Published:Updated:

தமிழ்நாட்டில் தொடர்ந்து சிக்கும் கள்ளச்சாராயம்... மீண்டும் பெருக்கெடுத்து ஓடத் தொடங்குகிறதா?

கள்ளச்சாராய ஊறல்கள்

தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்திருக்கிறதா என்ற கேள்வியெழுந்திருக்கிறது.

Published:Updated:

தமிழ்நாட்டில் தொடர்ந்து சிக்கும் கள்ளச்சாராயம்... மீண்டும் பெருக்கெடுத்து ஓடத் தொடங்குகிறதா?

தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்திருக்கிறதா என்ற கேள்வியெழுந்திருக்கிறது.

கள்ளச்சாராய ஊறல்கள்

தமிழகத்தில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் காட்டாறுபோல் ஓடியது. அதிக போதைக்காக பேட்டரி உள்ளிட்ட நச்சுப் பொருள்கள் கலக்கப்பட்டன. இதைக் குடித்த பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினர் நடுரோட்டில் நின்றனர்.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல் தீவிரமாக ஒலித்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்தத் தொழிலில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர்.

குறிப்பாக 1991-ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, "தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அதற்கு அந்தப் பகுதியின் காவல் நிலைய அதிகாரியும், கிராம நிர்வாக அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று அதிரடியாக அறிவித்தார்.

ஜெயலலிதா - சென்னை உயர் நீதிமன்றம்
ஜெயலலிதா - சென்னை உயர் நீதிமன்றம்

பின்னர் அரசே மது விற்பனையில் ஈடுபட ஆரம்பித்தது. இது போன்ற காரணங்களினால் பெருமளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது குறைந்தது. இருப்பினும் ஒருசில பகுதிகளில் போலீஸாரை உரிய முறையில் கவனித்துவிட்டு கள்ளச்சாராய மாஃபியாக்கள் தங்களது வேலையை வழக்கம்போல் செய்துவந்தனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

அவ்வப்போது அவர்கள்மீது கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில்தான் உலக நாடுகளைத் தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், அரசின் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

தமிழக காவல் துறை
தமிழக காவல் துறை

அப்போது பல இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடந்ததாகப் புகார் எழுந்தது. பின்னர் இயல்புநிலை திரும்பியதும் கள்ளச்சாராய கும்பல் அடக்கிவாசித்தது. இந்த நிலையில், மீண்டும் விற்பனை சூடுபிடித்திருக்கிறது. இது சமீபத்தில் போலீஸார் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருக்கிறது.

சின்னசேலம் பகுதியில் கடந்த 2-ம் தேதி போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தகரை, நாககுப்பம் காட்டுகொட்டாய் பகுதிகளில் லாரி டியூப்புகளில் மறைத்துவைத்து விற்பனை செய்துவந்த கள்ளச்சாராயம் கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்
உ.பாண்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமுனாமரத்தூர் வனப்பகுதி இருக்கிறது. இங்கு காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி என பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்லப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த 23-ம் தேதி போலீஸார் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது சாராயம் விற்ற 20 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் பதுக்கிவைத்து விற்பனைசெய்த கள்ளச்சாராயங்கள், ஊறல்கள், வெளிமாநில மது பாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

ஊறல்கள்
ஊறல்கள்

மேலும் சாராய விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட 10-க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ஆரணி, போளூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கள்ளச்சாராயம் விநியோகம் அமோகமாக நடந்துவருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, கடந்த 25-ம் தேதி ஜமுனாமுத்தூர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது, ஈசானிய ஓடைப் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த லாரி டியூப்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிலிருந்து 1,500 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது.

அருள்குமார்
அருள்குமார்

இவ்வாறு தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் தொடர்பாக வரும் செய்திகள் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்யும்வகையில் இருக்கிறது. மீண்டும் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்திருப்பது ஏன்... என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு சுமைப் பணி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் அருள்குமார், "கிராமப்புறத்தில் வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. அங்கு வாழும் மக்களின் வருமானம் குறைந்துவருகிறது.

இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையைக் கடுமையாக உயர்த்தினார்கள். இதன் காரணமாக சாதாரண வகை மதுவைக் குடிக்க வேண்டும் என்றால்கூட ரூ.200 செலவாகிறது.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

ஏற்கெனவே பணம் இல்லாமல் திண்டாடிவரும் குடிமகன்களுக்கு இது மேலும் சிக்கலைக் கொடுத்திருக்கிறது. மேலும், கிராமப்புறங்களில் வீடுகளுக்கு அருகில் டாஸ்மாக் கிடையாது. எனவே வாகனத்தில் வந்துதான் குடிக்க வேண்டும்.

பெட்ரோல் விலையும் அதிகமாக இருக்கிறது. இது போன்ற காரணங்களினால்தான் கள்ளச்சாராயக் கடைகளை நோக்கிச் செல்கிறார்கள். அங்கே ஆபத்தை உணராமல் குடிக்கிறார்கள். பல இடங்களில் இதற்கு போலீஸாரும் உடந்தையாக இருக்கிறார்கள்" என்றார். ``பெரும் உயிரிழப்புகளைத் தடுக்க அரசு இது போன்ற கள்ளச்சாராய கும்பலை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.