Published:Updated:

ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை: தமிழக அரசின் அடுத்த `மூவ்' என்ன?

ஆறுமுகசாமி ஆணையம்

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை அடிப்படையில், அடுத்தகட்டமாக அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் சட்டபூர்வமான கருத்துருக்களைப் பெற்று அதனடிப்படையில் அரசு வழக்கு பதிவுசெய்து வழக்கை நடத்தும்.

ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை: தமிழக அரசின் அடுத்த `மூவ்' என்ன?

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை அடிப்படையில், அடுத்தகட்டமாக அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் சட்டபூர்வமான கருத்துருக்களைப் பெற்று அதனடிப்படையில் அரசு வழக்கு பதிவுசெய்து வழக்கை நடத்தும்.

Published:Updated:
ஆறுமுகசாமி ஆணையம்

கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மரணத்தில் மர்மம் இருந்ததாக அப்போதைய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். இதையடுத்து, இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்த பின்னர் 2017-ம் ஆண்டு, செப்டம்பர் 25-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று  அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தீபாவின் தம்பி ஜெ.தீபக், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பணியாற்றிய சமையலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி சாட்சியம் பதிவுசெய்தது. இதேபோல், அப்போலோ மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 151 சாட்சிகள் மற்றும் பிரமாணப் பத்திரம் அளித்த எட்டுப் பேரிடம் விசாரணை நடத்தி சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன. 

ஜெயலலிதா
ஜெயலலிதா

இதில், சசிகலா நேரில் ஆஜராகாமல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். சுமார் நான்கரை ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா மரணம் தொடர்பான முழு அறிக்கையை, ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி வழங்கினார். சமீபத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையில், ஆணையத்தின் 608 பக்க அறிக்கை கடந்த 18-ம் தேதி  தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், ``சசிகலாவின் உறவினரான கிருஷ்ணப்பிரியா அளித்த சாட்சியத்தின்படி சசிகலா, ஜெயலலிதா இடையே நல்லுறவு இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மருத்துவமனையில் சசிகலா உறவினர்களால் 10 அறைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தவிர, அப்போலோ மருத்துவமனையால் வேறு ஆதாரங்களோ, ஆவணங்களோ வைக்கப்படவில்லை.

விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன்
விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர, ஆணையம் வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. சசிகலா, மருத்துவர் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவுசெய்து நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் எந்த நேரத்திலும் டிஸ்சர்ஜ் செய்யப்படலாம் என வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் உள்ளடக்கியதாக இருந்தது அறிக்கை.  

சசிகலா
சசிகலா

விசாரணை ஆணையத்தின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அன்றைய தினமே அறிக்கை வெளியிட்ட சசிகலா, "நம் இதயதெய்வம் அம்மா என் அருகிலேயே இருந்து நடப்பவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். என்மீது பழிபோடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என்மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை என்றைக்கு நான் அம்மா அவர்களின் கரத்தைப் பிடித்தேனோ அன்று ஆரம்பமானது என்மீது இந்தப் பழி போடும் படலம். அது இந்த நொடிவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றிக் கவலைப்பட்டிருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவுக்குச் சாதித்திருக்க முடியாது. ஆனால் அதேசமயம் என் அக்கா, நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துவதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

புரட்சித்தலைவி அம்மாவின் மரணத்தைச் சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையையும் அரசியலாக்கிவிட்டார்கள். தற்போது, இவர்கள் பங்குக்கு என்னை விசாரிப்பதாகச் சொல்கிறார்கள். எத்தனை முறை, எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அம்மா அவர்கள் மரணத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டேயிருக்கலாம். ஆனால், உண்மை என்றைக்கும் மாறாது. நம் அம்மாவின் மரணத்தில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது. அம்மா அவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளித்து நன்றாக குணமடைந்து வீட்டுக்குத் திரும்பவிருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக நம்மையெல்லாம் நிர்க்கதியாக விட்டுச் சென்றார் என்பதுதான் யதார்த்தமான உண்மை. இந்த யதார்த்தத்தை கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் புரிந்திருக்கின்றனர்" என்று கூறியிருக்கிறார். 

தமிழன் பிரசன்னா
தமிழன் பிரசன்னா

ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை வெளியாகியிருக்கும் நிலையில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது குறித்து, திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, "நீதியரசரின் ஆணையம் யார் யாரெல்லாம் குற்றவாளிகள் என்பதை அடையாளப்படுத்தியிருக்கிறது. அந்தக் காலகட்டங்களில் அதிகாரத்தைப் பயன்படுத்தியவர்கள் யார்... தலைமைச் செயலாளரின் நிலைப்பாடு, பழனிசாமி, பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்ன என்பதை முழுமையாகப் பட்டியலிட்டு சமர்பித்திருக்கிறது. இந்த ஆணையத்தையே தன்னுடைய அரசியல் லாபத்துக்காக பன்னீரும் எடப்பாடியும் விளையாடினார்கள். ஆணையம் அமைத்தால் உங்களோடு சேர்வதற்குத் தயார் என்று கோரிக்கை வைத்துத்தான் இணைந்தார்கள். ஜெயலலிதாவுக்குத் தேவையான சிகிச்சையை வழங்கவிடாமல் அதிகாரத்தில் இருந்தவர்கள் தடுத்தார்கள் என்று ஆணையமே சொல்கிறது. மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் ஓர் உண்மையை அரசு கொடுத்திருக்கிறது. சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்டமாக அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் சட்டபூர்வமான கருத்துருக்களைப் பெற்று, அதனடிப்படையில் அரசு வழக்கு பதிவுசெய்து வழக்கை நடத்தும்" என்றார்.