Published:Updated:

“ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது!; குஷ்பு ஒரு முந்திரிக்கொட்டை!”

ராதாரவி
பிரீமியம் ஸ்டோரி
ராதாரவி

ராதாரவி சரவெடி...

“ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது!; குஷ்பு ஒரு முந்திரிக்கொட்டை!”

ராதாரவி சரவெடி...

Published:Updated:
ராதாரவி
பிரீமியம் ஸ்டோரி
ராதாரவி
ஆளும் அ.தி.மு.க அரசின் தடையை மீறி ‘வேல் யாத்திரை’, ‘வெளியே நடமாட முடியாது’ என்று தி.மு.க தலைவருக்கு மிரட்டல்... என 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக இப்போதே தடதடக்க ஆரம்பித்துவிட்டது தமிழக பா.ஜ.க. இந்தநிலையில், நடிகரும், தமிழக பா.ஜ.க செயற்குழு உறுப்பினருமான ராதாரவியிடம் நடப்பு அரசியல் நகர்வுகள் குறித்த கேள்விகளை முன்வைத்தேன். மனிதர் ‘வேற லெவல்’ அரசியல் மூடில் இருப்பார்போலிருக்கிறது. அவர் அளித்த ‘அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ பதில்கள் இங்கே அப்படியே...
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“கொரோனா நோய்த்தொற்று பரவும் நேரத்தில், தடையை மீறி பா.ஜ.க-வினர் ‘வேல் யாத்திரை’ சென்றது சமூக அக்கறையும் இல்லை, சட்டத்தையும் மதிக்கவில்லை என்பதாகத்தானே தெரிகிறது?’’

“உங்கள் கேள்வி நியாயமானது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆயிரக்கணக்கில் காமராஜர் அரங்கில் ஒன்றுகூடினார்களே... என்ன ரூல்ஸ் போட்டாலும் மக்களில் 60 சதவிகிதம் பேர்தானே மாஸ்க் அணிகிறார்கள்... அப்போதெல்லாம் கொரோனா பரவாதா? நெகட்டிவாகப் பார்த்தால், எல்லாமே நெகட்டிவாகத்தான் தெரியும். யாத்திரை போவதே ஒரு குற்றமா?’’

“மற்றவர்கள் விதிகளை மீறுகிறார்கள் என்பதற்காக, நாங்களும் விதிகளை மீறுவோம் என்கிறீர்களா?’’

“கேள்வி கேட்பது ரொம்ப ஈஸி... மற்றவர்கள் குப்பை போடுகிறார்கள் என்பதற்காக நாமும் குப்பையைக் கொட்டினால்தான் தப்பு. ஆனால், இந்த விஷயம் அப்படியானது அல்ல. பொதுவாக ஆளும்கட்சியினரின் பொசிஷன் ரொம்பவே சிக்கலானது. அதனால், இப்படி வேல் யாத்திரைக்குத் தடை ஆணை போட்டு, ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்கள். இதெல்லாம் ஒரு பெரிய இஷ்யூவே இல்லை!’’

“ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது!; குஷ்பு ஒரு முந்திரிக்கொட்டை!”

“மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராட முன்வராத தமிழக பா.ஜ.க., வேல் யாத்திரை நடத்துவதன் நோக்கம் என்ன?’’

“தி.மு.க-வில் ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி சொல்கிறார். சீமான்கூட வேல் பற்றிப் பேசுகிறார். ஆனால், இந்துக் கடவுளின் ‘கந்தசஷ்டி கவசம்’, ‘வேல்’ ஆகியவை கொச்சைப்படுத்தப்படும்போது கேள்வி கேட்க இங்கே நாதியில்லை. எந்தவொரு விஷயத்தையுமே தீவிரமாக எதிர்த்துப் பேசும்போது, அது டாபிக்கலாக மாறும். மதத்தின் பெயரால், இப்படியான விமர்சனங்களை சீனாவில் யாராவது பேசியிருந்தால், சம்பந்தப்பட்ட நபர் காணாமலேயே போயிருப்பார்.’’

“இந்துக் கடவுள்களைக் காப்பாற்ற முன்வரும் பா.ஜ.க., காவிரி, ஈழம் என மக்கள் தொடர்பான பிரச்னைகளுக்குப் போராட வருவதில்லையே... ஏன்?’’

“கடவுள்தான் நம்மைக் காப்பாற்றுகிறார். அந்தக் கடவுளையே காப்பாற்ற பா.ஜ.க மட்டும்தான் முன்வருகிறது. நான் இந்து... அதனால் இந்துக் கடவுள்களைக் காப்பாற்றவருகிறேன். என் வீட்டு வரியைத்தான் நான் கட்ட முடியும். பக்கத்து வீட்டு வரியைப் பற்றி எனக்கென்ன கவலை? என் வீடு ஏலத்துக்கு வந்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் வந்து அழுதாரா என்ன... முன்பெல்லாம் இந்துக்களுக்கு எதிராகப் பேசுவதை நானேகூட விவரம் தெரியாமல் ஆதரித்திருக்கிறேன். இப்போதுதான் தெரிகிறது... நம்மையெல்லாம் இவ்வளவு காலமாக ஏமாற்றியிருக்கிறார்கள் என்று. அதனால்தான் அந்தக் கூட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன்.’’

“தொடர்ச்சியாக திராவிடக் கட்சிகளை, இந்துக்களுக்கு எதிரானவையாக பா.ஜ.க சித்திரிப்பது திட்டமிட்ட மத அரசியல்தானே?’’

“திட்டமிட்டெல்லாம் யாரும் சொல்லவில்லை. இவர்களது செயல்பாடுகள்தான் அப்படிச் சொல்லவைக்கின்றன. சமீபத்தில்கூட குருபூஜை நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்டாலின், அங்கு கொடுக்கப்பட்ட திருநீற்றை நெற்றியில் பூசிக்கொள்ளவில்லை. இது இந்துக்களையே அவமானப்படுத்தும் செயல்.’’

“இவ்வளவு பேசுகிற பா.ஜ.க-விலேயே குஷ்பு என்ற ‘பெரியாரிஸ்ட்’ இருக்கிறார்தானே?’’

“சகோதரி குஷ்பு, ஆறேழு மொழிகள் தெரிந்த திறமையாளர். சரியான நேரத்தில் பா.ஜ.க-வில் வந்து சேர்ந்ததற்காக அவருக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறேன். ஆனால், பெரியாரை ஆதரித்து அவர் பேசக் கூடாது. எந்த இடத்தில் எதைப் பேச வேண்டும் என்பதை அவர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். முந்திரிக்கொட்டைத்தனமாகப் பேசக் கூடாது. இந்த யாத்திரைப் பிரச்னைகளெல்லாம் முடிந்த பிறகு, குஷ்பு பேசியது குறித்தும் விரைவிலேயே மேலிடம் விளக்கம் கேட்கும்.’’

“ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது!; குஷ்பு ஒரு முந்திரிக்கொட்டை!”

“ஆறு மாதங்களுக்கு முந்தைய ‘கறுப்பர் கூட்டம்’ வீடியோவையும், ஒரு மாதத்துக்கு முந்தைய ‘மனு தர்மம்’ பற்றிய பேச்சையும் இழுத்து வந்து சர்ச்சை அரசியல் செய்வதெல்லாம் நியாயம்தானா?’’

“தி.மு.க-வில், எம்.எல்.ஏ சீட்டுக்கான நேர்காணலின்போது, ‘எத்தனை முறை ஜெயிலுக்குப் போயிருக்கிறீர்கள்...’ என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். கொலை, கொள்ளை செய்து ஜெயிலுக்குப் போனதையா கேட்கிறார்கள்... கட்சிக்காகப் போராட்டம் பண்ணி ஜெயிலுக்குப் போயிருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகத்தான் கேட்கிறார்கள். ஆக, ஜெயிலுக்குச் செல்வதென்பது அந்த இடத்தில் தகுதியாக இருக்கிறது. அரசியலில் இது போன்ற போராட்டங்கள் எல்லாமே தேவையாக இருக்கின்றன. இந்த வேல் யாத்திரைக்குக்கூட மூன்று மாதங்களுக்கு முன்பே அனுமதி கேட்கப்பட்டுவிட்டது. இப்போதுதான் நேர காலம் அமைந்து யாத்திரையை ஆரம்பித்தார்கள். ஆனால், அரசு தடை போட்டுவிட்டது.’’

“பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ல் மிகச் சரியாக வேல் யாத்திரையை முடிக்கத் திட்டமிட்ட பின்னணி என்ன?’’

“ஜூலை 29 என் பிறந்தநாள். அந்தச் சமயத்தில் நான் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே, சரியாக 29-ம் தேதியன்று கனடாவில் பிறந்தநாளைக் கொண்டாடத் திட்டமிட்டேன். அதேபோல் கொண்டாடியும் முடித்தேன். கடந்த நவம்பர் 1-ம் தேதியன்று நண்பருக்குப் பரிசளித்த புத்தகத்தில், ‘தமிழர் நாள்’ என்று குறிப்பிட்டே கையெழுத்திட்டேன். இப்படி வாழ்க்கையில் எல்லாவற்றையும் திட்டமிட்டுத்தான் செய்கிறோம். இதில் ஒன்றும் தப்பில்லையே... பாபர் மசூதி இடிக்கப்பட்டு எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைக்கும் டிசம்பர் 6-ல் யார் எது செய்தாலும் தப்பு என்று சொன்னால், பந்த் அறிவித்துவிட்டுப் பேசாமல்தான் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்!’’

“மனு நூல் பற்றி விவாதிக்க வி.சி.க தலைவர் தயாராக இருக்கும்போது, தி.மு.க-வைக் குறிவைத்து இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்புவது பா.ஜ.க-வின் திட்டமிட்ட அரசியல் இல்லையா?’’

“வி.சி.க தலைவர் திருமாவளவன், தி.மு.க கூட்டணியில் இருக்கிறார். ஆக, கூட்டணிக் கட்சித் தலைவராக யார் இருக்கிறார்களோ அவரைத்தான் கேள்வி கேட்பார்கள். அதனால், திருமாவளவன் பேசியது சரியா, தப்பா என்று ஸ்டாலின் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். முடியாவிட்டால், ‘தெரியாது’ என்றாவது சொல்லலாமே..!’’

“எழுவர் விடுதலை விஷயத்தில் உச்ச நீதிமன்றமே தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவிக்கிறது. மத்திய பா.ஜ.க அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டலாமா?’’

“அட என்னங்க... முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு கேட்டுக்கொண்டதா... தமிழ்நாட்டில் மட்டும்தான் சுப்ரீம் கோர்ட் சொன்னால் கேட்டுக் கொள்கிறோம். மற்ற மாநிலங்களிலெல்லாம் அப்படிக் கிடையாது. ‘தமிழகத்துக்கு, தண்ணீர் திறந்துவிட மாட்டோம்’ என்றுதான் கர்நாடக பா.ஜ.க சொல்லும். தமிழ்நாட்டு பா.ஜ.க-வோ ‘காவிரியில் தண்ணீர் திறந்துவிடு’ என்றுதான் கேட்கும். தி.மு.க-வேகூட காவிரி விஷயத்தில் அடக்கித்தான் வாசிக்கும். ஏனெனில், அவர்களுடைய நிறுவனங்கள் பலவும் கர்நாடகத்தில் இருக்கின்றன. அவ்வளவு ஏன்... தமிழ்த் திரைத்துறையில் ஏதாவது போராட்டம் அறிவித்தால்கூட, பிரபுதேவா, அர்ஜூன் போன்றவர்களுக்கு நாங்களே விதிவிலக்கு கொடுத்துவிடுவோம். இதெல்லாம் பிராக்டிகல் பிரச்னைகள். இது மாதிரியான விஷயங்களில் எல்லோருமே யோசிக்கத்தான் செய்வார்கள்.’’

“கொரோனாவைக் காரணம் சொல்லி அரசியல் முடிவிலிருந்து ஒதுங்கும் உங்கள் நண்பர் ரஜினிகாந்தை, தமிழக பா.ஜ.க சரிக்கட்ட முயல்வதாகச் செய்திகள் வருகின்றனவே?’’

“ரஜினிகாந்த் என்ன முடிவில் இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அவரே உடல்நலம் சரியின்றி, பண்ணை வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். அரசியலில் எல்லோருமே திட்டுவார்கள். அவர் பாவம்... அவருக்கு அரசியல் வேண்டாம்; சரிப்பட்டு வராது என்று நான்தான் முதலிலிருந்தே சொல்லிவருகிறேனே!’’