Published:Updated:

``மத்திய அரசு எளிதில் பின்வாங்காது. ஏனெனில்..." - ஹர்ஷ் மந்தர் சிறப்புப் பேட்டி #CAA

ஹர்ஷ் மந்தர்
ஹர்ஷ் மந்தர்

``இந்துத்துவக் கருத்துடையவர்கள் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள். ஆனால், மதச்சார்பின்மைக்காக போராடுவதாகச் சொல்பவர்கள் ஒன்றுபட்டு நிற்கவில்லை. மதச்சார்பை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டுடன் இல்லை."

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எழுந்த குரல்களில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்தரின் குரல் கவனிக்கத்தக்கது. `குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, அதிகாரபூர்வமாக என்னை நான் முஸ்லிமாகப் பதிவுசெய்துகொள்வேன். குடிமக்கள் தேசியப் பதிவேட்டையும் புறக்கணிப்பேன். அதற்கான எந்த ஆவணங்களையும் தயாரித்து அளிக்க மாட்டேன். பா.ஜ.க அரசின் வரையறைப்படி நான் சட்டவிரோதமான குடியேறியாகவே இருப்பேன். என் நாட்டில் முஸ்லிம் ஒருவர் எதிர்கொள்ளும் இயலாமை, சிரமங்கள் மற்றும் தடுப்புக்காவல் மையத்துக்கு அனுப்பப்படுவது ஆகிய தண்டனைகள் எனக்கும் அளிக்கப்பட வேண்டும்' என்று அறிவித்திருந்தார் ஹர்ஷ் மந்தர்.

டிசம்பர் 19-ம் தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட இவரை, காவல்துறை கைதுசெய்து பிறகு விடுவித்தது. 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் பதவியைத் துறந்த ஹர்ஷ் மந்தர், தொடர்ந்து மனித உரிமைக்கான போராட்டக்களங்களில் இயங்கிவருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

``குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இவ்வளவு ஆக்ரோஷமாக எதிர்வினையாற்ற உங்களைத் தூண்டியது எது?''

``இங்கு கொடிய சட்டங்கள் பல இருக்கின்றன. இந்தச் சட்டங்கள்தான் நேரடியாக அரசியலமைப்பை மீறுகின்றன. அரசியலமைப்பைத் திருத்தி அமைக்கவில்லை என்றாலும், அதை மொத்தமாக மாற்றும் அனைத்து வேலைகளும் நடக்கின்றன. இந்த நாடு அனைவருக்கும் சமமானது. இப்போது இதை எதிர்க்கவில்லையென்றால், நிலைமை கையை மீறிப் போய்விடும். இதைச் செயல்படுத்தவே கூடாது. அதனால்தான், `நான் என்னை முஸ்லிமாகப் பதிவு செய்து கொள்வேன்' என அறிவித்தேன். ஒரு முஸ்லிம் எதையெல்லாம் எதிர்கொள்ள நேருமோ நானும் அதையெல்லாம் எதிர்கொள்வேன். இதுதான் வலுவான எதிர்ப்பாக இருக்க முடியும்.''

CAA-க்கு எதிரான போராட்டங்கள்
CAA-க்கு எதிரான போராட்டங்கள்

``மாணவர்கள்தான் இந்தப் போராட்டங்களைப் பிரதானமாக முன்னெடுக்கிறார்கள். சிவில் சமூகத்தின் எதிர்வினையை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``அரசியல் கட்சிகள் தற்போது மாணவர்களைப் பின்பற்றுகின்றன. மாணவர்கள் அவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். சிவில் சமூகமும் மெல்ல குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. நாட்டில் நெருக்கடியான சூழ்நிலைகளில் பெரும்பாலும் இளைய சமூகம்தான் சரியான வழியைக் காட்டுகிறது. சில நடிகர்கள் குரல்கொடுத்திருக்கிறார்கள்தான். ஆனால், பெரிய புள்ளிகள் எல்லாம் மௌனம் காப்பது வெட்கக்கேடானது. ஷாரூக் கான், ஜாமியாவில் படித்தவர்தான். ஆனால் அவர் குரல்கொடுக்கவில்லை. ஹாலிவுட்டில் நிலை வேறு. ட்ரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஹாலிவுட் நடிகர்கள் பேசுவதை சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும். பாலிவுட் அப்படியில்லை என்பதுதான் வருத்தம்.''

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

``எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தை எவ்வாறு கையாள வேண்டும் என நினைக்கிறீர்கள்?''

``இந்துத்துவக் கருத்துடையவர்கள் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள். ஆனால், மதச்சார்பின்மைக்காக போராடுவதாகச் சொல்பவர்கள் ஒன்றுபட்டு நிற்கவில்லை. மதச்சார்பை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டுடன் இல்லை. மாணவர்கள் தெருவுக்கு வந்த பிறகுதான் சில அரசியல் கட்சிகள் என்.ஆர்.சி விஷயத்தில் பின்வாங்கியிருக்கின்றன.''

``குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் என்.ஆர்.சி இவற்றை மக்கள் சரியாகப் புரிந்துகொண்டதாக நினைக்கிறீர்களா?''

``இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர் புடையவை என்று பலமுறை நாடாளுமன்றத் திலும் அரசியல் கூட்டங்களிலும் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். தற்போது இது வேறு; அது வேறு என்று மாற்றிப் பேசுகின்றனர். ஒரு விஷயத்தில் பல குரல்களில் பேசுவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பழைய அஜெண்டா. மாணவர்கள் இதை மிகத் தெளிவாக உணர்ந்துதான் தெருக்களில் இறங்கியிருக் கின்றனர். மக்களும் விரைவில் புரிந்து கொள்வார்கள். போராட்டத்தின் வீச்சை உணர்ந்ததால்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த சில கட்சிகளும் தற்போது என்.ஆர்.சி-யை எதிர்க்கின்றன.''

``இந்தச் சட்டத்திலிருந்து மத்திய அரசு பின்வாங்குமா?''

``என் கணிப்புப்படி அவர்கள் அடக்குமுறையை மேலும் அதிகரிக்கவே செய்வார்கள். வலுக்கட்டாயமாக அனைத்தையும் முன்னெடுப் பார்கள். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்ற வரிசையில் இது அவர்களுடைய நீண்டகால அஜெண்டா. அவர்களுக்கான நேரம் வந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் அவ்வளவு எளிதில் பின்வாங்க மாட்டார்கள்.''

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

``ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவின்படி எதிர்காலத்தில் இந்தியா 'இந்து ராஷ்டிர'மாக மாறுமா, அப்படி மாறினாலும் அது நிலைக்குமா?''

``பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதை நீங்கள் கேட்டிருந்தால் நான் உறுதியாக இல்லை என்றே சொல்லியிருப்பேன். இப்போது அந்த உறுதி குலைந்திருக்கிறது. நாம் மிகவும் கவனிப்புடன் இருக்க வேண்டும். அது சாத்தியத்துக்கு அப்பாற்பட்டது என நாம் இருந்துவிடக் கூடாது.''

- ஜூனியர் விகடன் இதழுக்கு ஹர்ஷ் மந்தர் அளித்த விரிவான பேட்டியின் சுருக்கமான வடிவம் இது. முழுமையான நேர்காணலை வாசிக்க > "மதச்சார்பின்மைக்காக நிற்பவர்களிடம் ஒற்றுமையில்லை!" - கனலாய்க் கொதிக்கிறார் ஹர்ஷ் மந்தர் http://bit.ly/36Z8zCa

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு