Published:Updated:

குஜராத் தேர்தல்: ``ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜக-வினர் கடத்திவிட்டனர்!" - மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

மணீஷ் சிசோடியா - ஆம் ஆத்மி

சூரத் (கிழக்கு) தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஆம் ஆத்மி வேட்பாளர் காஞ்சன் ஜரிவாலாவை, பா.ஜ.க கடத்திவிட்டதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியிருக்கிறார்.

குஜராத் தேர்தல்: ``ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜக-வினர் கடத்திவிட்டனர்!" - மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

சூரத் (கிழக்கு) தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஆம் ஆத்மி வேட்பாளர் காஞ்சன் ஜரிவாலாவை, பா.ஜ.க கடத்திவிட்டதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
மணீஷ் சிசோடியா - ஆம் ஆத்மி

2024-ம் ஆண்டு வரவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கு முன்பு நடைபெறும் முக்கிய சட்டப்பேரவைத் தேர்தலாகப் பார்க்கப்படும் குஜராத் தேர்தல், வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் முனைப்பு காட்டிவரும் இதேவேளையில், பஞ்சாப்பைப்போல் குஜராத்திலும் வெற்றிபெற ஆம் ஆத்மியும் களமிறங்கியிருக்கிறது. இதனால், அங்கு பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் - பாஜக - ஆம் ஆத்மி
காங்கிரஸ் - பாஜக - ஆம் ஆத்மி

இந்த நிலையில், சூரத் (கிழக்கு) தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஆம் ஆத்மி வேட்பாளர் காஞ்சன் ஜரிவாலாவை, பா.ஜ.க கடத்திவிட்டதாக டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவருமான மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியிருக்கிறார்.

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

இது குறித்துப் பேசிய மணீஷ் சிசோடியா, ``நேற்று முதல் காஞ்சனையும் அவரின் குடும்பத்தினரையும் காணவில்லை. வேட்புமனுவைப் பரிசீலனை செய்யச் சென்றிருந்தவர், அதை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியே வந்த மறுகணமே பா.ஜ.க-வின் குண்டர்கள் அவரைக் கடத்திச் சென்றனர். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இது ஆபத்தானது. மேலும், இது வேட்பாளரைக் கடத்துவதல்ல, ஜனநாயகத்தையே கடத்துவது" என்று கூறியிருக்கிறார்.

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

சிசோடியாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கெஜ்ரிவாலும் இது பற்றி ட்வீட் செய்திருக்கிறார். அதில், ``முதலில் அவரின் வேட்புமனுவை நிராகரிக்க பா.ஜ.க முயன்றது. ஆனால் அவரின் வேட்புமனு ஏற்கப்பட்ட பின்னர், வேட்புமனுவைத் திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது" என கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

ஆம் ஆத்மி தரப்பிலிருந்து இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், இதுவரை பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வெளிவரவில்லை.