ஊழலுக்கு எதிரான பிரசாரம் முக்கியக் காரணம் என்று அந்தக் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். மேலும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் முன்னுரிமை பெற்றதாகக் கூறப்படும் வீடியோக்கள் பா.ஜ.க-வுக்கு கடைசி நேரத்தில் மைலேஜாக அமைந்துவிட்டது.

சிறையில் ஜெயினுக்கு மசாஜ்
சிறையில் ஜெயினுக்கு மசாஜ்

2014, 2015-ம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் 2017-ம் ஆண்டு நடந்த மாநகராட்சித் தேர்தலில் 21 சதவிகித வாக்குகளைப் பெற்று 30 இடங்களை வென்றது. இந்த முறை, ஒன்பது இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இதன் மூலம் தலைநகரில் காங்கிரஸ் கட்சி மேலும் ஓரங்கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு பா.ஜ.க-வைப்போல் அனைத்துத் தலைவர்களும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. டெல்லியில் இருக்கும் முக்கியத் தலைவர்கள் மட்டுமே வழிநடத்திய ஒரு மந்தமான பிரசாரம் மற்றும் நம்பகமான முகம் இல்லாதது போன்ற காரணத்தால் பெரிய தோல்வியைச் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் வெறும் 12 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது.

பா.ஜ.க 100 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், கட்சித் தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அளித்த பேட்டியில், "பா.ஜ.க-வின் பணிக்காக மக்கள் ஆதரவளித்தனர். அதேபோல், மேயர் தேர்வுக்கு பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்பார்கள். டெல்லிக்கு பா.ஜ.க மேயர் இருப்பார். நகரசபைத் தேர்தலில் கட்சி மாறுதல் தடுப்புச் சட்டம் பொருந்தாது என்பதால், மேயர் பதவிக்கு எந்தக் கட்சி உரிமை கோர முடியும் என்பதில் கடைசி நேர மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்றார்.

காங்கிரஸ்- ஆம் ஆத்மி
காங்கிரஸ்- ஆம் ஆத்மி

``ஒரு மேயர் பொதுவாக அதிக எண்ணிக்கையிலான கவுன்சிலர்களைக்கொண்ட கட்சியால் பரிந்துரைக்கப்படுவார். எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே தேர்தல் நடத்தப்படும். ஆம் ஆத்மி அதிக இடங்களில் வெற்றி பெறாததால், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கட்சி மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த முறை டெல்லியில் சிறிய கட்சிகளுக்கு ஒரு வார்டுகூட செல்லவில்லை. மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் வெற்றிபெற்றவர்கள் பா.ஜ.க-வுக்கு மாறும் பட்சத்தில் அந்தக் கட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் வெற்றிபெற்றும் அதைக் கொண்டாட முடியாமல் கலக்கத்தில் இருக்கிறார்கள்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.