Published:Updated:

'இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு இலங்கையில் அனுமதி இல்லை' - ராஜபக்சேவின் வாக்குறுதியை நம்பலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோத்தபய ராஜபக்சேவுடன் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா
கோத்தபய ராஜபக்சேவுடன் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா ( India in Sri Lanka twitter page )

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இப்படிக் கூறியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இலங்கை ஆட்சியாளர்கள் எப்போதும் இப்படித்தான் இரட்டை வேடம் போடுவார்கள். அவர்களை ஒருபோதும் நம்பக் கூடாது என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு செயலுக்கும் இலங்கை பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம்'' என்று அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதேவேளையில், 13-வது சட்டத்திருத்தம் குறித்து ஒரு தெளிவான பதிலை அவர் அளிக்காமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா, நான்கு நாள் சுற்றுப்பயணமாக கடந்த வாரம் இலங்கைக்குச் சென்றிருந்தாா். அந்த நாட்டின் அதிபா் கோத்தபய ராஜாபக்சேவைக் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு அதிபா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

``சுற்றுலா, மின்னுற்பத்தி, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பொருளாதாரத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு செயலுக்கும் இலங்கையைப் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம். விரிவான புரிதலின் அடிப்படையில் சீனாவுடன் இலங்கை நட்புறவைத் தொடா்கிறது. எனவே, அந்த நட்புறவு குறித்து சந்தேகம்கொள்ள வேண்டாம். இலங்கையில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளா்கள் முன்வர வேண்டும். திருகோணமலையிலுள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை இந்திய நிறுவனம் குத்தகைக்கு எடுத்து நடத்திவருகிறது. இதற்கு இலங்கை தொழிற்சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்தப் பிரச்னைக்கு விரைவில் சுமுகத் தீா்வு எட்டப்படும்.

மஹிந்த ராஜபக்சேவுடன் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா
மஹிந்த ராஜபக்சேவுடன் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா
India in Sri Lanka twitter page

தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வு:

இலங்கையில் தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 13-ஏ பிரிவை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா நீண்டகாலமாக வலியுறுத்திவருகிறது. அந்தச் சட்டத்தில் உள்ள பலம், பலவீனத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது உடனடித் தேவையாக உள்ளது. இந்தியா, இலங்கை இடையே 1960, 1970-களில் நிலவிய நட்புறவை மீண்டும் நிறுவவேண்டியது அவசியம். இரு நாட்டு மீனவா்களுக்கு இடையே நீண்டகாலமாக பிரச்னை நீடிக்கிறது. தற்போதைய பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வுகாண்பதன் மூலம் நீண்ட கால பிரச்னைக்கு தீா்வு கண்டடைந்துவிடலாம்'' என ஷ்ரிங்லாவிடம் கோத்தபய ராஜபக்சே கூறியதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இப்படிக் கூறியிருப்பது வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேவேளை, ''இலங்கை ஆட்சியாளர்கள் எப்போதும் இப்படித்தான் இரட்டை வேடம் போடுவார்கள். அவர்களை ஒருபோதும் நம்பக் கூடாது'' என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

இது குறித்து இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான நிலாந்தன் பேசும்போது,

``கோத்தபய ராஜபக்சே ஆட்சிக்கு வந்த காலமிருந்து இந்தியாவுக்கே முதலுரிமை என்பதே தன்னுடைய வெளியுறவுக் கொள்கை என்று கூறிவருகிறார். அவர் முதலில் விஜயம் செய்ததும் இந்தியாவுக்குத்தான். ஆனால் அவருடைய கடந்த சுமார் இருபத்தியிரண்டு மாதகால ஆட்சியைத் தொகுத்துப் பார்த்தால் அவர் இந்தியாவுக்கு முதலுரிமை என்பதை ஒரு கவர்ச்சியான ஸ்லோகமாகச் சொல்கிறாரே தவிர, நடைமுறையில் அவர் இந்தியாவுக்கு முதலிடம் கொடுக்கவில்லை என்பது தெரியவரும். அவருடைய இந்திய விஜயத்தின் முடிவில், ``மாகாண சபைக்கு நில அதிகாரத்தையும் காவல்துறை அதிகாரத்தையும் வழங்க முடியாது'' என்று அவர் கூறினார். இது இந்தியாவின் 13-வது திருத்தத்தை அடிப்படையாகக்கொண்ட தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு எதிரானது.

இரண்டாவது, கொழும்பின் இதயமான பகுதியில் அமைந்திருக்கும் சீனப் பட்டினத்துக்கான சட்டமூலம். மூன்றாவது முந்தைய அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிப்பதற்காக இந்திய-ஜப்பானிய நிறுவனங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர் ரத்து செய்தார். கிட்டத்தட்ட 20 மாதகால இழுபறிக்குப் பிறகு கடந்த வாரம் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமத்திடம் ஒப்படைத்திருக்கிறார்.

இலங்கை எழுத்தாளர் நிலாந்தன்
இலங்கை எழுத்தாளர் நிலாந்தன்

நான்காவது, இந்திய அரசால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் `கனெக்டிவிட்டி’ வேலைத் திட்டங்கள் என்றழைக்கப்படும் பலாலி விமான நிலையத்துக்கும் மீனம்பாக்கத்துக்கும் இடையிலான ஒரு வர்த்தகப் போக்குவரத்துப் பாதை, காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே ஒரு யாத்திரிகர் போக்குவரத்துப் பாதை, மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துப் பாதை போன்ற விஷயங்களில் இந்தியா எதிர்பார்க்கும் வேகத்தில் காரியங்கள் நடக்கவில்லை.

ஐந்தாவது, யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்டிருக்கும் யாழ் கலாசார மையம். இந்தக் கட்டடத்தை திறப்பதற்கு அரசாங்கம் இதுவரையிலும் உறுதியான ஒரு தேதியைத் தரவில்லை. யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும் இந்திய பிரதானிகள் ஏக்கத்தோடு பார்த்துவிட்டுப் போகும் யாழ்ப்பாணத்தின் மிக உயர்ந்த கட்டடமாக அது மாறிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவை தவிர யாழ்குடா நாட்டின் ஒதுக்குப்புறமாக உள்ள மூன்று தீவுகளில் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டங்களை நிர்மாணிக்க சீன நிறுவனங்களையே அரசாங்கம் அனுமதித்துள்ளது. இதில் குறிப்பாக `நெடுந்தீவு’ எனப்படுவது முன்பு `பசுத்தீவு’ என்று அழைக்கப்பட்ட ஒப்பீட்டளவில் ஒரு பெரிய தீவு. இது இந்தியாவிலிருந்து மிகக் குறுகிய தூரத்தில் அமைந்திருக்கிறது. பண்டைய காலங்களில் கடல் வற்றும்போது நெடுந்தீவிலிருந்து இந்தியாவுக்கு நடந்து போகலாம். சீனாவின் மீளப்புதுப்பிக்கும் எரிசக்தித்திட்டம் நெடுந்தீவில் அமைக்கப்பட்டால் அது இந்தியாவின் தெற்கு வாசலில் தமிழகத்துக்கு மிக அண்மையில் சீனாவின் இருப்பைக் குறிக்கும். இவை யாவும் கடந்த 22 மாத காலத்துக்குள் ராஜபக்சே அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள். இவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். ராஜபக்சேக்களின் இதயத்தில் இருப்பது இந்தியா அல்ல. சீனாதான். `இந்தியா முதலில்’ என்பது ஒரு கவர்ச்சியான பொய்தான். இந்தப் பொய்யின் தொடர்ச்சிதான் அவரின் தற்போதைய இந்தக் கருத்தும்'' என்கிறார் அவர்.

ராதாகிருஷ்ணன்  - மூத்த பத்திரிகையாளர்
ராதாகிருஷ்ணன் - மூத்த பத்திரிகையாளர்

மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் இது குறித்துப் பேசும்போது,

``இலங்கை முற்றிலும் வேறொரு பாதையில்தான் தற்போது போய்க்கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு யார் அச்சுறுத்தல் என்பதை இலங்கை தீர்மானிக்கக் கூடாது. இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும். காரணம், இந்தியாதான் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்காது என்று கோத்தபய சொல்கிறார். ஆனால், இந்தியாவிடம் கலந்தாலோசித்துவிட்டா சீனாவை இலங்கை உள்ளே கொண்டு வந்தார்கள்... ஹம்பன்தோட்டா துறைமுகம் உள்ளிட்ட பல இடங்களை இந்தியாவைக் கேட்டா சீனாவிடம் கொடுத்தார்கள்... இந்தியாவின் 70 சதவிகித ஏற்றுமதி/இறக்குமதி கொழும்பு வழியாகத்தான் நடக்கிறது. நிலைமை இப்படியிருக்க, இந்தியாவிடம் கலந்தாலோசித்துவிட்டு இதையெல்லாம் செய்திருந்தால், அவர் சொல்வதை நம்பலாம். ஆனால், இவர்களின் கடந்தகாலச் செயல்பாடு அப்படியிருக்கவில்லை. அதனால், வெற்று அறிக்கையாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

`உரிய காலத்தில் கடனைச் செலுத்தத் தவறினால்...' - சீனா வைத்த`செக்'; திணறும் இலங்கை! - என்ன பிரச்னை?

13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என இதுவரை எந்த ஜனாபதியும் வெளிப்படையாகச் சொன்னதில்லை. ஆனால், கோத்தபய ராஜபக்சே அப்படிச் சொல்கிறார். காலத்துக்கு ஏற்றவாறு மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்கிறார். ஆனால், இந்தியா எந்தவித எதிர்வினையும் காட்டாமல் இருக்கிறது. திரிகோணமலையிலுள்ள எண்ணெய்க் கிடங்கை இந்தியாவுக்குக் கொடுப்பதாக இருந்தது. அதை வெளியுறவுச் செயலர்கூடச் சென்று பார்த்துவிட்டு வந்தார். ஆனால், அதை இந்தியாவுக்குக் கொடுக்க மாட்டோம் என ஆளுமங்கட்சி எம்.பி கருத்து தெரிவிக்கிறார். அதனால், ஓர் ஆறுதலுக்காக, இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருக்காது போன்ற கருத்துகளைத் தெரிவிக்கிறார் அவ்வளவுதான்'' என்கிறார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

``13-வது சட்டத் திருத்தை அமல்படுத்த இந்திய அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. பிரதமர் மோடி இலங்கையிடம் தொடர்ந்து இது குறித்து வகியுறுத்திக்கொண்டிருக்கிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அங்கே சென்றிருந்தபோதுகூட இது குறித்துப் பேசினார். எண்ணெய்க் கிணறு விவகாரத்திலும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை உறுதியாக அவர்கள் எடுக்க முடியாது. கடந்த ஏழு வருடங்களில் இந்திய- இலங்கை உறவு மிகச்சரியாக இருக்கிறது. வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களுக்கும் நம்மால் ஆன உதவிகளைத் தொடர்ந்து செய்துவருகிறோம்'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு