Published:Updated:

‘பலர் கேட்கலாம்... முடிவெடுக்க வேண்டியது நான்தான்!’ - முதல் பேட்டிக்கு மறுவிளக்கம் கொடுத்த ரஜினி

சற்று முன்னர், சிலர் தன்மீது காவி நிறம் பூச நினைப்பதாகப் பேசியிருந்தார். இது பரபரப்பானதைத் தொடர்ந்து, தன் கருத்துக்கு மீண்டும் விளக்கம் அளித்துள்ளார், ரஜினி.

ரஜினி
ரஜினி

கமல்ஹாசனின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. இன்று, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா மற்றும் மறைந்த இயக்குநர் பாலசந்தரின் சிலை திறப்பு விழா ஆகியவை நடைபெற்றன. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு போயஸ் கார்டனில் உள்ள தன் வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது, ``பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க-வில் நான் இணைய வேண்டும் எனக் கூறவில்லை. எங்களின் சந்திப்பு மிகவும் சாதாரணமானது. திருவள்ளுவருக்கு காவி பூசியதைப் போல் எனக்கும் பூச நினைக்கிறார்கள். அதில் வள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.

ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சு, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, “முதல்முறையாக வெளிப்படையாகப் பேசவில்லை; எப்போதும் வெளிப்படையாகத்தான் பேசுவேன். சிலர், என்மீது சாயம் பூச நினைக்கிறார்கள், அதைத்தான் சற்றுமுன்னர் கூறினேன்.

ரஜினி
ரஜினி

தமிழகத்தில் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் ஊடகங்கள், திருவள்ளுவர் பிரச்னையைப் பெரிதாக்குகின்றன. அயோத்தி விவகாரம் தொடர்பாக எந்தத் தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஊடகங்கள் என்மீது காவிச் சாயம் பூசி, நான் பா.ஜ.க-வைச் சேர்ந்தவன்... பா.ஜ.க-வில் இணைந்துவிட்டேன் என்றெல்லாம் கூறுகின்றனர். இவை அனைத்தும் பொய்யானது.

`வள்ளுவரும் மாட்ட மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்!’ - போயஸ் கார்டனில் தகித்த ரஜினி

‘எங்கள் கட்சியில் நீங்கள் சேர்ந்தால் சந்தோஷப்படுவோம்’ எனப் பலர் கேட்கலாம், அதில் தவறு இல்லை. ஆனால், முடிவெடுக்க வேண்டியது நான். அதற்காக, அவர்கள் என்னையே நம்பியிருக்கிறார்கள் என்பது தவறு. இந்தியாவின் பொருளாதார நிலை சற்று மந்தமாக உள்ளது. இதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை மத்திய அரசு சரியாகச் செய்ய வேண்டும். நான் அரசியல் கட்சி அறிவித்தாலும் சினிமாக்களில் நடிப்பேன். தமிழகத்தில் சரியான ஆளுமைக்கு, தலைமைக்கு வெற்றிடம் உள்ளது” என்று பேசியுள்ளார்.

ரஜினி
ரஜினி

சற்று முன்னர், தன்மீது காவிச் சாயம் பூசப் பார்க்கிறார்கள் எனக் கூறிய ரஜினி, அடுத்த அரைமணி நேரத்தில் ஊடகங்கள்தான் தன் மீது காவிச் சாயம் பூசுவதாகப் பேசியிருப்பது, தமிழக அரசியலில் அதிக கவனம் பெற்றுள்ளது.