அலசல்
Published:Updated:

“பண்ணையார்தனம் செய்கிறார் பழனிவேல் தியாகராஜன்!” - கொதிக்கும் சீனியர்கள்

பழனிவேல் தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
பழனிவேல் தியாகராஜன்

ஓவியம்: செ.கணேசமூர்த்தி

தி.மு.க அமைச்சரவையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர். புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசை எதிர்கொள்ளச் சரியான ஆள் என்றெல்லாம் சொல்லப்பட்டவர் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அவரின் சமீபகாலச் சர்ச்சைப் பேச்சுகள், அமைச்சரவைக்குள் புதிய புயலைக் கிளப்பியிருக்கின்றன. திண்டுக்கல் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, சக்கரபாணி, மூர்த்தி என பி.டி.ஆர் குஸ்தி போடும் அமைச்சர்களின் பட்டியல் பெரிது. அவர் பகைத்துக்கொள்ளாத அமைச்சர்களின் பெயர்களை இன்று ஒரு கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம். “என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்... குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்களுக் கெல்லாம் கட்சிப் பொறுப்பு வாங்கிக்கொடுக்கிறார்”, “அவர் பண்ணையார்தனத்தை எங்ககிட்ட காட்ட வேண்டாம். இதுவரைக்கும் கட்சிக்காக என்ன செஞ்சுருக்காரு பி.டி.ஆர். இங்கிலீஷ்ல பேசிட்டா ஓட்டு விழுந்துருமா?” எனக் கட்சி சீனியர்களே அவருக்கு எதிராகக் கொதிக்கும் அளவுக்குச் சூடாகியிருக்கிறது நிலைமை. ‘என்னதான் நடக்கிறது தி.மு.க அமைச்சரவைக்குள்?’ விவரமறிய விசாரித்தோம்...

“நான் பெரிய மனிதன்!” - கறி விருந்தில் வெடித்த பஞ்சாயத்து

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் சர்ச்சைக்குரிய பேச்சு ‘துடுக்கு’த்தனமாக வெளிப்பட்டது மதுரை கறி விருந்தில்தான். தி.மு.க தலைவராக இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தேர்வுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் கறி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் பி.டி.ஆர். இந்த நிகழ்ச்சிக்கு, மாநகர் மாவட்டச் செயலாளரான கோ.தளபதியும், அவரின் ஆதரவாளர்களும் செல்லவில்லை. மாநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு, தன் ஆதரவாளரான அதலை செந்திலைக் கொண்டுவர பி.டி.ஆர் தீவிரமாக முயன்றார். ஆனால், கடைசியில் தளபதி பெயரையே ‘டிக்’ அடித்தது கட்சித் தலைமை. இதனால், தளபதி தரப்புக்கும், இவர் தரப்புக்கும் இடையில் எழுந்த புகைச்சல் மதுரை தி.மு.க-வில் நீறுபூத்த நெருப்பாக இருந்துவருகிறது. இந்த நிலையில்தான், பி.டி.ஆரின் கறி விருந்து நிகழ்ச்சியை தளபதி டீம் புறக்கணித்தது.

டென்ஷனான பி.டி.ஆர்., “தி.மு.க-வில் சிலர் கட்சி நிகழ்வுகளைத் தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் புறக்கணிக்கக் கூறி மிரட்டுவதாகத் தகவல் வருகிறது. நான் என்றைக்குமே, ‘நீ அவரைப் போய்ப் பார்க்காதே, பெயரைப் போடாதே, போட்டோ போடாதே, நிகழ்ச்சிக்குப் போகாதே’ என்று சொல்ல மாட்டேன். காரணம், நான் பெரிய மனிதன். அதேபோல, ‘எனக்காக போஸ்டர் அடி, என் பெயரைப் போடு, என் போட்டோ போடு’ என்றும் சொல்ல மாட்டேன். காரணம், நான் பெரிய மனிதன்” என்று கறி விருந்து நிகழ்ச்சியிலேயே தளபதியை மறைமுகமாக விளாசியிருந்தார்.

“பண்ணையார்தனம் செய்கிறார் பழனிவேல் தியாகராஜன்!” - கொதிக்கும் சீனியர்கள்

“நான் யாரு தெரியுமா... என் பரம்பரை தெரியுமா?”

கட்சிக்குள் நிலவும் பூசலைப் பேசித் தீர்க்காமல், இப்படிப் பொதுவெளியில் பி.டி.ஆர் போட்டு உடைத்தது, கட்சித் தலைமை வரை புகாராகச் சென்றது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 14-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு, பி.டி.ஆரைத் தனியே அழைத்துக் கண்டித்தாராம் முதல்வர் ஸ்டாலின். “அதன் பிறகும், பி.டி.ஆரின் வாய்த்துடுக்குத்தனம் அடங்கவில்லை” என்கிறார்கள் மதுரை தி.மு.க சீனியர்கள்.

நம்மிடம் பேசிய மதுரை மாநகர் தி.மு.க நிர்வாகிகள் சிலர், “தேவர் ஜயந்திக்கு முன்னதாக மதுரையில் ஒற்றுமைக் கூட்டம் நடந்தது. தலைமை உத்தரவுப்படி, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய கட்சி சீனியரான பொன்.முத்துராமலிங்கம், ‘ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும். அதனால, யாரா இருந்தாலும் பொதுவெளியில பார்த்துப் பேசுங்க’ என்று பி.டி.ஆருக்கு மறைமுகமாக அட்வைஸ் செய்தார். அதை பி.டி.ஆர் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

கூட்டத்தில், ‘நீதிக்கட்சியைத் தொடங்கியவர்களுள் ஒருவர் என் தாத்தா. சமூகநீதியின் அடையாளமாக இருந்தவர் என் அப்பா. அப்பேர்ப்பட்ட பரம்பரையிலிருந்து வந்தவன் நான்’ என சுயபுராணம் பாடுவதில்தான் குறியாக இருந்தார். கடைசிவரையில், கறி விருந்தில் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவே இல்லை. இது ஒருபக்கமென்றால், புறநகர் மாவட்டச் செயலாளரான அமைச்சர் பி.மூர்த்திக்கும் பி.டி.ஆருக்கும் இடையே நிலவும் ஈகோ மோதல் உச்சத்தில் இருக்கிறது. மூர்த்தி கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் பி.டி.ஆரின் ஆதரவாளரான மேயர் இந்திராணி கலந்துகொள்வதில்லை. அதை பி.டிஆரும் கண்டிப்பதில்லை. தொகுதியிலிருந்து கட்சிக்காரர்கள் யாராவது தலைமைச் செயலகத்துக்கு பி.டி.ஆரைப் பார்க்கச் சென்றால்கூட, ‘அப்பாயின்ட்மென்ட் வாங்காமல் ஏன் வர்றீங்க?’ என விரட்டிவிடுகிறார்கள் அலுவலக உதவியாளர்கள். தொகுதியில் யாரைப் பிடித்தால் அவர் அப்பாயின்மென்ட் கிடைக்கும் என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. இதே கட்சிக்காரர்களின் உழைப்பில்தான் அவர் அமைச்சராகியிருக்கிறார். அதை அவர் மறந்துவிடக் கூடாது” என்றனர் ஆற்றாமையுடன்.

“அவருக்கு ரேஷன் கடை தெரியுமா?” - பி.டி.ஆர் Vs ஐ.பி

கட்சிக்காரர்களின் குமுறல்களை பி.டி.ஆர் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தன்னுடைய சர்ச்சைப் பேச்சைக் குறைத்துக்கொள்ளவும் இல்லை. கடந்த நவம்பர் 17-ம் தேதி, கூட்டுறவு வார விழாவையொட்டி மதுரையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “கூட்டுறவுத்துறையில் தினமும் ரெய்டுகள் நடக்கின்றன. கடத்தல் அதிகரிப்பதாகச் செய்திகள் வருகின்றன. நிதியமைச்சராகக் கூட்டுறவுத்துறைச் செயல்பாடுகள் எனக்குத் திருப்திகரமாக இல்லை” என அடுத்த சர்ச்சை வெடியை வெடித்தார். அவர் பேச்சை அ.தி.மு.க ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள் எடுத்து டிரெண்ட் செய்யவும், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பு கடும் டென்ஷனாகிவிட்டது.

அதற்கு அடுத்த நாளே, மதுரையில் நடந்த சி.ஐ.ஐ விழாவில், “தமிழகப் பொது விநியோகத்துறைக்கு மூன்று மடங்கு நிதி செலவிடப்படுகிறது. பொது விநியோக விலையைவிட, சந்தை விலை 300 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருக்கிறது. இதனால், கடத்தலுக்கு வழிவகுக்கிறது. அதைச் சீர்செய்ய வேண்டும்’’ என்று அடுத்த குண்டை வீசினார் பி.டி.ஆர். இதில், ஏற்கெனவே அரிசிக் கடத்தல் விவகாரத்தில் பஞ்சராகிக் கிடக்கும் அமைச்சர் சக்கரபாணி தரப்பு டென்ஷனானது. திண்டுக்கல் மாவட்ட தி.மு.க அரசியலில், ஐ.பெரியசாமியும் சக்கரபாணியும் எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்கள். அவர்கள் இருவரையும் ஒரே நேர்க்கோட்டுக்குள் வரவழைத்துவிட்டது பி.டி.ஆரின் சர்ச்சைப் பேச்சு.

பி.டி.ஆர் மீதான கடுப்பு குறையாமல், “அவர் திருப்தி அடையவில்லையென்றால் நாங்கள் என்ன செய்வது... ஏழு கோடி மக்கள் திருப்தி அடைய வேண்டும்; முதல்வர் திருப்தி அடைய வேண்டும். வேறு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நான் 50 ஆண்டுக்காலமும், அமைச்சர் சக்கரபாணி 35 ஆண்டுக்காலமும் அரசியலில் இருக்கிறோம். ரேஷன் கடையைப் பற்றித் தெரியாதவர்கள் பற்றியெல்லாம் கவலையில்லை...’’ என்று வறுத்தெடுத்தார் ஐ.பெரியசாமி.


மோதல் பின்னணி என்ன?

இது குறித்து நம்மிடம் பேசிய திண்டுக்கல் மாவட்ட தி.மு.க சீனியர்கள், “சின்னமனூரில், பி.டி.ஆர் குடும்பத்துக்குச் சொந்தமாகப் பல நூறு ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் வழியாக பைப்லைன் அமைத்து, முல்லைப் பெரியாறு ஆற்றிலிருந்து பலர் விவசாயத்துக்குத் தண்ணீர் கொண்டு சென்றனர். சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுப்பதாக நீதிமன்றத்தில் பி.டி.ஆரின் சகோதரர் விஜயராஜன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், விஜயராஜன் சார்பாக தீர்ப்பானது. தி.மு.க-வின் தேனி மாவட்டப் பொறுப்பாளரான திண்டுக்கல் ஐ.பெரியசாமியிடம் அந்த விவசாயிகள் முறையிட்டார்கள். தேனி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஐ.பி., விவகாரத்தை முதல்வர் கவனத்துக்கும் கொண்டு சென்றார். தங்களுக்கு எதிராக ஐ.பெரியசாமி செயல்பட்டதாக நினைத்து, பி.டி.ஆர் தரப்பு ஆத்திரத்தில் இருந்தது. அந்தக் கோபத்தில்தான் ‘கூட்டுறவுத்துறை செயல்பாடு திருப்தியில்லை’ என்றிருக்கிறார் பி.டி.ஆர்.

கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காகப் பல மாதங்கள் காத்திருக்கிறது. கூட்டுறவுச் சங்கங்களில் இன்றுவரை அ.தி.மு.க-வினர்தான் பதவியில் இருக்கிறார்கள். ஆட்சி அமைந்து ஒன்றரை வருடமாகியும், தி.மு.க-வினருக்குக் கூட்டுறவுப் பதவிகள்கூட கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் ஆளுநரின் காலதாமதம்தான் காரணம். கேள்வி எழுப்புவதாக இருந்தால், ஆளுநருக்கு எதிராகத்தான் பி.டி.ஆர் பேசியிருக்க வேண்டும். ஏற்கெனவே மனம் வெம்பிப்போயிருக்கும் ஐ.பெரியசாமியைச் சீண்டுவது தவறு” என்றனர் விலாவாரியாக.

“நோட் போட்டு அனுப்புவது சாதனையல்ல..!”

திண்டுக்கல் ஐ.பெரியசாமியை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சீண்டியதைத் தொடர்ந்து, முரசொலி அலுவலகத்தில் ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்ட அவசரக் கூட்டம் நடந்திருக்கிறது. அதில், ‘பி.டி.ஆரை யார் மூலமாகக் கண்டிப்பது?’ என ஆலோசித்திருக்கிறார்கள். அப்போது, “அவர்கிட்டல்லாம் என்னால பேச முடியாது. வேணும்னே இங்கிலீஷ்ல மட்டுமே பேசுவாரு. நீங்களே பேசிடுங்க” என்று ஒதுங்கிவிட்டாராம் எ.வ.வேலு. கடைசியில், திண்டுக்கல் ஐ.பெரியசாமியைச் சமாதானப்படுத்துவது என முடிவெடுத்து அவரைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அவரோ கொதித்தெழுந்துவிட்டார் என்கிறது அமைச்சர்கள் வட்டாரம்.

தி.மு.க சீனியர் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தவர் ஐ.பெரியசாமி. கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருப்பவர். அவரை, ஒரு பொதுமேடையில் வைத்து பி.டி.ஆர் சிறுமைப்படுத்திப் பேசியதை அமைச்சரவைக்குள் யாருமே ரசிக்கவில்லை. தன்னிடம் சமாதானம் பேசியவர்களிடம், ‘இதுவரை எத்தனை கட்சிக் கூட்டம் போட்டிருப்பாரு பி.டி.ஆர்... அந்தப் பையன் ஸ்கூலுக்குப் போகத் தொடங்கியபோது, நான் அரசியலுக்குள் வந்தவன். என் அனுபவம், வயசுக்காவது மரியாதை வேண்டாமா... இதுவரை அவரை அழைச்சு கட்சித் தலைமை கண்டிக்கவும் இல்லை’ என்று பொரிந்து தள்ளிவிட்டார். அவர் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை.

ஒவ்வொரு மாதமும் தான் ‘க்ளியர்’ செய்த ஃபைல்களின் எண்ணிக்கையைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார் பி.டி.ஆர். ஃபைல்களுக்கு ‘நோட்’ போட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கே திருப்பி அனுப்புவது சாதனையல்ல. அதைத்தான் வேண்டுமென்றே செய்துவருகிறார் பி.டி.ஆர். சீனியர் அமைச்சர்களான எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோருக்கே இந்த நிலைமைதான். அவர்கள் அனுப்பிய சில ஃபைல்களின் மீதும் ஒரு கேள்வியைக் கேட்டு கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்பியிருக்கிறார். கலைஞர் காலத்தில்கூட இந்த வழக்கம் கிடையாது. ‘சரி, தவறு தாண்டி, அவரது ஈகோவில்தான் அப்படிச் செய்துவருகிறார். இவர் இப்படி ஃபைல்களைத் தாமதப்படுத்துவதால் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் காலதாமதமாகிறது’ என விவகாரம் முதல்வர் வரை சென்று பஞ்சாயத்தும் ஆகியிருக்கிறது. எல்லோரும் தன் முன்னால் வந்து நிற்க வேண்டும், தன்னுடைய பதிலுக்காகத் தவம்கிடக்க வேண்டுமென்ற ‘பண்ணையார்’ மனோபாவம்தான் பி.டி.ஆரிடம் மேலோங்கி நிற்கிறது.

ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சக்கரபாணி, மூர்த்தி, கே.என்.நேரு
ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சக்கரபாணி, மூர்த்தி, கே.என்.நேரு

“பண்ணையார்தனம் பண்றாரு பழனிவேல் தியாகராஜன்!”

திண்டுக்கல் ஐ.பெரியசாமியை பி.டி.ஆர் தாக்கிப் பேசிய பிறகு, கட்சித் தலைமையிடமே சீனியர்கள் பலர் கொதித்துவிட்டனர். ‘எல்லார்கிட்டயும் பண்ணையார்தனம் பண்றாரு பழனிவேல் தியாகராஜன். அதை அவரோட வெச்சுக்கச் சொல்லுங்க. பதிலுக்கு நாங்களும் காட்ட ஆரம்பிச்சா, கட்சிக்குத்தான் கெட்ட பெயர்’ என அவர்கள் காட்டிய முறைப்பில், முதல்வரும் பி.டி.ஆர் மீது அப்செட்தான். அமைச்சரவையிலிருந்து பி.டி.ஆரை நீக்க திட்டம் வகுக்கும் ஓர் அணியும் உருவாகியிருக்கிறது. அமைச்சர்கள் மூர்த்தி, சக்கரபாணி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு எனப் பலரும் பி.டி.ஆருக்கு எதிராகத் திரண்டு நிற்பதால், பி.டி.ஆரின் நிதியமைச்சர் பதவி குறிவைக்கப்பட்டிருக்கிறது. `குறைந்தபட்சம் அவரை வேறு துறைக்காவது மாற்றுங்கள்’ என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் சீனியர்கள்.

பி.டி.ஆர்-மீது நாங்கள் ஊழல் குற்றச் சாட்டுகளைச் சுமத்தவில்லை. ஆனால், அவரது அகங்காரமான பேச்சு, அதிமேதாவித்தன நடவடிக்கை, பண்ணையார் மனோபாவத்தைத்தான் விமர்சிக்கிறோம். கட்சிக்காரங்க எல்லாரும் அறிஞர் அண்ணா, கலைஞர், தளபதினுதான் மேடையில பேசுவோம். ஆனா இவரு, ‘என் தாத்தா, என் அப்பா, நான்’னுதான் எப்பவும் பேசுறாரு. சமூகநீதிக்கே தன் குடும்பம்தான் அடிப்படைங்கிற ரேஞ்சுல பேசுனா, கட்சிக்காரன் எப்படி ரசிப்பான்... சொந்தக் கட்சிக்குள் தனக்கெதிராக எழும் இந்தக் குரல்களைக் கருத்தில்கொண்டு, பி.டி.ஆர் தன் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அதை முதல்வரிடமோ, அமைச்சரவைக் கூட்டத்திலோ பேசியிருக்கலாம். பொதுவெளியில் பேசியதால், கட்சியின் இமேஜ் பாதிக்கப்பட்டிருப்பதோடு, எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கும் இரை போட்டிருக்கிறார் பி.டி.ஆர்” என்றனர்.

தி.மு.க அமைச்சரவைக்குள் இப்போதுதான் தீப்பொறி விழுந்திருக்கிறது. உரிய நேரத்தில் அதை முதல்வர் அணைக்கவில்லையென்றால், பற்றி எரியப்போவது உறுதி!