Published:Updated:

பெண்ணைப் பற்றி யார் இப்படிப் பேசினாலும் கடுமையாக கண்டிக்கத்தக்கதே!

கௌதமி
பிரீமியம் ஸ்டோரி
News
கௌதமி

குருமூர்த்தி விமர்சனத்துக்கு கௌதமியின் காட்டம்...

பா.ஜ.க ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினிகாந்த், அரசியல் முடிவிலிருந்து பின்வாங்கியது, அ.தி.மு.க கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்திலும் இறங்கிவந்தது, அதிரிபுதிரி ‘பஞ்சு’ பொங்கல் கலாட்டா... என்று தமிழக அரசியலில் விடாப்பிடியாக கிச்சுகிச்சு மூட்டிவருகிறது பா.ஜ.க. இந்தநிலையில், தமிழக பா.ஜ.க-வின் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், நடிகையுமான கௌதமியிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்...
பெண்ணைப் பற்றி யார் இப்படிப் பேசினாலும் கடுமையாக கண்டிக்கத்தக்கதே!

“தமிழகத்தின் அரசியல் சூழல் உங்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும், ‘எந்தக் கட்சியின் முதுகிலும் ஏறிப் பயணிக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க-வுக்கு இல்லை’ என்று எப்படிச் சொல்கிறீர்கள்?’’

“முதுகில் ஏறிப் பயணிக்கிறார்கள் என்ற வார்த்தை நாகரிகமாக இல்லை. அதனால்தான் அப்படிச் சொன்னேன். மேலும், எந்தவொரு கூட்டணியாக இருந்தாலும், கட்சிகள் பரஸ்பர மரியாதையுடன் நடந்துகொண்டால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். இது போன்ற பேச்சுகளைத் தூண்டிவிடாமல், கூட்டணியை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் ஆரோக்கியமான விஷயம்.’’

“ஆனால், அ.தி.மு.க அறிவித்த முதல்வர் வேட்பாளரை ஏற்றுக்கொள்ளாமல், சமீப நாள்கள் வரை முரண்டுபிடித்ததே தமிழக பா.ஜ.க-தானே?’’

“கூட்டணியில் சின்னச் சின்ன குழப்பங்கள் நடந்திருக்கலாம்... முதலமைச்சர் வேட்பாளராக யார் இருக்க வேண்டும் என்பது லாஜிக்கலாக நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். இதை எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் அந்தப் பிரச்னைகளின்போதும்கூட ‘இந்தக் கூட்டணி நிலையாகத் தொடரும்’ என்று நான் பாசிட்டிவாக மட்டுமே பேசிவந்தேன். இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது.”

“ரஜினிகாந்த்தின் அரசியல் விலகலுக்குப் பிறகுதானே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு பா.ஜ.க வந்திருக்கிறது?”

“அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ‘கூட்டணியில் அ.தி.மு.க-தான் பெரிய கட்சி. கடந்த நான்காண்டுகளாக நம் முதல்வரும் திறம்பட ஆட்சி நடத்திவருகிறார். இதையெல்லாம் நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறேன். ஒவ்வொரு புள்ளிக்கும் இடையே அடுத்தடுத்து கோடுகள் இழுக்கும்போதுதான் புதிது புதிதாகக் கோலம் உருவாகும். அந்தவகையில், இப்போது முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஒருமித்த முடிவெடுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டோம்.’’

பெண்ணைப் பற்றி யார் இப்படிப் பேசினாலும் கடுமையாக கண்டிக்கத்தக்கதே!

“தமிழ்நாட்டில், ‘அ.தி.மு.க-தான் பெரிய கட்சி’ என்பதே இப்போதுதான் பா.ஜ.க-வுக்குத் தெரியவந்ததா?’’

(சிரிக்கிறார்). “நடந்து முடிந்தவற்றையே திரும்பத் திரும்பக் கேட்டு என்னிடமிருந்து சர்ச்சைக்குரிய பதிலை எதிர்பார்க்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை இவையெல்லாமே நடந்து முடிந்துபோனவை. யார் என்ன சொன்னார்கள், புரிந்துதான் சொன்னார்களா அல்லது புரியாமல் சொன்னார்களா... என்பதையெல்லாம் விட்டுவிடுங்கள். தேர்தல் நெருங்கிவிட்டது. நாங்கள் களத்தில் நிற்கிறோம். எங்களை வேலை செய்ய விடுங்கள்!’’

“பொங்கல் பானையில் பஞ்சுவைத்துப் பொங்குவதும், மஞ்சள்தூளை அம்மியிலிட்டு அரைப்பதும்தான் நம்ம ஊர் பொங்கலா?’’

``ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் உட்பட இரண்டு இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நான் கலந்துகொண்டேன். அங்கெல்லாம் அடுப்பில் விறகுவைத்து பொங்கலிட்டோம். புகைமூட்டத்தில் கண்களில் தண்ணீரே வந்துவிட்டது. ஒரு கிராமத்தில், நமது பண்பாட்டுப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவார்களோ அப்படித்தான் நாங்கள் கொண்டாடியிருக்கிறோம்... மற்றபடி, எனக்குத் தெரியாததைப் பற்றி பேச விரும்பவில்லை.’’

“எதிர்க்கட்சியினர், ‘கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்காமல், மக்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அவசரப் படுத்துகிறது’ என்று விமர்சிக்கிறார்களே?’’

“கொரோனா பிரச்னையால் இன்றைக்கு உலகமே நொறுங்கிக்கிடக்கிறது. நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு அவசர சிகிச்சை தேவை. ஏற்கெனவே மூன்றுநிலை பரிசோதனைகள் முடிந்துதான் தடுப்பூசி சந்தைக்கு வந்திருக்கிறது. அதனால்தான் பிரதமர் மோடியும், ‘கொரோனா தடுப்புப் பணியில் தங்களது உயிரை பணயம்வைத்து, முன்களத்தில் நின்று போராடிவருபவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். எனவே, இதற்கு எதிராகப் பேசுபவர்களை ஒதுக்கித் தள்ள வேண்டும்.’’

“நீங்கள் சொல்வதுபடியே வைத்துக்கொண்டாலும், ‘முதலில் மோடியும், அமித் ஷாவும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று சீமான் கேட்பது நியாயம்தானே?’’

“இந்தக் கேள்வியை நீங்கள் பிரதமர் மோடியிடமே கேளுங்கள்.... நல்ல பதில் கிடைக்கும் என்று நானும் நம்புகிறேன்.’’

“சமீபத்தில், சசிகலா குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி பேசிய பேச்சுகள் சர்ச்சையாகியிருக்கின்றன... நீங்கள் எந்தக் கருத்தும் சொல்லவில்லையே?’’

“எங்கள் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இப்படிப் பேசியிருந்தால், அதற்கு நான் கொடுக்கும் பதிலடி வேறு மாதிரியாக இருக்கும். எங்கள் கட்சியை நிறைய பேர் ஆதரிக்கிறார்கள். அவர்கள் பேசுகிற பேச்சுகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆனால், ஒரு பெண் குறித்து இப்படி யார் பேசியிருந்தாலும், அது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே.’’