Published:Updated:

`குலாலாய் இஸ்மாயில்!’ - நியூயார்க்கில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த போராளி

பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக மனித உரிமை மீறல்களை நிறுத்தவேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.

Gulalai_Ismail
Gulalai_Ismail

பாகிஸ்தானைச்சேர்ந்தவர் குலாலாய் இஸ்மாயில். சமூக ஆர்வலரான இவர், சிறுவயதுமுதல் அங்கு நடைபெறும் குழந்தைகள் திருமணம், பெண்களுக்கெதிரான வன்முறைகள், ஆணவக்கொலைகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுத்து வருகிறார். கைபர் பக்துன்வா, பலூசிஸ்தான் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் பழங்குடி இனத்தவர்களான பஷ்தூன் இன பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுவரும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகைப்படங்களை ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதன்காரணமாக குலாலாய் மீது `தேசத்துரோக வழக்கு’ பதிவு செய்யபட்டு, அவரை கைது செய்யும் முயற்சியில் அந்நாட்டு காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

imran khan
imran khan

ஆனால், குலாலாய் இஸ்மாயில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் பாகிஸ்தானிலிருந்து தப்பிச் சென்று அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் உரையாற்றினார். ``பாகிஸ்தானில் போராளி அமைப்புகள் எதுவும் இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான எங்கள் குரல் கோபத்துடன்தான் இருக்கிறது. தீவிரவாதம் மனிதநேயத்துக்கு எதிரான சவால். ஆகவே, நாம் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்” என்று பேசினார்.

அப்போது, ஐ.நா சபைக்கு வெளியே பல்வேறு போராட்டக்காரர்களுடன் இணைந்து ஆர்பாட்டத்தில் குலலாய் கலந்துகொண்டார். அப்போது, `பாகிஸ்தான் ராணுவம் அரசியலில் தலையிடுவதை நிறுத்தவேண்டும்’ என்று முழக்கங்கள் எழுப்பினார். ``பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில், அப்பாவி பஷ்தூன் இன மக்கள் கொல்லபடுகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் சித்ரவதை மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கப்பட்டு துன்புறுத்தபடுகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக மனித உரிமை மீறல்களை நிறுத்தவேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.

Gulalai_Ismail
Gulalai_Ismail

சித்ரவதை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்கவேண்டும். அரசுக்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பினால் எங்களையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்திவிடுகின்றனர். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சர்வாதிகாரம் நடக்கிறது. பாகிஸ்தான் அரசு அதிகாரத்தை எனக்கு எதிராக பயன்படுத்தி, என் குரலை நசுக்க பார்த்தது. என்னை சித்ரவதை செய்தும், என்குடும்பத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். இருப்பினும் என் முழுக்குடும்பமும் எனக்கு ஆதரவாகவே நின்றது. என் தந்தை மற்றும் தாயின்மீது போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்” என்று ஆர்பாட்டத்தின்போது அவர் தெரிவித்தார்.