Election bannerElection banner
Published:Updated:

``எந்த அரசையும் விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கு" - மிரட்டலுக்கு அசராத நடிகர் சித்தார்த்

சித்தார்த்
சித்தார்த்

கொரோனா காலத்தில் மட்டுமல்ல, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தியபோது, வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தபோது என மக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் சித்தார்த் விமர்சித்துவருகிறார்.

``சாமானியனோ, சாமியாரோ, அரசியல் தலைவரோ யாராக இருந்தாலும் பொய் சொன்னால் அவர்களுக்கு ஓங்கி ஓர் அறை விழும்” என நடிகர் சித்தார்த் சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார். ``உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாகப் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டுவரும் மருத்துவமனைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அந்த மாநில முதல்வர் வெளியிட்ட உத்தரவுக்கு எதிராகத்தான் இந்த ட்வீட்டை நடிகர் சித்தார்த் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பா.ஜ.க தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு பா.ஜ.க-வினர் தனது மொபைல் எண்ணை வெளியிட்டதாகவும், 500-க்கும் மேற்பட்ட அழைப்புகளில் தன்னையும், தன் குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளில் திட்டி, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடப்படுவதாகவும் சித்தார்த் ட்வீட் செய்திருந்தார்.

இதையடுத்து சித்தார்த்துக்குச் சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்து #Isupportsiddarth என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. தனக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் சித்தார்த்.

சித்தார்த்
சித்தார்த்

இந்தியா சந்தித்துவரும் கொரோனாவின் பெரும் சோகங்களுக்கு எதிராக முறையாகச் செயல்படாமல் இருக்கும் அனைத்து அதிகார வர்க்கங்களையும் ட்விட்டர் மூலமாகக் கேள்வி கேட்டு விமர்சித்துவருகிறார் சித்தார்த். வெறும் விமர்சனங்கள் மட்டுமல்லாமல் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வுகள், சிகிச்சை மையங்கள், உதவி தேவைப்படுவோருக்கான வழிகாட்டுதல் என ட்விட்டர் மூலமாகப் பலருக்கும் வழிகாட்டிவருகிறார்.

கொரோனா காலத்தில் மட்டுமல்லாமல் தொடர்ந்து தேசிய தலைவர்களைக் கடுமையாக விமர்சித்துவரும் நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ரவுண்டப் செல்வோம்...

``மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த அடுத்த விநாடியே அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்” என்று மேற்கு வங்க பா.ஜ.க ஒரு ட்வீட் போட,``என்றைக்கு ஆட்சி அதிகாரத்திலிருந்து பா.ஜ.க வெளியேற்றப்படுகிறதோ அன்றைக்குத்தான் இந்த நாட்டுக்கே தடுப்பூசி போட்ட மாதிரி” என அதற்கு எதிராக நடிகர் சித்தார்த் ஒரு ட்வீட் பதிவிடுகிறார். இந்த ட்வீட்தான் சமீபத்தில் சித்தார்த் போடும் ட்வீட்கள் மீது கவனத்தை திருப்பியது. பலராலும் இவரது கருத்து பகிரப்பட்டது.

இப்படி, உடனுக்குடன் பதிலடி கொடுப்பது மட்டுமல்ல; பிரதமர் மோடி 2014-ஆம் ஆண்டில் ``இந்தியாவுக்கு வலிமையான ஓர் அரசு வேண்டும். மோடியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். திரும்பிச் சென்று மீண்டும் என்னால் ஒரு தேநீர்க்கடையைத் திறந்துகொள்ள முடியும். ஆனால், நாடு இதற்கு மேல் வேதனையை அனுபவிக்கக் கூடாது” என ட்வீட் செய்திருக்கிறார். `நாடு இதற்கு மேல் வேதனையை அனுபவிக்கக் கூடாது' என்று மோடி கூறியதை மையப்படுத்தி ட்வீட் செய்த சித்தார்த் `` இவர் கூறும் கருத்துடன் நான் உடன்படுகிறேன். உங்களால் இதை நம்ப முடியுமா?” எனப் பதிவிட்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ANI

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, வெளிநாட்டு பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இதனால் கொதிப்படைந்த இந்திய பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், `` இது எங்கள் நாட்டின் உள் விவகாரம். இதை எங்களுக்குள் தீர்த்துக்கொள்வோம். வெளிநாட்டினர் தலையிட வேண்டாம்" என்று ஒரே மாதிரி பதிவிட்டிருந்தனர். இது பா.ஜ.க-வின் தூண்டுதலால் நடந்த நிகழ்வு என்றுகூட விமர்சிக்கப்பட்டது. அதை தற்போதுள்ள சூழலோடு பொருத்தி ``கடவுளே, இந்தியா ஓர் இறையாண்மை மிக்க நாடு. இது எங்களுக்கு நாங்களே ஏற்படுத்திக்கொண்ட அழிவு. தயவுசெய்து நீங்கள் இதிலிருந்து விலகி இருங்கள்.

பின் குறிப்பு : எதற்கும் உதவாத எங்கள் தாடியை நகல் எடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்” என ட்வீட் செய்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ``இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஏதும் வாய்ப்பிருக்கிறதா? கோவிட்டுக்கு பதில் கோவிந் இருந்தால், நாம் உயிர்ப்பிழைக்க அதிக வாய்ப்பிருக்கிறது” எனப் பதிவிட்டார்.

இப்படி, பிரதமர் மோடி, மத்திய அரசு, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரை சித்தார்த்தின் ட்விட்டர் விமர்சனத்திலிருந்து தப்பியவர்கள் இல்லை.

சித்தார்த் ட்வீட்
சித்தார்த் ட்வீட்

மத்திய அரசு, அரசியல் தலைவர்களை மட்டுமல்ல, கொரோனா தொற்றின் தீவிரம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காத இந்தியாவிலுள்ள முக்கியப் பிரபலங்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. ``நாட்டில் நடக்கும் இந்தக் கோரச் சம்பவங்களை மில்லியன் கணக்கில் ஃபாலோயர்ஸ் இருப்பவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவரவருக்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். உங்களுக்கு என்ன இருக்கிறது? உரக்கப் பேசுங்கள், கேள்வி கேளுங்கள். உங்களுக்கான அரசிடமிருந்து ஆதரவையும் பாதுகாப்பையும் உத்தரவாதம் அளிக்கச் சொல்லுங்கள். இந்தச் சூழலிலிருந்து நாம் வெளியே வர நீண்ட நாள்கள் ஆகும். உடனே விழித்துக்கொள்ளுங்கள்” என்று ட்வீட் மூலம் தாக்க முயன்றிருக்கிறார் சித்தார்த்.

கொரோனா தொற்றின் தீவிரத்திலிருந்து மக்களுக்கு உதவுவதற்காக ட்வீட் செய்துகொண்டிருந்த நடிகர் சித்தார்த், மத்திய அரசு மீதான விமர்சனங்களைவைக்கத் தூண்டியது மன்மோகன் சிங்கின் ஆலோசனைகளுக்கு பதில் தரும் விதமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் செய்த ட்வீட். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மன்மோகன் சிங்குக்கு அளித்த அந்த பதிலில் `` முதலில் நீங்கள் சொன்ன பரிந்துரைகளை காங்கிரஸ் கட்சித் தலைவர்களைப் பின்பற்றச் சொல்லுங்கள்" என்று எதிர்க்கருத்து தெரிவிக்கும் வகையில் பேசியிருந்தார்.

அதற்கு ``நீங்கள் கோவிட் போராளி அல்ல டாக்டர் ஹர்ஷ் வர்தன். உண்மையில் நீங்கள் கோவிட்டின் கூட்டாளி. எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எல்லா விலையையும் கொடுத்து மக்களைக் கொலை செய்கிறீர்கள். மதக் கூட்டங்களில் மக்களைக்கூடச் செய்தும் அவர்களைக் கொல்கிறீர்கள். வரலாறு ஒருபோதும் உங்களை மறக்காது, மன்னிக்காது, வெட்கம்” எனக் கடுமையாகப் பதிவிட்டிருந்தார்.

ஹர்ஷ் வர்தன்
ஹர்ஷ் வர்தன்

சித்தார்த்தின் ட்வீட்டுக்கு எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், பலர் இந்தியாவின் முக்கியப் பிரபலங்களை டேக் செய்து `சித்தார்த்போல முதுகெலும்புடன் வாழ முயலுங்கள்’ என ஆதரவாகப் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா காலத்தில் மட்டுமல்ல, மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, வேளாண் சட்டங்கள், விவசாயிகள் போராட்டம் என ஒவ்வொரு மக்கள் பிரச்னையின்போதும் மக்கள் பக்கம் நின்று அரசை விமர்சிக்க அவர் தயக்கம் காட்டியதில்லை என்பதை அவரின் ட்விட்டர் பக்கம் காட்டுகிறது.

இதற்காகப் பலமுறை அவர் மிரட்டப்பட்டும், அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டபோதும் தன்னுடைய விமர்சனத்தை அழுத்தம், திருத்தமாகக் கொஞ்சம் கடுமையாகவே முன்வைத்துவருகிறார் சித்தார்த்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

அவர் மத்திய அரசை மட்டுமல்ல 2015-ல் சென்னை பெருவெள்ளத்தைக் கண்டுகொள்ளாத வட இந்திய ஊடகங்கள் மீதும் (ஒரு வகையில் இவரது ட்விட்டர் எதிர்வினைகளின் தொடக்கம் இந்த ட்வீட்தான் என்று சொல்லலாம்) 2017-ல் 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பில் தி.மு.க-வின் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டபோதும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அ.தி.மு.க ஆதரவளித்த போதும் அவர்கள் மீதும் விமர்சனங்கள் வைத்திருக்கிறார்.

2019-ல் விகடனுக்கு அளித்த பேட்டியில்``உங்க ட்விட்டர் பதிவுகள் நேரடியாகவே ‘சித்தார்த் பா.ஜ.க-வுக்கு எதிரானவர்' என்ற தோற்றத்தைத் தருதே?" என்ற கேள்விக்கு``ஒரு குடிமகனா தவறாம ஓட்டு போடுறேன், வரி கட்டுறேன். இந்த ரெண்டு விஷயத்தைச் சரியா செய்யறதால, எந்த அரசையும் விமர்சிக்கும் அதிகாரம் எனக்கு இருக்கு. நான் எந்தவொரு கட்சியிலும் சேர்ந்து என் கருத்தைச் சொல்லலை. எனக்கு இருக்கிற கருத்துச் சுதந்திரத்தைவெச்சு சொல்றேன். ஒருத்தரை மட்டும்தான் நான் குறை சொல்றேன்னு சொல்றது, என் புத்திசாலித்தனத்தைத் தரக்குறைவா விமர்சிக்கிற மாதிரி இருக்கு. நான் அவ்வளவு முட்டாள் கிடையாது. ஜனநாயகத்துக்கு முக்கியமான விஷயம் எதிர்க்கட்சி. அப்படி ஒண்ணு இல்லாமப்போயிட்டா, ஆள்றவங்க கடவுள் ஆகிடுவாங்க. கடவுளைத் திட்ட முடியாதுங்கிறதால, யாருக்கும் கருத்துச் சுதந்திரம் இல்லாமப்போயிடும்" என பதில் அளித்திருக்கிறார்.

சித்தார்த்
சித்தார்த்

கிட்டத்தட்ட இந்த நேர்காணல் கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், சித்தார்த் இப்போதும் மக்களுக்கு எதிரான விஷயங்களை விமர்சிப்பதில் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். இனியும் தொடர்ந்து கெத்தாக விமர்சனம் வைப்பார் என்பதில் எந்தச் சந்தேகம் இல்லை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு