Published:Updated:

''இப்போது பதிவிட்டாலும் நல்ல பால் பாக்கெட் என் வீடு தேடி வரும்!'' - கெத்துகாட்டுகிறார் எஸ்.வி.சேகர்

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

``அன்றைக்கு எனது பதிவை எடப்பாடி பழனிசாமி பார்த்துவிட்டு வந்து பால் பாக்கெட் கொடுக்கவில்லை! 'பால் பாக்கெட் கெட்டுப்போய்விட்டது' என இப்போது நான் பதிவிட்டாலும்கூட, நல்ல பால் பாக்கெட் என் வீடு தேடி வரும்!'' என்கிறார் எஸ்.வி.சேகர்.

'ஊழல் - பாலியல் குற்றச்சாட்டு' என தமிழக பா.ஜ.க-வைச் சுற்றி சர்ச்சை சூறாவளி சுழன்றடித்துவரும் வேளையில், இனிய அதிர்ச்சியாக மத்திய இணை அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்! இந்தநிலையில், தமிழக பா.ஜ.க குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுவரும் எஸ்.வி.சேகரை நேரில் சந்தித்தேன்...

''தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி செய்துவருகிற பா.ஜ.க., தமிழக அளவிலும் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருக்கிறதுதானே?''

கமலாலயம்
கமலாலயம்

''இல்லையில்லை... பா.ஜ.க என்பது நாடு முழுக்க 10 கோடி உறுப்பினர்களைக்கொண்ட மாபெரும் கட்சி. ரிலையன்ஸ் பெரிய கம்பெனிதான்... ஷேர் மார்க்கெட்டில் ரிலையன்ஸ் பங்குகளெல்லாம் நல்ல விலைக்குப் போகும். ஆனாலும்கூட அதே ரிலையன்ஸில் ஆங்காங்கே சில பிராஞ்ச்சுகள் சரிவரப் போகாமல் திணறிக்கொண்டிருக்கும். அதைப்போல அகில இந்திய அளவில் பா.ஜ.க பெரிய கட்சியாக இருந்தாலும் அதில், தமிழ்நாடு பிராஞ்ச்சில் சரிவர வேலைகள் நடைபெறவில்லை. இந்த எல்லா தவறுகளுக்கும் எல்.முருகனை மட்டுமே நான் குற்றம் சொல்ல மாட்டேன். கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், சி.டி.ரவி என எல்லோருக்குமே இதில் பொறுப்பு உண்டு!''

''தமிழக பா.ஜ.க மீது குற்றச்சாட்டுவைக்கிற நீங்கள், இதுவரை கட்சிக்காக என்ன செய்துவிட்டீர்கள்?''

''பா.ஜ.க என்பது தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக வர வேண்டிய கட்சி. அது திருமாவளவனுக்கு மாற்றாக வர வேண்டிய கட்சி அல்ல. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே, தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு ரேஷன் கடை வாசலிலும், பிரதமர் மோடி செய்த மக்கள்நலத் திட்டங்களை ஃப்ளெக்ஸ் பேனர்களாக வைக்கச் சொல்லி கட்சிக்கு நான் ஆலோசனை சொன்னேன். இதைச் செய்திருந்தால், கிராமத்திலுள்ள அடித்தட்டு மக்கள் வரையிலும் பிரதமர் மோடியின் சேவை குறித்த விழிப்புணர்வு சென்றடைந்திருக்கும். ஆனால், என்னுடைய ஆலோசனையை யாருமே கேட்கவில்லை. 'தன்னைவிட அறிவாளியும் பிரபலமானவரும் கட்சியில் இருக்கக் கூடாது' என்று வெறும் அரசியல்வாதியாக மட்டுமே இருப்பவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் 8 மணிக்கு கட்சியில் சேர்ந்தவருக்கு 8:30 மணிக்கு சீட் கொடுத்துவிடுகிறார்கள்.''

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

''தமிழக பா.ஜ.க-வினரும் எஸ்.வி.சேகர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனரே?''

''நான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர விசுவாசி. பா.ஜ.க-வின் உறுப்பினர் என்ற வகையில், தமிழ்நாட்டில் கட்சி நன்றாகப் பிரகாசிக்க வேண்டும் என்ற எண்ணம்கொண்டவன். அதனால்தான் கட்சி குறித்த ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்துவருகிறேன். ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர்களோ கட்சியை மக்களிடையே கொண்டு போகாமல், ஃபைனான்ஸ் கம்பெனி மாதிரி கமலாலயத்துக்குள்ளேயே நடத்திக்கொண்டிருக்கிறார்கள்! அதனால்தான் `எஸ்.வி.சேகர், எங்களை மதிக்க மாட்டேனென்கிறார்’, `தேர்தல் பிரசாரத்துக்கு வந்தா பணம் கேட்கிறார்’ என்றெல்லாம் என்னைப் பற்றி டெல்லிக்கு ஓடோடிப்போய் வத்திவைக்கிறார்கள். இந்த ரெண்டும் கெட்டான் தலைவர்களுக்கெல்லாம் நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

எப்போதுமே கூட்டணியைப் பொறுத்தவரையில், நல்ல கடலையை அவர்கள் வைத்துக்கொண்டு சொத்தைக் கடலையை கூட்டணியிலுள்ள கட்சிகளுக்குக் கொடுத்துவிடுவார்கள். அப்படித்தான் இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத பல தொகுதிகளைக் கொடுத்துவிட்டார்கள். ஆனால், தமிழக பா.ஜ.க-வின் பொறுப்பிலுள்ளவர்கள் இது பற்றியெல்லாம் எந்த அக்கறையும் கொள்வதில்லை. நான் துணிச்சலாகக் கேட்கிறேன்... அவ்வளவுதான்!''

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

''அண்மைக்காலமாக தி.மு.க-வினர் மீது அதீத பாசம் காட்டுகிறீர்களே என்ன காரணம்?''

''எனக்கு எல்லாத் தரப்பிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். இதில் கருத்தொற்றுமை உள்ளவர்கள், கருத்தொற்றுமை இல்லாதவர்கள் என இரு தரப்புமே அடக்கம். என்னைப் பற்றி சரிவரத் தெரியாதவர்கள்தான் `எஸ்.வி.சேகரா... அவர் அப்படி... இப்படி’ என்று குறை சொல்வார்கள். நான் டெல்லி அரசியல் பாணியைக் கடைப்பிடிக்கிறவன். நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும்போது, பா.ஜ.க - காங்கிரஸ் தலைவர்கள் நேருக்கு நேர் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக்கொள்வார்கள். எல்லாம் முடிந்த பிறகு கேன்டீனில் ஒரே டேபிளில் உட்கார்ந்து இரண்டு கட்சித் தலைவர்களும் டீ சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். மாறுபட்ட கொள்கைகள் கொண்டவர்கள் நண்பர்களாக இருக்க முடியாதா என்ன?''

''தமிழக பா.ஜ.க-வை வெறுப்பேற்றுவதற்காகவே நீங்கள் தி.மு.க-வோடு அதீத நெருக்கம் காட்டுவதாகச் சொல்கிறார்களே..?''

''அப்படியெல்லாம் இல்லை. சில சமயங்களில், நாம் சார்ந்திருக்கும் இடத்தைப் பொறுத்தும் நாம் பேசக்கூடிய சில வார்த்தைகள் தப்பாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிடுகின்றன. 'எஸ்.வி.சேகர், தேசியக்கொடியை அவமதித்துவிட்டார்' என்று அ.தி.மு.க எப்போது என்மீது வழக்கு தொடுத்தார்களோ அப்போதுதான் இந்த அரசியல் உண்மை எனக்குப் புரிந்தது. அதற்கேற்றாற்போல், தமிழக பா.ஜ.க-வின் செயல்பாடுகளும் என்னுடைய கொள்கைக்கு ரொம்பவும் மாறுபட்டு இருக்கிறது. அவ்வளவுதான்!''

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

''அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான், `பால் கெட்டுப்போய்விட்டது’ என எஸ்.வி.சேகர் ட்விட்டரில் பதிவிட்டால்கூட 'புதிய பால் பாக்கெட்' அவரது வீடு தேடி வந்திருக்கிறது?''

''அப்படியில்லை... 'பால் பாக்கெட் கெட்டுப்போய்விட்டது' என இப்போது நான் பதிவிட்டாலும்கூட, நல்ல பால் பாக்கெட் என் வீடு தேடி வரும். இது வாடிக்கையாளர் உரிமை சம்பந்தப்பட்ட விஷயம்! அன்றைக்கு எனது பதிவை எடப்பாடி பழனிசாமி பார்த்துவிட்டு வந்து பால் பாக்கெட் கொடுக்கவில்லை. ஆவினில் இருக்கக்கூடிய நல்ல அதிகாரிகள்தான் என் பதிவைப் பார்த்துவிட்டு உடனடியாக பால் பாக்கெட்டை மாற்றிக்கொடுத்தார்கள். ஏனெனில், மாதத்துக்கு 9,000 ரூபாய்க்கு பால் பாக்கெட் வாங்கிவருகிற வாடிக்கையாளர் நான். எனவே, அவர்களுக்கு வாடிக்கையாளரின் நலன் முக்கியம். எல்லா ஆட்சியிலும் இப்படியான நல்ல அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்!''

சென்னை: `ஆடிட்டர் கடத்தப்பபட்ட வழக்கு்; ஆடிட்டரையும் சேர்த்து கைது செய்த போலீஸ்! நடந்தது என்ன?'

''கடந்தகால அரசியலில், அ.தி.மு.க-வை வெறுப்பேற்றுவதற்காக நீங்கள் தி.மு.க-வோடு அதீத நெருக்கம் காட்டியிருக்கிறீர்கள்தானே?''

''1990-லிருந்தே நான் பா.ஜ.க-வின் அனுதாபியாக இருந்துவருகிறேன். பா.ஜ.க-வோடு அ.தி.மு.க., தி.மு.க கூட்டணி வைத்திருந்தபோது நானும் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறேன்.

கருணாநிதி
கருணாநிதி

அ.தி.மு.க-வில் எனக்கு எதற்காக பிரச்னை வந்தது... தேர்தலின்போது என்னுடைய தொகுதியில் தேர்தல் செலவுக்காக கட்சி கொடுத்த பணத்துக்கும், 'எனக்குக் கொடுக்கப்பட்டதாக கணக்கு சொல்லப்பட்ட தொகைக்கும் இடையிலிருந்த வித்தியாசம்' ஜெயலலிதாவுக்குத் தெரியவந்ததால் வந்த பிரச்னைதான். அதனால்தான், தேர்தல் செலவு குறித்த கணக்கை தெளிவாக எழுதி, `நீங்கள்தான் எனக்கு இன்னும் 6 லட்சம் ரூபாய் தர வேண்டும்’ என ஜெயலலிதாவிடமே ஒப்படைத்துவிட்டு வந்தேன். அடுத்து, என்னைக் கொலை செய்துவிடுவதாக சட்டமன்றத்திலேயே கலைராஜன் மிரட்டினார். உடனே என்னை எதிர்க்கட்சி வரிசையிலிருந்து ஆளுங்கட்சி வரிசைக்கு மாற்றி எனக்கு பாதுகாப்பு கொடுத்தது கருணாநிதிதான். 1980-களிலேயே நான் தி.மு.க-வுக்காக வாக்கு கேட்டு பிரசாரம் செய்திருக்கிறேன். எனவே கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலினோடு எனக்கு நெருங்கிய நட்பு எப்போதுமே உண்டு!''

விழுப்புரம்: ``மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நீக்குவதென்பது பழிவாங்குவது போன்றது’’ - கே.எஸ்.அழகிரி!

''தமிழக அரசியலில், 'ஒன்றிய அரசு', 'ஜெய்ஹிந்த்' போன்ற வார்த்தைகள் பெரும் புயலைக் கிளப்பிவருகின்றனவே... கவனித்தீர்களா?''

''என்னைப் பொறுத்தவரையில், 'ஒன்றிய அரசு' என்று சொல்லலாம்... பூ என்றாலும் புய்ப்பம் என்றாலும் ஒன்றுதானே. ஆனால், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறபோது, 'சென்ட்ரல் கவர்ன்மென்ட்' என்றுதானே எழுதியாக வேண்டும். எனவே, இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஜெய் ஹிந்த் வார்த்தை குறித்து சட்டசபையில், கொங்கு ஈஸ்வரன் பேசியது தேச விரோதமானது. அடுத்து ஒரு முக்கியமான விஷயம்... கவர்னர் உரையில் இவர்கள் எழுதிக் கொடுத்தார்களோ அல்லது எழுதாமல் கொடுத்தார்களோ... ஜெய் ஹிந்த் வார்த்தையை ஆளுநர் எப்படி உச்சரிக்காமல் விட்டிருக்கலாம்? எழுதிக் கொடுப்பதை மட்டுமே படிப்பதற்கு அவர் ஒன்றும் கிளிப்பிள்ளை இல்லையே!

பன்வாரிலால் புரோஹித்
பன்வாரிலால் புரோஹித்

இதை சட்டமன்றத்திலேயே பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் ஆட்சேபித்திருக்க வேண்டும். ஆனால், 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை சட்டசபையில் சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் நயினார் நாகேந்திரன். ஆக, பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ-க்களுக்குள்ளேயே சரியான ஒற்றுமை இல்லை!''

''தமிழக பா.ஜ.க தலைவர்களில் ஆரம்பித்து ஆளூநர் வரை துணிச்சலாக விமர்சிக்கிறீர்களே... பிரதமரோடு நெருக்கமாக இருக்கும் தைரியமா..?''

''நான் நேர்மையானவன்... இதைவிட வேறு என்ன தைரியம் வேண்டும்?''

அடுத்த கட்டுரைக்கு