Published:Updated:

தொடர் குற்றச்சாட்டு... திடீர் நடவடிக்கை! - வேலூர் மக்கள் தொடர்பு அலுவலர் விடுவிப்பு... பின்னணி!

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கே.சுப்பையா
News
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கே.சுப்பையா

``நான் டெபுட்டி கலெக்டர் ரேங்க். மாசம் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன்’’ என்பதுடன், `ஏய்... நீ... வா... போ...’ என்று ஒருமையில் பேசி அதிகாரிகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவந்தார் சுப்பையா.

வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கே.சுப்பையா திடீரென அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதியன்றுதான், வேலூரில் அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் வந்த நாளிலிருந்தே தி.மு.க அரசுத் தொடர்பான செய்திகளை பத்திரிகை, ஊடகங்களிடம் தெரிவிக்காமல் மறைத்துவந்ததாகக் கூறப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் முறையான அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்திருக்கிறார். பல்வேறு துறைகளைச் சார்ந்த உயரதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாக பேசியதாகவும் அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில்தான், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பணியிலிருந்து விடுக்கப்பட்ட ஆணை நகல்
பணியிலிருந்து விடுக்கப்பட்ட ஆணை நகல்

இது தொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ``செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கே.சுப்பையா மாற்றப்பட்டதற்குக் காரணம், அவர் வாய்தான். ஆணவப் பேச்சு, அதிகார மோகத்துடன் ரொம்ப ஓவராக அனைவரையும் எடுத்தெறிந்து பேசுவார். எந்தத் துறை அலுவலர் அவரிடம் செய்தி வெளியிடக் கோரி பேசினாலும், மூச்சுக்கு முந்நூறு தடவை `நான் டெப்புடி கலெக்டர் ரேங்க். மாசம் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறேன். என் முன்னாடியெல்லாம் உட்கார்ந்துப் பேசக் கூடாது’ என்பது, `ஏய்... நீ... வா... போ...’ என்று ஒருமையில் பேசுவது என அதிகாரிகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவந்தார். இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சுப்பையா, இதற்கு முன்பு பணிபுரிந்த மாவட்டத்திலும் இதே போன்ற பிரச்னையில்தான் சிக்கினார். தற்போது, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பரத்குமார் கூடுதல் பொறுப்பில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் மீதான நடவடிக்கை மிகத் தாமதமானது. என்றாலும் வரவேற்கிறோம்" என்றனர்.

இது தொடர்பாக சுப்பையாவிடமே காரணம் கேட்டோம். ``நியாயமாக இருந்தேன். நேர்மையாக இருந்தேன். என்ன காரணத்துக்காக நடவடிக்கை எடுத்தாங்கன்னு தெரியலை!’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz