கட்டுரைகள்
Published:Updated:

“ஊழல் பட்டியல் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது..?”

காயத்ரி ரகுராம்
பிரீமியம் ஸ்டோரி
News
காயத்ரி ரகுராம்

- கொந்தளிக்கும் காயத்ரி ரகுராம்!

பா.ஜ.க-விலிருந்து விலகிய பின்னர், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கருத்துகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து முன்வைத்துவருகிறார் நடிகை காயத்ரி ரகுராம். சமீபத்தில் அவர்மீது பா.ஜ.க தரப்பில் சைபர் க்ரைம் போலீஸிடம் அளிக்கப்பட்ட புகார், மின்னல் வேகத்தில் வாபஸ் பெறப்பட்டது. அதன் பின்னணி உள்ளிட்ட அரசியல் விவகாரங்களை நம்மிடம் மனம் திறந்து பேசிய காயத்ரி ரகுராமின் நேர்காணல் இங்கே...

“பா.ஜ.க-விலிருந்து விலகிய பிறகு உங்களிடம் பல மாற்றங்கள் தெரிகின்றனவே?”

‘‘இந்த இடைவேளை, அரசியலை முழுமையாகக் கற்றுக்கொள்ள உதவியது. இதுநாள் வரை சுயமாக யோசிக்க வேண்டும் என்கிற எண்ணமில்லாமல் இருந்தேன். ஒரு கட்சி, அதன் கொள்கை மட்டுமே சார்ந்து ஆட்டு மந்தைபோல் செயல்பட்டிருக்கிறேன். வெளியே வந்து பார்க்கும்போது நிறைய வெளிச்சங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. சமூகநீதி, மதச்சார்பின்மை தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு குறித்த தெளிவு இவையெல்லாம் கிடைத்திருக்கின்றன.”

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

‘‘அப்படியானால் தி.மு.க-வில் இணையப்போவதாக வந்த செய்தி உறுதிதானா?”

‘‘அப்படி இல்லை. அரசியலில் வெவ்வேறு கொள்கைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஒரு பொதுவான பார்வையும், அனுபவமும் இப்போதுதான் கிடைத்திருக்கின்றன. மற்றபடி எந்தக் கட்சியில் இணைந்தாலும் வெளிப்படையாக அறிவிப்பேன்.”

“தி.மு.க-வின் கொள்கைகளை ஆதரித்துப் பேசுகிறீர்கள், பா.ஜ.க-வை வம்புக்கு இழுக்கிறீர்கள்... என்னதான் உங்கள் திட்டம்?”

‘‘நான் யதார்த்தத்தைத்தான் சொல்கிறேன். இதில் தி.மு.க ஆதரவு என்றெல்லாம் இல்லை. அண்ணாமலையைத் திட்டுவதுதான் என் வேலையா... தி.மு.க., அ.தி.மு.க-வினர் இரண்டு பேரும்தான் அண்ணாமலையைத் திட்டுகிறார்கள்.”

“ஆனால், காயத்ரி ரகுராம் அதை முழுநேர வேலையாகச் செய்துவருவதாக விமர்சிக்கப்படுகிறதே?”

‘‘யார் அண்ணாமலை... அவர் ஒரு மேனேஜர். அவரை எதிர்த்துத்தான் நான் பெரியாளாக வேண்டும் என்கிற அவசியம் எனக்குக் கிடையாது. அப்படியே எனக்கு விளம்பரம் வேண்டுமென்றால், நான் மோடி ஜியைத்தான் எதிர்க்க வேண்டும். அண்ணாமலை மற்றவர்களை வம்பிழுக்கவில்லையா... `சாராய அமைச்சர்’ என்கிறார். ஏன் பா.ஜ.க ஆளும் மற்ற மாநிலங்களில் அப்படி ஒரு துறையே இல்லையா... மற்றவர்களை மட்டம்தட்டி, தான் பெரிய ஆளாகிவிடலாம் என்று அண்ணாமலைதான் நினைக்கிறார். அவர் என்ன பேசுகிறாரோ அதுதான் அவருக்குத் திருப்பி கிடைக்கும்.''

ஹரீஷ் - அண்ணாமலை
ஹரீஷ் - அண்ணாமலை

“ஒருவேளை தமிழக பா.ஜ.க-வுக்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டால், காயத்ரி மீண்டும் பா.ஜ.க-வில் சேருவாரா?”

“எட்டு ஆண்டுகளாக நான் அந்தக் கட்சிக்காக உழைத்திருக்கிறேன். இருந்தபோதும் கட்சி என்னை விட்டுக்கொடுக்கவே தயாராக இருந்தது. அப்படி இருக்கும்போது நான் எப்படித் திரும்ப பா.ஜ.க-வுக்குப் போக முடியும்... தவிர தமிழக பா.ஜ.க தற்போது ‘வாழ்க’ கோஷம் போடுபவர்களையும், மோசடி ஆட்களையும், குண்டர்களையும் வைத்துக்கொண்டு ட்விட்டரில் மட்டும்தானே அரசியல் செய்கிறது... அங்கே போக விருப்பமில்லை.”

“மோசடிக் கும்பல், குண்டர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்..?”

“உதாரணத்துக்குச் சொல்கிறேன்... ஆருத்ரா வழக்கில் தேடப்படும் குற்றவாளியான ஹரீஷ் யார் என்று முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலைக்குத் தெரியாதா... அந்த ஹரீஷை அமர் காப்பாற்றுகிறார். அமரை அண்ணாமலை காப்பாற்றுகிறார். அண்ணாமலையை யார் காப்பாற்றப் போகிறார்கள் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்?”

“ஆருத்ரா விவகாரத்திற்கு பதிலடியாகத்தான் தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதாக விமர்சிக்கப்படுகிறதே?”

“அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், மற்றவர்களின் ஊழல் விவகாரங்களைப் பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது. வெறும் எக்சல் ஷீட்களை வைத்துக்கொண்டு, திமுக அமைச்சர்கள் மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 1.3 லட்சம் கோடி என்று கூறுகிறார். அண்ணாமலையின் தனிப்பட்ட செலவு கடந்த இரண்டு வருடங்களுக்கு மட்டுமே ரூபாய் 58 கோடி. இவை தவிர, சுய விளம்பரம், வார்ரூம், யூடியூப் சேனல்கள், ஹனிட்ராப் மற்றும் பிறரை இழிவுபடுத்த லஞ்சம் கொடுப்பதற்கான தொகையெல்லாம் எவ்வளவு இருக்குமென்று யோசித்துப்பாருங்கள். இதெல்லாம் வெறும் நான்கு ஆடுகளின் சொந்தக்காரர் செய்யும் செலவுகளா... இதற்கெல்லாமும் நண்பர்கள்தான் செலவு செய்கிறார்களா? அந்த நண்பர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளாமல் இதையெல்லாம் ஓசியில் வாங்கிக்கொள்கிறாரா அண்ணாமலை. மக்களுக்கு என்ன தேவையோ அதுதான் சரியான அரசியல். நம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வது சரியான அரசியல் இல்லை.”

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

“மக்கள் பிரச்னையை தமிழக பா.ஜ.க முன்னெடுக்கவேயில்லையா... நிலக்கரிச் சுரங்கத் தடைகூட தமிழக பா.ஜ.க-வின் முன்னெடுப்பில் நடந்ததாகச் சொல்லப்படுகிறதே?”

‘‘இதெல்லாம் அண்ணாமலை தன்னைப் பாதுகாத்துக்கொள்ளச் சொல்லும் கதைகள். தமிழ்நாட்டின் மொத்தக் கட்சிகளும் நிலக்கரிச் சுரங்கம் வேண்டாம் என்று சொல்லும்போது, பா.ஜ.க மட்டும் அதற்கு ஆதரவு தந்துவிட முடியுமா... அப்படிச் சொன்னால் தமிழகத்தில் பா.ஜ.க-வால் காலூன்ற முடியுமா... இந்த வெற்றி எல்லோருக்குமானது. அதை ஒன் மேன் ஷோவாக எடுத்துக்கொண்டு போக நினைப்பது ஆரோக்கியமான விஷயமில்லை. அடுத்து, தமிழ்நாட்டில் எத்தனையோ மக்கள் விரோத விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் குரல் கொடுக்காமல், ஆன்லைன் கும்பல்களை வைத்து என்மீது வழக்கு தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.‘‘

“வழக்கு தொடுத்து அடுத்த சில மணி நேரத்திலேயே திரும்பப் பெற்றிருக்கிறார்களே?”

“ `வழக்கு போட்டு அந்தம்மாவை வளர்த்துவிடுகிறீர்களா?’ என்று கொந்தளித்திருக்கிறார். உடனே, வாபஸ் வாங்கியிருக்கிறார்கள். இப்படி ட்விட்டர் அரசியல் செய்வதற்கு எதற்குக் கட்சித் தலைமைப் பதவியெல்லாம்?”