Published:Updated:

`உண்மையைச் சொன்னால் பாஜக-வின் ஊதுகுழலா.. மத்திய அரசைக் கண்டிக்கிறேன்'- டெல்லி வன்முறை தொடர்பாக ரஜினி

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

டெல்லியில் நடக்கும் போராட்டங்களை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த்திடம் டெல்லி கலவரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இஸ்லாமியர்களுக்காகக் குரல் கொடுப்பேன் என்று கூறினீர்கள் இதுவரை உங்கள் குரல் ஒலிக்கவில்லையே என்ற கேள்விக்குப் பதிலளித்தவர், ``சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்காக நான் முதல் ஆளாக நிற்பேன். சிஏஏ சட்டத்தால் என்று குறிப்பிட்டிருந்தேன் சரியா... டெல்லியில் நடந்த போராட்டங்கள் எல்லாம் மத்திய உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. இதற்காக நான் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

ரஜினி
ரஜினி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய அரசு எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். மத்திய உளவுத்துறை தங்களது பணியை சரியாகச் செய்யவில்லை. இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

டெல்லி கலவரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இது உள்துறை அமைச்சகத்தின் தோல்வி என்கிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்தவர், ``உளவுத்துறை தோல்வி என்பது உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே. உளவுத்துறை அதிகாரிகள் இதற்குப் பதிலளிக்க வேண்டும்” என்றார். மேலும் பேசியவர், ``மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் இது பெரிய பிரச்னையாக இருக்கும்.

ரஜினி
ரஜினி

சிஏஏ இரண்டு அவைகளிலும் ஒப்புதல் பெற்று குடியரசுத் தலைவர் ஒப்புதலின் பேரில் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று சட்டமாக வந்துவிட்டது. இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இவர்கள் என்ன போராட்டம் செய்தாலும் இது பிரயோஜனப்படாது என்பது என் கருத்து.

மத்திய மாநில அரசு இந்த விவாகரத்தை திறம்பட கையாள வேண்டும். உடனே நான் பா.ஜ.க-வின் ஊதுகுழல், பா.ஜ.க எனக்குப் பின்னால் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதிலும் சில மூத்த பத்திரிகையாளர், மூத்த அரசியல் விமர்சகர்கள் இதுபோல கூறுவதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. என்ன உண்மையோ அதைத்தான் நான் சொல்கிறேன்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

சிஏஏ சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக நான் நிற்பேன். அமைதி வழியில் போராட்டம் செய்யலாம் அங்கே வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது. பிறகு, எதற்கு உளவுத்துறை என்ற ஒன்று இருக்கிறது. போராட்டங்கள் வன்முறையாகக் கூடாது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு