Published:Updated:

`இந்த ஆட்சியிலாவது பயன்படுத்துங்கள்!’ - நிர்பயா நிதி விவகாரத்தில் அழுத்தம் கொடுத்த சுப்ரியா சுலே

பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான கடந்த அரசு இந்த நிதியைப் பயன்படுத்தவில்லை

சுப்ரியா சுலே  எம்.பி
சுப்ரியா சுலே எம்.பி ( என் டி.வி )

மஹாராஷ்டிரா மாநிலத்தில், "பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்" என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பியான சுப்ரியா சுலே கோரிக்கை விடுத்துள்ளார்.

சுப்ரியா சுலே டிவிட்டர்
சுப்ரியா சுலே டிவிட்டர்

2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு உயிரிழந்த மாணவியின் நினைவாக நிர்பயா நிதியை மத்திய அரசு உருவாக்கியது. இந்த நிதி எல்லா மாநிலங்களுக்கும் ஒதுக்கப்படும். இந்த நிதியை பல மாநிலங்கள் பயன்படுத்தவில்லை என்று மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்திருந்தார். 1,649 கோடி ரூபாய் நிதியில் 147 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்

மஹாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான டையூ டாமன் போன்றவை ஒரு ரூபாய்கூட செலவு செய்யவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இதே கருத்தை தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா சுலேவும் தெரிவித்துள்ளார்.

சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே

மஹராஷ்டிரா மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட 195 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல் அப்படியே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான முந்தைய அரசு, இந்த நிதியைப் பயன்படுத்தவில்லை என்றும், தற்போதைய அரசு உடனடியாக அந்த நிதியைப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான கோரிக்கை கடிதத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் வித்யா, சவன் மற்றும் அனிகேட் தக்காரே ஆகியோர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து வழங்கியுள்ளனர். அந்தக் கடித்தை சுப்ரியா சுலே தனது ட்விட்டரிலும் பதிவிட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, இந்த நிதியை உடனடியாக முதலமைச்சர் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரித்து நீதி வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.