Published:Updated:

பொருளாதார விவகாரத்தில் மத்திய அரசின் 10 தோல்விகள் - அபிஷேக் மனு சிங்வி

செ.கார்த்திகேயன்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த உற்பத்தியை இரட்டை இலக்கத்துக்குக் கொண்டு வருவோம் என்று மத்திய அரசு கூறியது. ஆனால், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 5.8 சதவிகிதம்தான் இருந்துள்ளது.

Abhishek Manu Singhvi
Abhishek Manu Singhvi

`` இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான, குழப்பமான நிலையில் இருக்கிறது. ஆனால், இதைச் சீர்செய்ய மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கொள்கை வழியிலான தீர்வுகளும் காணப்படவில்லை" எனக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர், `` பொருளாதார விவகாரத்தில் மத்திய அரசு 10 தோல்விகளைக் கண்டுள்ளது. ஆட்டோமொபைல் விற்பனையில் ஓராண்டாக 31 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கார்கள் விற்பனை 23 சதவிகிதமும் இருசக்கர வாகன விற்பனை 12 சதவிகிதமும் டிராக்டர் விற்பனை 14 சதவிகிதமும் வீழ்ச்சி அடைந்துள்ளன. பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை 5 சதவிகிதமும் தேசிய பங்குச் சந்தை 10 சதவிகிதமும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

பொருளாதார வீழ்ச்சியை `திட்டமிட்டு' மறைக்கிறதா பி.ஜே.பி அரசு?
Prime minister Modi
Prime minister Modi

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வெளியான மத்திய பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறை 3.46 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நிதிப் பற்றாக்குறை அதிகரித்து வரும்நிலையில், அதுபற்றிய தவறான புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டது என, தணிக்கைக் குழு மறுமதிப்பீடு செய்து வெளிப்படுத்தியுள்ளது. உண்மையில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.8 சதவிகிதம் எனத் தணிக்கைக் குழு கூறியுள்ளது.

நடப்பு மாதத்தில் மட்டும் 9,000 கோடி ரூபாய் முதலீட்டை அவர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்
அபிஷேக் மனு சிங்வி

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்துள்ளது. `இந்த உற்பத்தியை இரட்டை இலக்கத்துக்குக் கொண்டு வருவோம்' என்று மத்திய அரசு கூறியது. ஆனால், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 5.8 சதவிகிதம்தான் இருந்துள்ளது. இது, மோடியின் அரசிலேயே மிகக் குறைந்த அளவாகும். அதேபோல, தொழிலாளர் சக்தியும் குறைந்துவருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் மந்தநிலை காணப்படுகிறது. கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் வழங்குவதைக் குறைத்துவிட்டன. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

அடுத்தபடியாக, அந்நிய நேரடி முதலீடு குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், அந்நிய நேரடி முதலீடு 7 சதவிகிதம் குறைந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடன் மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீட்டைத் திரும்ப எடுத்துக்கொண்டு வெளியேறுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. நடப்பு மாதத்தில் மட்டும் 9,000 கோடி ரூபாய் முதலீட்டை அவர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்" என மத்திய அரசு சந்தித்துள்ள தோல்விகளை அவர் பட்டியலிட்டார்.