கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றிபெற்று, பா.ஜ.க-வை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவிருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளரை அறிவித்தால், கட்சிக்குள் கிளர்ச்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதாலேயே முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், வெற்றியும்பெற்றது. ஆனால், வெற்றிபெற்ற பின்பும்கூட முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமலேயே இருந்தது.

அதோடு, சித்தராமையா முதல்வர், டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் என்று பேச்சுகள் அடிபட்டன. பிறகு, `யாருடைய முதுகிலும் குத்த மாட்டேன்’ எனக் கூறிய சிவக்குமார், ``துணை முதல்வராகப் பதவியேற்கத் தயார், ஆனால், நான் ஒருவர் மட்டுமே துணை முதல்வராக அறிவிக்கப்பட வேண்டும். மேலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும் தொடர வேண்டும்" எனக் கட்சி மேலிடத்திடம் கூறிவிட்டார். இப்படி ஐந்து நாள்களாக கர்நாடக முதல்வர் யார் என்று நிலவிவந்த இழுபறியில், `சித்தராமையா முதல்வர். சிவக்குமார் மட்டுமே துணை முதல்வர். லோக் சபா தேர்தல் வரை சிவக்குமார் கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருப்பார்' என காங்கிரஸ் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், `கட்சி மேலிட உத்தரவை நீதிமன்றத் தீர்ப்பைப்போல ஏற்றுக்கொள்ள வேண்டும்' என துணை முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சிவக்குமார் கூறியிருக்கிறார்.
துணை முதல்வராகத் தன்னை காங்கிரஸ் அறிவித்தது குறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசிய சிவக்குமார், ``இந்த விஷயத்தைக் கட்சி மேலிடத்திடம் நாங்கள் விட்டுவிட்டோம். அவர்கள்தான் முடிவுசெய்கிறார்கள். தனிப்பட்ட நலனைவிடவும், கட்சியின் நலன் சார்ந்த விஷயம் மிகவும் முக்கியம். எனவே, மேலிட உத்தரவை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இது, நீதிமன்றத் தீர்ப்பைப்போன்றது. பலரும் நீதிமன்றத்தில் வாதாடுவோம். ஆனால், இறுதியில் நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவும் அப்படித்தான். முதலில் கட்சியின் நலன், அதற்கடுத்துதான் தனிப்பட்ட நலன். சரி, இறுதியில் நாம் பல்வேறு காரணங்களுக்காக வெற்றிபெறாமல் இருந்திருந்தால், நம்முடைய நிலை இன்றைக்கு என்னவாக இருந்திருக்கும்... எனவே, இப்போது வெற்றிபெற்றுவிட்ட நாம் அதற்கான பலனைப் பெற வேண்டும். இது என் ஒருவனால் மட்டுமல்ல... பல லட்சம் தொண்டர்களும் தங்களால் முடிந்ததைச் செய்திருக்கிறார்கள். அவர்களின் முடிவையும் நாம் கவனிக்க வேண்டும்" என்றார்.