Published:Updated:

`ஜனவரி 29; இறுதிப் பயணத்துக்குத் தயாராகுங்கள்' - பிரகாஷ்ராஜ் உட்பட 15 பேருக்குக் கொலைமிரட்டல்

பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட பல பிரபலங்களுக்கும் கொலைமிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கடிதம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:

`ஜனவரி 29; இறுதிப் பயணத்துக்குத் தயாராகுங்கள்' - பிரகாஷ்ராஜ் உட்பட 15 பேருக்குக் கொலைமிரட்டல்

நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட பல பிரபலங்களுக்கும் கொலைமிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கடிதம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ்ராஜ்

கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோருக்குக் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. மர்ம நபர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில் 15 பிரபலங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்தக் கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட அனைவரும் கொலை செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் துரோகிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைமிரட்டல் கடிதம்
கொலைமிரட்டல் கடிதம்

பிரபலங்கள் தங்கள் பெயர் குறிப்பிடப்பட்ட கடிதத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். அந்தக் கடிதத்தில், ``நிஜகுனானந்த சுவாமி, நீங்கள் உங்கள் சொந்த மதத்துக்கு எதிராகச் செயல்பட்டீர்கள். ஜனவரி 29-ம் தேதி உங்களுடைய இறுதிப் பயணத்திற்குத் தயாராக இருங்கள். உங்களைத் தொடர்ந்து கீழே பட்டியலில் உள்ளவர்களும் தங்களது இறுதிப் பயணத்தை மேற்கொள்வார்கள். அதற்காக, நீங்கள் அவர்களை தயார் செய்ய வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், பஜ்ரங் தள அமைப்பின் முன்னாள் தலைவர் மகேந்திர குமார், நடிகரும் சமூகச் செயற்பாட்டாளருமான சேதன் குமார், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பி.டி.லலிதா நாயக், பேராசிரியர் பகவான், சமூகச் செயற்பாட்டாளர் மகேஷ் சந்திர குரு, முன்னாள் முதலமைச்சரான சித்தாராமையாவின் ஆலோசகர் தினேஷ் அமீன் மட்டு, எழுத்தாளர் சந்திரசேகர் பாட்டில், கேங்ஸ்டராக இருந்து எழுத்தாளராக மாறிய அக்னி ஶ்ரீதர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.

கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி
கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி

பிரபலங்களுக்குக் கடிதம் மூலம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பஸவராஜ் பொம்மை, ``இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். எடியூரப்பா, முன்னாள் முதல்வாரக இருந்தபோது வழங்கப்பட்ட அதே பாதுகாப்பு ஹெச்.டி.குமாரசாமி மற்றும் சித்தாராமையா ஆகிய இருவருக்கும் வழங்கப்படும். இந்தப் பாதுகாப்பு இசட் பிரிவைச் சேர்ந்தது" என்று கூறியுள்ளார்.

மேலும், ``தேவைப்பட்டால் குமாரசாமிக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு மாநிலக் காவல்துறை அதிகாரிகளிடம் கூறுவேன். இடையூறு இல்லாமல் முழுப் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பஸவராஜ் பொம்மை
அமைச்சர் பஸவராஜ் பொம்மை

மாகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவரும் சமூகச் செயற்பாட்டாளருமான நரேந்திர தபோல்கர் மற்றும் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த கோவிந்த் பன்சாரே, கர்நாடகாவைச் சேர்ந்த கன்னடப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் எழுத்தாளருமான கல்புர்கி மற்றும் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் ஆகியோரும் கடந்த சில வருடங்களுக்குமுன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராகவும் போராடியதே இவர்களின் படுகொலைக்குக் காரணமாகக் கூறப்பட்டது.

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், பிரபலங்களுக்குக் கொலைமிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கடிதம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.