Published:Updated:

அடித்து ஆடும் ஆம் ஆத்மி... தள்ளாடும் காங்கிரஸ்? - 2024-ல் என்ன நடக்கும்?!

ஆம் ஆத்மி - காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்த பஞ்சாப்பில் மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில், ஆம் ஆத்மி தனது வெற்றியைப் பதிவுசெய்து பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

அடித்து ஆடும் ஆம் ஆத்மி... தள்ளாடும் காங்கிரஸ்? - 2024-ல் என்ன நடக்கும்?!

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்த பஞ்சாப்பில் மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில், ஆம் ஆத்மி தனது வெற்றியைப் பதிவுசெய்து பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

Published:Updated:
ஆம் ஆத்மி - காங்கிரஸ்

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார்கள். இவர்களில் ராகுல் காந்தி 2017 முதல் 2019 வரை இரண்டு ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் தலைவராக இருந்திருக்கிறார். 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. இந்த படுதோல்விக்குத் தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காங்கி விலகினார். இதனால், சோனியா காந்தியே இடைக்கால தலைவராகப் பதவியிலிருந்து வருகிறார்.

இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்த பஞ்சாப்பில் மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில், ஆம் ஆத்மி தனது வெற்றியைப் பதிவுசெய்து பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால்

தற்போது பா.ஜ.க, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியில் நடக்கும் உட்கட்சிப்பூசலும், மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுவதும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. 2015-ல் ஹிமந்தா பிஸ்வா சர்மா தொடங்கி 2022-ல் குலாம் நபி ஆசாத் வரை 20-க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஓட்டம் பிடித்திருக்கின்றனர். சிலர் பா.ஜ.க-வில் இணைந்தனர்.

இதில், பலரும் ராகுல் காந்திமீது நேரடியாகவும், மறைமுகமாகவும் புகார்களைக் கூறினர். கடைசியாக வெளியேறிய, குலாம் நபி ஆசாத், ``ராகுல் காந்தி குழந்தைத் தனமாக நடந்துகொள்கிறார்" என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார். தற்போது புதிய கட்சியையும் குலாம் நபி ஆசாத் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா

இவருக்கு ஜம்மு-காஷ்மீரில் 20 காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். 36 இளைஞர் காங்கிரஸாரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

இதே போல், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவருமான உமர் அப்துல்லாவும் காங்கிரஸ் குறித்து தன்னுடைய கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.

அதில், ``சமீபகாலமாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில், குலாம் நபி ஆசாத்தின் ராஜினாமா கடிதத்தை வாசிக்கும்போது மிகவும் வேதனையளிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான கட்சி (காங்கிரஸ்) நிலைகுலைவதைப் பார்ப்பதற்குக் கவலையாகவும், பயமாகவும் இருக்கிறது" என அவர் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர்கள்
ட்விட்டர்

ஆட்சியிலும், கட்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டு வரும் பின்னடைவுகள் 2024-ல் ஆம் ஆத்மி-க்குச் சாதகமாக அமைந்துவிடுமோ என்கிற கேள்வி அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதற்கேற்ப, பா.ஜ.க-வின் முயற்சிகளை மீறி டெல்லி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துக் காண்பித்தது, குஜராத் தேர்தலிலும் வெற்றியைப் பெறுவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் சூளுரைத்து வருவது, `பா.ஜ.க-வில் இருந்துகொண்டு ஆம் ஆத்மிக்கு வேலை செய்யுங்கள்!' என்பது என தேசியளவில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கவனத்தை ஈர்த்து வருகிறது.

இது குறித்து, ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் வசீகரனிடம் பேசினோம். ``75 ஆண்டுகளில் பா.ஜ.க, காங்கிரஸ் செய்யாததை டெல்லியில் ஆம் ஆத்மி செய்து வருகிறது. நாங்கள் காங்கிரஸின் பி டீம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், டெல்லியில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சி அமைத்தோம். தற்போது, டெல்லியில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். நாங்கள் காங்கிரஸுக்கு மாற்று என்று சொல்வதைவிட பா.ஜ.க-வுக்கு மாற்று என்று சொல்வதே சரியாக இருக்கும். 2024 மக்களவைத் தேர்தலில் அதை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

வசீகரன்
வசீகரன்

குஜராத் தேர்தல் இதற்குச் சாட்சியாக அமையும். இதைச் செய்கிறோம், அதைச் செய்கிறோம் என்று சொல்லித்தான் வாக்குச் சேகரிப்பார்கள். நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதைச் சொல்லியே வாக்குச் சேகரிக்கிறோம். இதனால், மக்கள் எங்களை நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையின் பயனாகத்தான் குஜராத்தில் எங்களின் வாக்கு 4 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது" என்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை நம்மிடம் பேசுகையில், ``காங்கிரஸ் மக்களுக்கான இயக்கம். ஆட்சி, அதிகாரம் மட்டும் எங்களின் குறிக்கோள் இல்லை. அனைவரும் ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகள் என நினைப்பதே காங்கிரஸ் கொள்கை. ஆனால், பதவி கிடைக்கவில்லை என்றால் ஓடி விடுகிறார்கள். ஒரு காலத்தில் வி.பி.சிங் எங்கள் கட்சியிலிருந்து வெளியேறி இந்த நாட்டின் பிரதமராக ஆனார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

அப்போது அவர்தான் காங்கிரஸுக்கு மாற்று என்றார்கள். ஆனால் அதன் பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை நாடே பார்த்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருக்கும்போது இதுபோன்ற துரோகங்கள் நடந்திருக்கின்றன. பெரிய பெரிய துரோகங்களையெல்லாம் சந்தித்திருக்கிறோம். ஆம் ஆத்மி தேசியக் கட்சி கிடையாது. அது ஒரு மாநிலக் கட்சி மட்டுமே. டெல்லி, பஞ்சாப்பில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் 200 ஆண்டுகள் பழமையான கட்சி" என்றார்.