Published:Updated:

அதிசயம் முதல் அறிவுரை வரை... ரஜினியின் 2019-ம் ஆண்டு `பன்ச்' வசனங்கள்!

கடந்த காலத்தைவிட 2019-ம் ஆண்டு ரஜினிகாந்த்தின் பல பேச்சுகள் சர்ச்சையாகின. சில பேச்சுகள் கண்டனத்திற்குள்ளாகின. இந்த வருடத்தில், நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில அரசியல் `பன்ச்' டயலாக்குகளைப் பார்க்கலாம்.

ரஜினி
ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகக் கூறிக்கொண்டே இருக்கிறார். இதுவரை, கட்சி தொடங்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் அவரின் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களை போட்டியிடத் தடை விதித்திருக்கிறார். `ரஜினி, விரைவில் கட்சி தொடங்கிவிடுவார். நமக்கும் விடிவுகாலம் பிறந்துவிடும்' என்கிற நம்பிக்கையுடன் அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எப்படியிருந்தாலும், அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் களம் இறங்கிவிடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. எம்.ஜி.ஆர் போல ரஜினியின் முதல் அரசியல் இலக்கே முதல்வர் நாற்காலிதான் என்பதையே இது காட்டுகிறது. சினிமா மாஸ் தன்னை கரைசேர்த்துவிடும் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் தோற்றால், ரஜினி அரசியலில் நிலைப்பாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. கடந்த காலத்தைவிட 2019-ம் ஆண்டு ரஜினிகாந்த்தின் பல பேச்சுகள் சர்ச்சையாகின. சில பேச்சுகள் கண்டனத்திற்குள்ளாகின. இந்த வருடத்தில், நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில அரசியல் `பன்ச்' டயலாக்குகளைப் பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

மக்களவைத் தேர்தலின்போது, `ஒருவருக்கு எதிராக நிறைய பேர் திரண்டால், பலசாலி யார் என்று நீங்களே புரிந்துகொள்ளலாம் ' என்று பிரதமர் மோடிக்கு ஆதரவாக மறைமுகமாக ரஜினிகாந்த் பேசியிருந்தார். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போது, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் ஆகியோருக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆளுமை என்று பிரதமர் மோடியை ரஜினிகாந்த் குறிப்பிட்டார். ``தனிமனித தலைமைக்குக் கிடைத்த வெற்றி. மோடியை கரிஸ்மாடிக் லீடர்'' எனவும் ரஜினி புகழ்ந்தார். ``காமராஜர், அண்ணா, கலைஞர், ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்குக் கிடைத்த வெற்றிபோல மோடிக்காகக் கிடைத்த வெற்றி'' என்று கருத்து வெளியிட்ட ரஜினி , `காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடாது' என்றும் அறிவுரை வழங்கினார். ராகுல் குறித்துப் பேசிய ரஜினிகாந்த், ``ராகுலுக்கு தலைமைப் பண்பு இல்லை என்று சொல்ல மாட்டேன். காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். சீனியர் தலைவர்களைக் கையாள்வது சிரமம். ராகுல் காந்தி தன்னால் முடியும் என்பதை நிருபிக்க வேண்டும்'' எனவும் ரஜினி கோரிக்கை விடுத்தார்.

துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு எழுதிய `கவனித்தல் கற்றல் மற்றும் தலைமையேற்றல்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் அமித் ஷாவும் பங்கேற்றார். மேடை ஏறிய ரஜினி, காஷ்மீரின் சிறப்பு அந்ததஸ்து நீக்கப்பட்டதற்கு அமித் ஷாவை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார். ``பிரதமர் மோடியும் அமித் ஷாவும், கிருஷ்ணரும் அர்ஜுனனும் போல. ஆனால், இவர்களில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜூனன் என்று நான் சொல்ல மாட்டேன். அது அவர்களுக்குத்தான் தெரியும்'' என்று பேசினார். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. காங்கிரஸ் தலைவர்கள் முதல் சீமான் வரை ரஜினிகாந்த்தின் பேச்சைக் கண்டித்தனர். சர்ச்சையை அடுத்து ரஜினி,``எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்கக்கூடாது என்று மதிப்பிற்குரிய தமிழக அரசியல்வாதிகள் தெரிந்துகொள்ள வேண்டும்'' என பிரஸ்மீட் வைத்து ரஜினி அவர்களுக்கு அட்வைஸ் செய்தார்.

ரஜினி
ரஜினி

இந்தி, நாட்டின் பொதுமொழி என்ற பிரச்னை எழுந்தபோது, நடிகர் ரஜினிகாந்த், ``நாட்டில் பொது மொழி இருந்தால் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக நம்ம நாட்டில் பொது மொழி என ஒன்றைக் கொண்டுவர முடியாது. இந்தியைத் திணித்தால், தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியாவே ஏற்றுக் கொள்ளாது" என கருத்து வெளியிட்டார். திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசப்பட்ட விஷயத்தில் நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டி காரசாரமாக இருந்தது. ``திருவள்ளுவரைப் போல எனக்கும் பாரதிய ஜனதா கட்சி காவி சாயம் பூச முயல்கிறது. திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன். மக்கள் பிரச்னைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசப்பட்டது குறித்த விவகாரம் தேவையற்றது'' என்று ஆவேசத்துடன் பேசினார். ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சு, பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களைத் திகைக்கவைத்தது. ஆனால், பேட்டியளித்த ஒரு மணி நேரத்துக்குள், மீண்டும் பத்திரிகையாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். ``திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது பாரதிய ஜனதா கட்சியின் தனிப்பட்ட விஷயம். இதை சர்சையாக்கி விவாதிப்பது சரியில்லை'' என்று பேசி மழுப்பினார். ரஜினிக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்ததால், சமாளிக்கும் விதத்தில் மீண்டும் பேட்டியளித்துள்ளார் என்று சமூகவலைதளங்களில் இது விவாதிக்கப்பட்டது.

`ஈழத்தமிழர்' துரோகம், பிண அரசியல்... எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தி.மு.கவின் பதில் என்ன?

ஒரு முறை, தன் வீட்டில் பேட்டியளித்துக்கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த்திடம் செய்தியாளர் ஒருவர்,``தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் வளர்ந்துவருவது போல தெரிகிறதே... இன்னும் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?" என்கிற கேள்வியை முன் வைத்தார். அதற்குப் பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதி மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது எனப் பேச, தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைவர்கள் ரஜினிகாந்த் மீது குபீரென்று பாய்ந்தனர். ஸ்டாலினால் தமிழகத்தில் வெற்றிடம் இல்லையென்று துரைமுருகனும், இரட்டைத் தலைவர்களான ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோரால் வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டதாக அ.தி.மு.க -வினரும் கொந்தளித்தனர்.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் 60 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையையொட்டி, சென்னையில் பெரும் விழா எடுக்கப்பட்டது. விழாவில் மேடை ஏறிய ரஜினிகாந்த், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராவோம் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்" என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், ``அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும். எடப்பாடி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றார்கள். ஆனால், அதிசயம் நடந்துள்ளதே... அவரின் ஆட்சி நீடிக்கிறதே... அது போன்ற அதிசயம் நேற்றும் நடந்துள்ளது, இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கப்போகிறது'' என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார். கண்டக்டர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆனது எப்படி என்று அ.திமு.க திருப்பிக் கேட்டது. கோவாவில் நடந்த திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்த்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்டு தமிழகம் திரும்பிய ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் ``2021- ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவிகித அதிசயம் நிகழ்த்துவார்கள்'' என்று பேசி மீண்டும் தி.மு.க, அ.தி.மு.க தலைவர்களைக் கடுப்படித்தார்.

கடைசியாக, `தர்பார் ' படப் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ``வயதான காரணத்தினால், இனி டூயட் பாட வேண்டாமென்று கருதியே, `காலா', `கபாலி' போன்ற படங்களில் நடித்தேன். ரஜினிகாந்த் என்ற பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு சூட்ட வேண்டுமென்று பாலசந்தர் நினைத்தார். நம்பிக்கையோடு எனக்கு அந்தப் பெயரைச் சூட்டினார். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை. அதைப் போலவே, தமிழக மக்கள் என்மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது'' போன்ற வார்த்தைகளை உதிர்த்து, அவரின் ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

தர்பார்
தர்பார்
`குடியுரிமை திருத்தச் சட்டம்' - ரஜினி கருத்தும் எதிர்வினையும்!

இதே படத்தின் இந்தி வெர்ஷன் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அதில் பேசிய ரஜினிகாந்த், ``அமிதாப்பச்சன் எனக்கு மூன்று அறிவுரைகளை வழங்கினார். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், நம்மை பிசியாக வைத்துக்கொள்ள வேண்டும் , அரசியலுக்கு வரக் கூடாது'' என்று என்னிடத்தில் அமிதாப் சொன்னார். அதில், மூன்றாவது அறிவுரையை மட்டும் என்னால் பின்பற்ற முடியவில்லை'' என்று பேசி, வட இந்திய ரசிகர்களையும் கவர்ந்தார் ரஜினி.