Published:Updated:

`இங்கே மோடி சர்க்கார்... அங்கே ட்ரம்ப் சர்க்கார்!' - ஹூஸ்டனில் வாக்கு சேகரித்த பிரதமர்

அமெரிக்க அதிபரின் ஆசையை மறைமுகமாக நிறைவேற்றினார் பிரதமர் மோடி.

ஹூஸ்டனில் மோடியுடன் ட்ரம்ப்
ஹூஸ்டனில் மோடியுடன் ட்ரம்ப்

ஹூஸ்டனில் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, 'ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார் ' என்று இந்தியர்களிடம் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவாகப் பேசினார். அமெரிக்காவில் ஒரு வார காலம் பிரதமர் மோடி, சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில் 50,000 இந்தியர்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி மேடையேறினார்.

மோடியுடன் ட்ரம்ப்
மோடியுடன் ட்ரம்ப்

பொதுவாக, டெக்ஸாஸ் மாகாணத்தில், 'எப்படி இருக்கிறீர்கள்' என்பதற்கு 'ஹௌடி' என்று ஆங்கிலத்தில் கேட்பது வழக்கம். இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த இந்தியர்கள் 'மோடி சௌக்கியமா?' என்று நிகழ்ச்சிக்குப் பெயர் சூட்டியிருந்தனர். அதனால், மேடை ஏறிய பிரதமர் மோடி. தமிழ் உட்படப் பல மொழிகளில் 'இந்தியர்கள் அனைவரும் சௌக்கியமாக இருக்கிறோம்' என்று கூட்டத்தினரைப் பார்த்துச் சொன்னார்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலின்போது, 'ஆப் கி பார் மோடி சர்க்கார்' என்ற ஸ்லோகனை முன்வைத்து பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். அதே வார்த்தையை ஹூஸ்டனில் மாற்றிப் பேசிய மோடி, 'ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்' என்று பேசினார். அதாவது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட்டால், அவருக்கு வாக்களிக்குமாறு இந்தியர்களைப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் எதிர்பார்ப்பும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஒட்டு மொத்த ஓட்டும் தனக்கு விழ வேண்டுமென்பதுதான்.

இந்த உலகத்தில் டொனால்ட் ட்ரம்ப் என்ற பெயர் ரொம்பவே பாப்புலர்
பிரதமர் மோடி

ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்க முக்கிய காரணமே அடுத்து வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்தான். ட்ரம்ப்பின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மோடி, இந்தியர்களிடம் மறைமுகமாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னிலையில், `என் இந்தியக் குடும்பத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்' என்று மோடி பேசினார்.