அலசல்
Published:Updated:

இடறிய எடப்பாடி... டபுள் கேம் பன்னீர்!

இடறிய எடப்பாடி... டபுள் கேம் பன்னீர்!
பிரீமியம் ஸ்டோரி
News
இடறிய எடப்பாடி... டபுள் கேம் பன்னீர்!

எடப்பாடி பழனிசாமி சாதுர்யமாகச் செயல்பட்டாலும், சில நேரங்களில் இடறிவிடுகிறார்.

தமிழக அரசியலின் ‘ஹாட் டாபிக்’காக மாறியிருக்கிறார் சசிகலா. அவருக்கு அளிக்கப்பட்ட மிக நீண்ட வரவேற்பு, அ.தி.மு.க தொண்டர்களையும் தாண்டி பொதுமக்களின் மத்தியிலும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கலவையான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. “தமிழக மக்கள் மத்தியில் இப்படி சசிகலா பேசுபொருளாக மாறியதற்குக் காரணமே முதல்வர் பழனிசாமி செய்த சில தவறுகள்தான்’’ என்று பொருமுகிறார்கள் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலர். “நாளிதழ்களில் சிறிதாக வர வேண்டிய சசிகலாவின் ரிலீஸ் செய்தியை, தனது பதற்றத்தால் முதல் பக்கத்துக்கு வரவழைத்துவிட்டார் எடப்பாடி” என்கிற விமர்சனம் கட்சிக்குள்ளேயே எழுந்திருக்கிறது. அதேசமயம், “முதலில் ‘விசுவாச’ விளம்பரம் கொடுத்தது, அடுத்தடுத்த நாள்களில் ‘யாருக்கும் யாரும் கொத்தடிமை இல்லை’ ட்வீட் தட்டியது, சசிகலா விஷயத்தில் நேரடியாகக் கருத்து சொல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்ப்பது என்று டபுள் கேம் ஆடுகிறார் பன்னீர்செல்வம்” என்கிற குரல்களும் கட்சிக்குள் எழுந்துள்ளன. என்னதான் நடக்கிறது அ.தி.மு.க முகாமில்? சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

“எடப்பாடி பழனிசாமி சாதுர்யமாகச் செயல்பட்டாலும், சில நேரங்களில் இடறிவிடுகிறார். உதாரணத்துக்கு, சசிகலா மீது புகார் கொடுக்க டி.ஜி.பி-யிடம் அமைச்சர்களை அவர் அனுப்பியபோதே அவரது பதற்றம் அப்பட்டமாக வெளிப்படத் தொடங்கிவிட்டது. ‘அவர்தானே உள்துறையைக் கையில் வைத்திருக்கிறார்... அப்படியிருக்க, டி.ஜி.பி-யைச் சந்திக்க அமைச்சர்களை ஏன் அனுப்ப வேண்டும்?’ என்கிற கேள்வி தொண்டர்கள் பலருக்கும் எழுந்திருக்கிறது. இந்தப் பதற்றத்தால், ‘அ.தி.மு.க உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் யாரோ ஒருவரின் காரில் சசிகலா பயணித்தால் என்ன செய்வது?’ என்கிற அடிப்படை யோசனைகூட அவருக்குத் தோன்றாமல் போய்விட்டது. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்கே அமைச்சர்கள் தடுமாறிய காட்சிகள் மீம்ஸ்களாக சமூக வலைதளங்களைத் திணறடித்தன. ‘உங்களை ஒண்ணும் பண்ண மாட்டோம். பயப்படாதீங்க’ என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் கிண்டலடிக்கும் அளவுக்கு இதன் மூலம் எடப்பாடி தனது இமேஜை சரித்துக்கொண்டுவிட்டார்.

இடறிய எடப்பாடி... டபுள் கேம் பன்னீர்!

பதற்றத்தால் பெரிதான பிம்பம்!

சிறையிலிருந்து சசிகலா ரிலீஸான ஜனவரி 27-ம் தேதி, அவசர அவசரமாக ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதியை ஒட்டித்தான் இந்த நினைவிடத்தைத் திறப்பதற்கு முதலில் திட்டம் வகுத்தார்கள். இந்த விழாவில் டெல்லி பா.ஜ.க தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களையெல்லாம் அழைத்து வந்து, தனது ஆளுமையை நிலைநாட்ட வியூகம் வகுத்திருந்தார் எடப்பாடி. ஆனால், சசிகலா பற்றிய பதற்றத்தால் நினைவிடத்தை அவசரமாகத் திறந்தார்கள். திறந்த வேகத்திலேயே, சசிகலா அஞ்சலி செலுத்த வந்துவிடுவாரோ என்று பதறிப்போய் மூடினார்கள். இந்தப் பதற்றமே சசிகலாவின் பிம்பத்தைப் பெரிதாகக் காட்டிவிட்டது.

ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வேதா இல்லம் ஜனவரி 28-ம் தேதி நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. சசிகலா ஒருவேளை அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழையக்கூடும் என்று கணக்கு போட்டு ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று நினைவு இல்லத்தைத் திறந்தார் எடப்பாடி. நினைவு இல்லம் தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருப்பதால், பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் எடப்பாடி அரசுக்குக் குட்டுவைத்ததுதான் மிச்சம்.

அமைச்சர்களின் புகாரையடுத்து, சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் கிருஷ்ணகிரியில் முகாமிட்டு, தமிழக எல்லையில் சசிகலா காரில் கொடியுடன் வரும்போது நடவடிக்கை எடுக்கக் காத்திருந்தார். அதேசமயம் இந்த விவகாரத்தில், பெங்களூரு ரிசார்ட்டில் தங்கியிருந்த சசிகலாவுக்கு நேரில் நோட்டீஸ் தராமல் விட்டுவிட்டனர். இந்த பாயின்ட்டைப் பிடித்துக்கொண்ட சசிகலா, அ.தி.மு.க பிரமுகர் ஒருவரின் காருக்கு மாறி கட்சிக்கொடியுடன் பயணித்து அ.தி.மு.க தலைவர்களை திகிலடையச் செய்துவிட்டார். இதை போலீஸுமே எதிர்பார்க்கவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகளைச் சரியாக சசிகலா சென்னை கிளம்புவதற்கு முதல்நாள் அரசுடைமை ஆக்கினார்கள். நியாயப்படி பார்த்தால், 2017-ம் ஆண்டே இதற்கான உத்தரவு பிறக்கப்பட்டிருந்தும் பெரிதாக நடவடிக்கை எடுக்காமல் கோட்டைவிட்டவர்கள், சசிகலா வரும் நேரத்தில் இதைச் செயல்படுத்தினார்கள். இந்த நடவடிக்கை, மன்னார்குடி குடும்பத்தைப் பார்த்து எடப்பாடி பயப்படுகிறாரோ என்கிற தோற்றத்தை உருவாக்கிவிட்டது. இதுவும் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது.

எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்தில் அ.ம.மு.க கொடிக்கம்பத்தை அந்தக் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் லக்கி முருகன் ஜனவரி 28-ம் தேதி அமைத்திருக்கிறார். அந்தக் கொடிக்கம்பம் நடைபாதைக்கு இடையூறாக இருப்பதாக எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களான கீதா, ராதா ஆகியோர் போலீஸில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அந்தக் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. ஆனால், மீண்டும் அதே இடத்தில் கொடிக்கம்பத்தை பிப்ரவரி 1-ம் தேதி லக்கி முருகன் அமைத்துவிட்டார். முதல் சம்பவம் நடைபெற்றபோதே ராமாபுரம் தோட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு போட்டு, லக்கி முருகன் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எம்.ஜி.ஆரின் வாரிசுகளை வைத்தே சசிகலாவுக்கு எதிராக அறிக்கைவிட வைத்திருக்கலாம். இவை எதையுமே எடப்பாடி செய்யவில்லை. போலீஸ் நடவடிக்கை எடுக்காததால், இப்போது நீதிமன்றப் படியேறியிருக்கிறார்கள்

எம்.ஜி.ஆரின் வாரிசுகள்” என்றவர்கள் வேறு சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்...

இடறிய எடப்பாடி... டபுள் கேம் பன்னீர்!

இடறிய எடப்பாடி!

“சில நாள்களுக்கு முன்பு முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்த அமைச்சர்கள் சிலர், ‘சசிகலாவும் ஜெயலலிதாவும் ஒன்றா என்கிற கேள்வியை நாம் மக்கள் முன்பாகவைக்கத் தவறிவிட்டோம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி பல போராட்டங்களை நடத்தியவர் ஜெயலலிதா. காவிரிக்காக உண்ணாவிரதம்கூட இருந்தார். இது போன்ற மக்கள் போராட்டங்களில் சசிகலா பங்கெடுத்திருக்கிறாரா, மக்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஜெயலலிதாவுடன் இருந்தார் என்பதற்காக கட்சியை அவரிடம் எப்படித் தாரை வார்க்க முடியும்? இது போன்ற கேள்விகளை மக்களிடம் கொண்டுசேர்த்தால்தான், சசிகலா மீது ஏற்படும் அனுதாபத்தை நம்மால் உடைக்க முடியும்’ என்று விளக்கமாக எடுத்துரைத்தனர். ஆனால், அதற்கும் எடப்பாடி எந்த பதிலும் சொல்லவில்லை.

மற்றொரு விஷயத்திலும் எடப்பாடி கோட்டைவிட்டுவிட்டார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்றும் பெண்கள் மத்தியில் ஒரு சந்தேகம் நிழலாடுகிறது. இதை எடப்பாடி தரப்பு ஊதிப் பெருக்கியிருந்தால், அது மக்களிடத்தில் பெரிதாக எடுபட்டிருக்கும். ‘ஜெயலலிதா அப்போலோ மருத்துவனையில் அட்மிட் செய்யப்பட்டபோது விளக்குகள் ஏன் அணைக்கப்பட்டன... முதல்வரின் செக்யூரிட்டிகளைத் திரும்பிப் போகச் சொன்னது ஏன்?’ என்பது போன்ற கேள்விகளை யாருமே எழுப்பவில்லை. ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடியும் தறுவாயில் இருக்கிறது. அந்த விசாரணையில் சசிகலா மீது சந்தேகம் இருக்கிறது என்கிற தகவலைப் பரப்பியிருக்கலாம். குறைந்தபட்சம் கமிஷனின் இடைக்கால அறிக்கையையாவது தாக்கல் செய்ய வைத்திருக்க வேண்டும். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். சசிகலாவுக்கு எதிரான கருத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு புகார் சுமத்தப்பட்டதற்குக் காரணமே சசிகலாவும், அவரின் குடும்பத்தினரும் செய்த ஊழல்கள்தான். இதனால்தான், மீளாத பழிச்சொல்லுக்கு ஜெயலலிதா ஆளானார். அவரைச் சிறைச்சாலையில் தள்ளியதுடன், கடும் மன உளைச்சலையும் மன்னார்குடி குடும்பம் ஏற்படுத்தி அவரை மரணப் படுக்கை வரை தள்ளிவிட்டது’ என்றெல்லாம் சசிகலாவுக்கு எதிராகப் பிரசாரத்தை கொண்டு போயிருக்க வேண்டும். இவை எதையுமே செய்யத் தவறிவிட்டனர்.

இப்போதே இவ்வளவு பதற்றம் என்றால், நாளை சசிகலா மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க அறைகூவல் விடுத்தால் அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் எடப்பாடி? சசிகலாவின் மிச்சமிருக்கும் சொத்துகளையும் கைப்பற்றுவார்களா? மொத்தத்தில் சசிகலா என்னும் மாயவலையில் எடப்பாடி இடறிவிட்டார்” என்றனர் விரிவாக.

ஆனால், இவை அனைத்தையும் அப்படியே மறுத்து பேசும் எடப்பாடியின் நெருங்கிய ஆதரவாளர்கள் சிலரோ, “இவை எல்லாமே எடப்பாடியின் ராஜதந்திர வியூகங்களே. சசிகலாவுக்கு எதிராக இத்தனை நடவடிக்கைகளை எடப்பாடி எடுக்கவில்லையென்றால், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்வது, நினைவு இல்லத்தில் கூட்டத்தைக் கூட்டுவது என்று இன்னும் பெரிய அளவில் ஸ்கோர் செய்திருப்பார் சசிகலா. தவிர, அ.தி.மு.க கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என்று அமைச்சர்களை வைத்து புகார் கொடுக்கவைத்ததும் சட்டப்படியான நடவடிக்கையே. இவை அனைத்துமே சசிகலாவை உளவியல்ரீதியாக பலவீனப்படுத்தும் முயற்சிகள். அதேசமயம், சசிகலாவைப் பற்றிப் பெரிதாக எடப்பாடி எங்கும் நேரடியாகப் பேசவில்லை.

சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ‘தினகரனைப் பற்றிப் பேசும் நீங்கள் சசிகலாவைப் பற்றி ஏன் பேசுவதில்லை?’ என்று செய்தியாளர்கள் கேட்டபோதுகூட, ‘சசிகலா வருகை குறித்து ஏற்கெனவே துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்துவிட்டனர். அதனால், இது பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. தினகரன் எங்கள் கட்சியில் இருந்தார். பிறகு அதிலிருந்து பிரிந்து, 18 எம்.எல்.ஏ-க்களுடன் சென்று தனிக்கட்சி ஆரம்பித்தார். அதனால், அவரைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. ஆனால், சசிகலா யார்... கட்சியில் இல்லாத ஒருவரைப் பற்றி ஏன் பேச வேண்டும்?’ என்றவர், சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது குறித்தும், ‘கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது’ என்று சாதுர்யமாக பதில் அளித்தார். மேலும், எடப்பாடியின் நோக்கமே சசிகலாவையும், தினகரன் தரப்பினரையும் மோதவிட வேண்டும். அவர்களுக்குள் கலகமூட்டி அந்தக் கும்பலை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்பதுதான். அதற்கான வேலைகள் தீவிரமாக நடக்கின்றன” என்றார்கள் விளக்கமாக!

இடறிய எடப்பாடி... டபுள் கேம் பன்னீர்!

டபுள் கேம் பன்னீர்

எடப்பாடியின் பதற்றத்துக்குக் காரணம் சசிகலா மட்டுமல்ல... துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள் கட்சியின் உள்விவரங்களை அறிந்தவர்கள். பன்னீர் தன் பக்கம் இல்லை என்பதை எடப்பாடி உணர்ந்திருப்பதாலேயே, அதீத பதற்றம் அவரைத் தொற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய எடப்பாடியின் ஆதரவாளர்கள் சிலர், “பன்னீர்செல்வம் டபுள் கேம் ஆடுவது புதிதல்ல. ஏற்கெனவே எடப்பாடி அணியுடன் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, மறுபுறம் தினகரனுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தினகரனே ஒரு பேட்டியில் போட்டு உடைத்துவிடவும், பன்னீரின் டபுள் கேம் வெளிச்சத்துக்கு வந்தது. இன்றும் அதே ரூட்டில்தான் பயணிக்கிறார் பன்னீர். இப்போதும் அவர் தினகரன் தரப்புடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறார். சசிகலா போயஸ் கார்டனில் கட்டிவரும் வீட்டுக்குத் தனது சி.எம்.டி.ஏ மூலம் அங்கீகாரம் கொடுக்கும் பணிகளையும் கச்சிதமாகச் செய்தார். அதேசமயம், சிறைத் தண்டனை முடிந்து தமிழகம் திரும்பும்போது சசிகலா பேசிய பேச்சு முழுக்க பா.ஜ.க-வுக்கு எதிரானதாகக் கருதப்படுவதையும் அவர் உணர்ந்திருக்கிறார். டெல்லியைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதால், தன் மூத்த மகன் ரவீந்திரநாத்தை நெருக்கமாக்கிவிட்டு, அங்கும் பேசிவருகிறார்.

சமபலத்துடன் இரண்டு பேர் மோதும்போது, ‘ஜெயிப்பவர் பக்கம் சாய்ந்துவிடலாம்’ என வேடிக்கை பார்ப்பவர்கள் நினைப்பார்களே... அந்த மனநிலையில்தான் பன்னீர் இருக்கிறார். அதனால்தான் இன்று எடப்பாடி பக்கமும் நிற்காமல், சசிகலா பக்கமும் தாவாமல் டபுள் கேம் ஆடுகிறார். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடுத்தவர், இன்று அவருக்கு எதிராக ஒரு வார்த்தைகூடப் பேச மறுக்கிறார். இவ்வளவுக்கும் பன்னீர் துணை முதல்வர் மட்டுமல்ல, அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரும்கூட. கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் என்று வடமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் சசிகலாவை விமர்சித்துப் பேசுவதால், தென்மாவட்டங்களில் பிரச்னையாகுமோ என்கிற கவலை தொண்டர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இதை பன்னீர்தான் துடைத்தெறிந்திருக்க வேண்டும்.

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், ‘பன்னீர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் ஏதோ திட்டத்துடன் இருக்கிறார்’ என்று சொல்லும் அளவுக்குத்தான் பன்னீரின் செயல்பாடுகள் இருக்கின்றன. தன் ஆளுமையை வெளிப்படுத்தும்விதமாக தனி விளம்பரங்கள் செய்வது, சசிகலாவை விமர்சிப்பதுபோல ‘யாரும் யாருக்கும் கொத்தடிமை இல்லை’ என்கிறரீதியில் கொத்தடிமைகள் ஒழிப்பு தினத்தில் ட்வீட் போடுவது என்று இரட்டை நிலைப்பாட்டை பன்னீர் எடுத்திருப்பது கட்சிக்குள் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

இதில் எடப்பாடி தரப்பிலும் சில குறைகள் உள்ளன... ஆரம்பத்திலேயே பன்னீரைத் தனக்கு இணக்கமாக வைத்துக்கொள்ளத் தவறிவிட்டார் எடப்பாடி. பல வகைகளில் அவரைப் புறக்கணித்தார். நீண்ட இழுபறிக்குப் பிறகுதான் பன்னீர் தரப்பு கோரிக்கையான வழிகாட்டுதல்குழு அமைக்கப்பட்டது. அதிலும் தன் ஆதரவாளர்களை மெஜாரிட்டி எண்ணிக்கையில் உறுப்பினர்களாக நியமித்துக்கொண்டார் எடப்பாடி. ஆங்கிலத்தில், ‘கேக்கில் எல்லா பீஸ்களையும் நாமே சாப்பிட நினைக்கக் கூடாது’ என்றொரு பழமொழி உண்டு. அதை அப்படியே சாப்பிட எண்ணியதால் வந்த வினையைத்தான் எடப்பாடி இப்போது அனுபவிக்கிறார். இன்னும் சொல்லப்போனால், பன்னீருக்கு எதிராக தேனி மாவட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வனை எடப்பாடி வளர்த்திருக்க வேண்டும். தங்கத்தைக் கையில் எடுத்து, அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்திருந்தால், தேனி மாவட்டத்தில் பன்னீருக்குக் கடும் நெருக்கடியை அவர் கொடுத்திருப்பார். இந்த வாய்ப்பை எடப்பாடி நழுவவிட்டதால், தங்கம் தி.மு.க-வுக்கு நழுவிப் போய்விட்டார். இப்போது பன்னீரைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார் எடப்பாடி” என்றார்கள் விரிவாக.

சசிகலா அடுத்து என்ன செய்வார், அ.தி.மு.க மந்தையிலிருந்து எத்தனை ஆடுகள் வழிமாறிச் செல்லும், அவை ஆளுங்கட்சியில் என்ன அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்தே பன்னீரின் பல்ஸும், எடப்பாடியின் எதிர்காலமும் இருக்கும்.