Published:Updated:

`ஜனநாயகத்தின் இருண்ட நாள்!'- ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

பால. அழகு ராச பாரதி

’இந்தத் திருத்தம், தகவல் ஆணையர்களை வீட்டுப் பணியாளர்களைப் போல செயல்பட வழிவகை செய்யும்’ - ஆ.ராசா

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்திய ஜனநாயகத்தின் அரசியலமைப்பு சட்டக் கொள்கைகளுக்கான வெற்றியாக, அரசமைப்பின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த 2005-ம் ஆண்டு வந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.). அது, நடைமுறைக்கு வந்து 14 ஆண்டுகள் ஆன நிலையில், இன்னும் அதன் செயல்பாட்டு முறையில் விமர்சனங்கள் இருந்துவருகின்றன. இந்த நிலையில், தற்போதைய மத்திய பா.ஜ.க அரசு, அதில் சட்டத் திருத்த மசோதா ஒன்றை மக்களவையில் ஜூலை 19-ம் தேதி அறிமுகப்படுத்தியது. அது, அறிமுகமான மூன்றே நாள்களுக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று (ஜூலை 22) குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

'தகவல் அறியும் உரிமை (திருத்த) மசோதா - 2019' தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், ஊதியம் மற்றும் பதவிக்கால நிபந்தனைகள் ஆகியவற்றை மத்திய அரசே நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதன் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், இந்த திருத்தத்திற்கு ஏன் பொதுமக்களின் கருத்தைக் கேட்கவில்லை என்றும், இதைக் கொண்டுவந்ததற்கான மத்திய அரசின் நோக்கம் குறித்தும் கேள்வியெழுப்பினார்.

ஆ.ராசா
ஆ.ராசா

அதைத் தொடர்ந்து பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ``இந்திய அரசு மக்களிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அரசு வெளிப்படைத்தன்மையாக இயங்க வேண்டும், முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும். தான் தேர்ந்தெடுத்த அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. ஆனால், பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருப்பதால், இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுமேயானால், இன்று ஜனநாயகத்தின் இருண்ட நாள். ஜனநாயகம் என்பது தேர்தலோடு முடிந்துவிடுவதில்லை. அது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு'' என்று குறிப்பிட்டார்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் அருணா ராய், "இந்தத் திருத்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான பின்னடைவு என்றும், இது சட்டம் நிறைவேற்றும் முறையின்படி இல்லாமல் ஜனநாயகத்திற்கு விரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.