Published:Updated:

``கே.டி.ராகவன் செய்த காரியம் ; சீமான் பேச்சு; பி.டி.ஆருக்கு 'ஸ்போக்கன் தமிழ்' " - விளாசும் ராதாரவி!

``சீமானின் பேச்சு இன்றைய இளைஞர்களை ஈர்த்துவருகிறது. அதனால்தான் தேர்தலுக்குத் தேர்தல் அவரது கட்சியின் வாக்குவங்கி அதிகரித்துவருகிறது'' என்கிறார் நடிகரும் பா.ஜ.க மூத்த தலைவருமான ராதாரவி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2021 சட்டமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க-வுக்கு வாக்குச் சேகரித்த, நடிகர் ராதாரவியின் பிரசாரங்கள் தேர்தல் களத்தையே தகிக்கவைத்தன. ஆனால், அண்மையில் `தமிழக பா.ஜ.க-வில் கசப்புடன்தான் இருக்கிறேன்' என்று உள்ளக்கிடக்கையை வார்த்தைகளாக வெளிக்கொட்டியிருக்கிறார் ராதாரவி. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கியிருக்கும் இந்த நேரத்தில் அவரை நேரில் சந்தித்தேன்...

''சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் நீண்ட அனுபவமுள்ள மூத்த தலைவர் நீங்கள்... உங்களைவிட இளையவர்களுக்கெல்லாம் பொறுப்புகள் கொடுக்கப்படும்போது, உங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையா?''

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

''இல்லையில்லை... எனக்கும் பா.ஜ.க நியமன குழு உறுப்பினர் என மரியாதையான பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள்தான். பா.ஜ.க என்பது முற்றிலும் வேறுபட்ட மிகப்பெரிய தேசியக் கட்சி. எனவே அவர்களது அணுகுமுறையும் வித்தியாசமானதாகவே இருக்கும். என்னைப் போன்ற ஆட்களைப் பயன்படுத்திக்கொள்வதில், தி.மு.க - அ.தி.மு.க என இந்த இரண்டு கட்சிகளின் அணுகுமுறையும் ஏறத்தாழ ஒன்றுபோல்தான் இருந்தது. ஆனால், பா.ஜ.க இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. காயத்ரி ரகுராமுக்குப் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள் என்றால், அவர் எனக்கு முன்பே கட்சியில் சேர்ந்திருந்தவர். நான் கட்சியில் சேர்ந்து இரண்டு வருடங்கள்தான் ஆகின்றன. இந்த நிலையில், 'காயத்ரி ரகுராமுக்கு மட்டும் ஏன் பொறுப்பு கொடுத்தீர்கள்...' என்று சண்டையா பிடிக்க முடியும்?''

''உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில், பேசுவதற்கான அழைப்புகள் வந்திருக்கிறதா?''

``அதெல்லாம் யார் யார் எங்கே எப்போது பேச வேண்டும் என்றெல்லாம் சிறப்பாகப் பட்டியல் போடுகிறார்கள்தான். ஆனால், `ஆன்லைனில் மீட்டிங் பேசுங்கள்' என்கிறார்கள். கொரோனா காலத்தில் ஆன்லைனில் பேசலாம். ஆனால், இப்போது எல்லாமே கிட்டத்தட்ட இயல்புநிலைக்கு வந்துவிட்ட பிறகும் ஆன்லைனில் எப்படி பேசிக்கொண்டிருக்க முடியும்? அதைவிடப் பேசாமல் இருப்பதே பெஸ்ட்! ஏனெனில், யூடியூப்பில் பேசினால்கூட, நம் பேச்சை எத்தனை பேர் கேட்டிருக்கிறார்கள் என்று எளிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆன்லைனில் பேசினால், எத்தனை பேர் நம் பேச்சைக் கேட்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியவில்லையே... இதெல்லாம்தான் கஷ்டமாக இருக்கிறது. இதுவே திராவிடக் கட்சிகளில் இருந்திருந்தால், உடனடியாக அவர்களே கூப்பிட்டு `உனக்கென்னப்பா பிரச்னை' என்று கேட்டு நிவர்த்தி செய்வார்கள். ஆனால், இங்கே யாரிடம் பிரச்னையைச் சொல்வதென்றே தெரியவில்லை! அதுசரி... பா.ஜ.க ஒரு தேசியக் கட்சி... அதனால் இது போன்ற பிரச்னைகள் இருக்கும்தான். இதெல்லாம் தெரிந்துதானே நாம் போய்ச் சேர்ந்தோம்!''

அண்ணாமலை
அண்ணாமலை

``பா.ஜ.க- அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்துவரும் பா.ம.க., நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை ஆதரித்திருக்கிறதே?''

``நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். நீட் தேர்வுக்காக வாதாடிய வழக்கறிஞர் நளினி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி. `எந்தக் கொம்பன் வந்தாலும் நீட் தேர்வை நீக்க முடியாது' என்று அவரே சொல்கிறார். நீட்டை ஒழிக்க முடியும் என்று யாராவது மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல முடியுமா? ஆக, இதெல்லாம் சும்மா வெறும் சம்பிரதாய அரசியல். இதைவைத்தே தி.மு.க-வினர் இந்த ஐந்து வருடங்களையும் ஓட்டிக்கொள்ளலாம்... அவ்வளவுதான்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அண்மைக்காலங்களில், கே.டி.ராகவன், சதானந்த கவுடா என பா.ஜ.க தலைவர்கள் குறித்து அடுத்தடுத்து சர்ச்சைச் செய்திகள் வெளியாகியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''சதானந்த கவுடா யாரென்றே எனக்குத் தெரியாது. கே.டி.ராகவனை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் செய்த காரியம் வருந்தத்தக்கதுதான். அதேசமயம், இந்த விஷயத்தில் படம் எடுத்தவர்கள் மீது குற்றம் சொல்வதா, கே.டி.ராகவன் என்ன பேசினார், வீடியோவை வெளியிட வேண்டும், வேண்டாம் என்றெல்லாம் யார் சொன்னார்கள்... இப்படி நிறைய குழப்பங்கள் வருகின்றன. எனவேதான் இந்த விஷயத்தில் நான் தலையிடவே இல்லை! எது எப்படியிருந்தாலும் தப்பு செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்படுவார்.''

சீமான்
சீமான்

``சமீபகாலமாக 'தமிழ்த் தேசியம் - திராவிடம்' குறித்த சர்ச்சை அதிகமாக உச்சரிக்கப்பட்டுவருகிறதே... கவனித்தீர்களா?''

``நடைமுறை வாழ்க்கையில் இப்போது நாம் என்னவாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். மற்றபடி இது போன்ற பட்டிமன்றங்களையெல்லாம் இளைஞர்கள் காதுகொடுத்துக் கேட்பதாகத் தெரியவில்லை. அதேசமயம், சீமானின் பேச்சு இன்றைய இளைஞர்களை ஈர்த்துவருகிறது. அதனால்தான் தேர்தலுக்குத் தேர்தல் அவரது கட்சியின் வாக்குவங்கி அதிகரித்துவருகிறது. ஆனால், அதுவே எல்லோரையும் ஈர்த்திருந்தால், இன்றைக்கு சீமான்தானே முதலமைச்சராக வந்திருக்க வேண்டும்! எனவே, இது போன்ற மேடைப் பேச்சுகளையெல்லாம் ஏதோ கண்காட்சி பார்ப்பதுபோல், மக்கள் பார்க்கிறார்கள்; கைதட்டுகிறார்கள். அவ்வளவுதான்!''

``திராவிடக் கட்சிகளுக்கும் தேசியக் கட்சியான பா.ஜ.க-வுக்கும் இடையே என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?''

``திராவிட இயக்கம் என்ற வார்த்தையை கேரளா, ஆந்திரா, கர்நாடகா என எந்த மாநிலமும் பேசாத நிலையிலும்கூட, தமிழ்நாட்டில்தான் அது குறித்த பேச்சும், அதற்கு அடிப்படையாக வலுவான கட்சிகளும் இருக்கின்றன. என்னதான் நாங்கள் அரசியலுக்காக தி.மு.க - அ.தி.மு.க என திராவிடக் கட்சிகளை விமர்சித்தாலும்கூட, அந்தக் கட்சிகளின் வலிமையான கட்டமைப்பு - கட்டுப்பாடு பாராட்டக்கூடிய அம்சம். தி.மு.க-வில் நான் இருந்தபோது, நன்னிலத்தில் கட்சிக் கூட்டம். கூட்டத்தின் நடுவிலேயே உள்கட்சித் தகராறுகளால் இரண்டு குரூப்கள் அடித்துக்கொண்டனர். பாதியிலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டு நான் சென்னை திரும்பிவிட்டேன். போஸ்டரில் கட்சிக்காரர் ஒருவருடைய பெயரைச் சின்னதாகப் போட்டுவிட்டார்கள் என்றுதான் இவ்வளவு ரகளையும். உண்மையைச் சொன்னால், போஸ்டரில் பிரின்ட்டாகியிருக்கும் நூற்றுக்கணக்கான பெயர்களை யாருமே படிக்க மாட்டார்கள். ஆனாலும்கூட, `அந்த போஸ்டரில் ஏன் என் பெயரைச் சின்னதாக போட்டீர்கள் அல்லது ஏன் என் பெயரை போடாமல் விட்டுவிட்டீர்கள்' என்று சண்டையிட்டுக்கொள்ளும் அளவுக்கு தீவிரமாக இருப்பார்கள் கட்சிக்காரர்கள். இந்த அடிப்படைதான் அந்தக் கட்சி இன்றைக்கும் நிலைத்து நிற்பதற்குக் காரணம்.

கருணாநிதி
கருணாநிதி

இங்கே வந்ததும் கருணாநிதி கூப்பிட்டனுப்பினார். நேரில் போய் சந்தித்தேன்... `என்ன நடந்தது, அடித்துக்கொண்ட இரண்டு கோஷ்டிகளில் யார் மீது தவறு என்று சொல்...' என என்னிடம் கேட்டார். கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் ஆட்கள்தான் தவறு செய்துவிட்டார்கள். ஆனாலும் இதை எப்படித் தலைவரிடம் சொல்வது என்று நான் தயங்கித் தயங்கி நீட்டி முழங்கினேன். ஆனாலும் பிரச்னை என்னவென்று அவர் கண்டுபிடித்துவிட்டார். இதை ஏன் சொல்கிறேனென்றால்... போஸ்டரில் தன் பெயரைச் சின்னதாக பிரின்ட் செய்துவிட்டதற்காகக்கூட சண்டையிட்டுக்கொள்ளும் அளவுக்குக் கட்சி விஷயத்தில் தொண்டர்கள் காட்டுகிற ஆர்வமும், அந்தச் சண்டை குறித்து கட்சித் தலைவரே நேரில் அழைத்து விசாரிக்கிற அளவுக்கு அக்கறையுமாக இருப்பதுதான் திராவிடக் கட்சிகளின் அடிப்படை பலம். அதனால்தான் தி.மு.க-வில் சேருவதற்கு முன்பே, `ஸ்டாலின் முதல்வர் ஆவார்' என்று நான்தான் முதன்முதலில் பேசியிருந்தேன். அ.தி.மு.க-வில் நான் இருந்தபோது கட்சியின் பொதுக்குழுவுக்கு இரண்டு வாரத்துக்கு முன்பே எனக்கான அழைப்பிதழ் வந்துவிடும். அதேபோல், தி.மு.க-வில் இருக்கும்போது, `சிறப்பு அழைப்பாளர்' என்று குறிப்பிட்டே அழைப்பு கொடுப்பார்கள். என்னைப் போன்ற சினிமாக்காரர்களுக்கு நேர மேலாண்மை என்பது ரொம்பவும் முக்கியமானது. நிகழ்ச்சி குறித்த தகவல்கள் முன்னரே தெரிந்தால்தான் அதற்கேற்ப எங்கள் சொந்த நிகழ்ச்சிகளை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். ஆனால், இப்படியான நடைமுறைகள் தமிழக பா.ஜ.க-வில் இல்லை!''

`தினசரி வருமானம் ரூ.1,000 கோடி' முகேஷ் அம்பானியை முந்துவாரா கௌதம் அதானி? - டாப் 10 பணக்காரர்கள்!

``சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்று ஏற்கெனவே அடித்துக்கொண்ட பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் மறுபடியும் கூட்டணி சேர்ந்திருக்கின்றனவே?''

``இனி கூட்டணி கிடையவே கிடையாது, முடியவே முடியாது என்றெல்லாம் சொன்னவர்கள்கூட இன்றைக்குக் கூட்டணியில்தான் இருக்கிறார்கள். `கூட்டணியில் நீங்கள் இருந்ததால்தான் தோற்றோம்' என்று மாறி மாறி சிலர் சொன்னார்கள். அப்புறம், `அது அவரது தனிப்பட்ட கருத்து' என்றும் சொல்லிக்கொண்டார்கள்தான். அரசியலில் தனித்து நிற்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா? எனவே, இப்படியெல்லாம் சொல்லிக்கொள்வதும், மறுபடி கூட்டணி சேர்ந்துகொள்வதும், கட்சிவிட்டு கட்சி மாறுவது என எல்லாம் சகஜமான விஷயங்கள்தான்!''

``குறுகிய காலத்திலேயே 200-க்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கும் தி.மு.க தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``தி.மு.க-வினர் எப்போதுமே ஆரம்பத்தில் பாராட்டும்படியாகத்தான் செயல்படுவார்கள். வாக்கிங் போன இடத்தில் முதல்வர், பொதுமக்களோடு உரையாடுவதெல்லாம் பாராட்டுகிற அம்சம்தான். மற்றபடி காமராஜர் சொன்னதுபோல், ஆறு மாதங்கள் கழித்துத்தான் தமிழக அரசு பற்றி விமர்சனம் பண்ண முடியும்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அதற்கு முன்பே சொல்ல வேண்டுமென்றால், கடன் சுமை என்று இவர்களே வெள்ளை அறிக்கை கொடுத்துவிட்டு, `மகளிருக்குப் பேருந்துப் பயணம் இலவசம்' என்கிறார்கள். `நீட் தேர்வை ரத்து செய்வோம்’ என்று சொல்லிவிட்டு, இப்போது ரத்து செய்ய முடியவில்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வது, சட்டமன்றத்திலேயே `ஜெய்ஹிந்த்' வார்த்தையைச் சொல்லாமல் தவிர்ப்பது, ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது போன்ற விஷயங்களையெல்லாம் தி.மு.க-வினர் செய்யாமலிருப்பது நல்லது. அதனால்தான் தி.மு.க-விலுள்ள மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவனே, `ஜி.எஸ்.டி கூட்டத்துக்கு பி.டி.ஆர் போகாமல் இருந்தது தவறுதான்' என்கிறார்.

எதிர்க்கட்சியாக இருந்தவரையிலும் `பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர வேண்டும் என்று சொன்னவர்களே தி.மு.க-வினர்தான். ஆனால், ஆளுங்கட்சியான பிறகு `ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவரக் கூடாது' என்று சொல்கிறார்கள். இந்த அளவுக்கு மாற்றிப் பேசுவதற்கெல்லாம் எனக்கு அறிவு கிடையாது!

ஒன்றிய அரசு என்று இங்கிருக்கிறவர்கள் சொல்வதால், மத்திய பா.ஜ.க-வினர் யாராவது கோபப்பட்டார்களா... இல்லையே! அதனால்தான் தமிழ்நாடு கேட்கிற தடுப்பூசிகளையெல்லாம் மத்தியிலிருந்து அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள்.

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு `ஸ்போக்கன் தமிழ்' கற்றுக்கொடுத்தால் பரவாயில்லை... அந்த அளவுக்குத் தமிழைத் தப்புத் தப்பாக பேசுகிறார். மீண்டும் வருகிற டிசம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெறவிருக்கிறது. அப்போதும் போகாமல் இருப்பதற்கு எந்த நிகழ்ச்சியைக் காரணமாகக் காட்டப்போகிறாரோ அமைச்சர்... தெரியவில்லை!''

`சாதி பார்த்து வேண்டாம்; நான் தமிழர் என்பதற்காக வாக்களித்தால் போதும்!’ - நெல்லையில் சீமான்

``தமிழக பா.ஜ.க-வில் இருந்துகொண்டு, தி.மு.க-மீது அதிக அக்கறை காட்டுகிறீர்களே?''

``அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கடைசியாக தி.மு.க-வில் இருந்தபோது, சம்பந்தமே இல்லாத ஒரு முட்டாள்தனமான காரணத்துக்காக என்னைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தார்கள். என்னிடம் என்ன, ஏது என்று விசாரிக்காமல், அவர்களாகவே `தற்காலிகமாக நீக்குகிறோம்' என்று அறிவித்தால் எப்படி அதை நான் ஏற்றுக்கொள்ள முடியும்?

ராதாரவி
ராதாரவி

கட்சிக்காக எவ்வளவு உழைத்திருக்கிறோம்... கூப்பிட்டு ஒரு வார்த்தை என்னவென்று கேட்டிருக்கலாம்தானே? எனவேதான், 'தற்காலிகம் என்ன... நான் நிரந்தரமாகவே தி.மு.க-விலிருந்து விலகிக்கொள்கிறேன்' என்று சன் டி.வி-க்கே போன் போட்டு செய்தி சொல்லிவிட்டு வெளியேறிவிட்டேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு