அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

அண்ணாமலையை சுற்றி ஒரு கேங் இருக்கிறது... அவர்கள் சொல்வதுதான் நடக்கிறது!

காயத்ரி ரகுராம்
பிரீமியம் ஸ்டோரி
News
காயத்ரி ரகுராம்

- ஆவேசத்தில் காயத்ரி ரகுராம்

தமிழக பா.ஜ.க-வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம், ஆறு மாதக் காலம் கட்சிப் பொறுப்புகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ‘`பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக என்னைத் தண்டித்திருப்பதில் நியாயமே இல்லை’’ எனக் கொந்தளித்துக் கொண்டிருந்தவரை சென்னை இல்லத்தில் சந்தித்து, இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளை முன்வைத்தோம்...

“கட்சியிலிருந்து ஆறு மாதம் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள்... என்னதான் பிரச்னை?”

“காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வுக்கான கமிட்டியில் நானும் ஓர் உறுப்பினர். நாச்சியப்பன் என்பவருக்கு அதன் தலைமைப் பொறுப்புபோல கொடுத்திருந்தார்கள். அவர் என்னிடம், “உங்கள் சார்பாகப் பங்கேற்க கலைஞர்கள் பட்டியல் கொடுங்கள்...’ என்று கேட்டிருந்தார். அதன்பேரில் என்னுடைய தரப்பில் நிறைய பேர் விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால், யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதில் எனக்கு வருத்தமுண்டு. அதோடு, மாநில நிர்வாகிகளுக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், என்னைப் புறக்கணித்திருக்கிறார்கள். இந்த வருத்தத்தை ட்விட்டரில் பதிவிட்டேன். அதை, அண்ணாமலைக்கு எதிராக நான் பேசுவதாக, செயல்படுவதாகச் சிலர் தவறாகச் சித்திரித்திருக்கிறார்கள்... அதுதான் பிரச்னையின் ஆரம்பம்.”

அண்ணாமலையை சுற்றி ஒரு கேங் இருக்கிறது... அவர்கள் சொல்வதுதான் நடக்கிறது!

“ஆனால், கூடலூர் ஆர்ப்பாட்டம் குறித்து நேரடியாக நீங்கள் அண்ணாமலையை அட்டாக் செய்ததாலேயே நீக்கப்பட்டதாகச் சொல்கிறார்களே?”

“அண்ணாமலை பா.ஜ.க-வுக்குள் வந்த பிறகுதான் இவ்வளவு கூட்டத்தைத் திரட்ட முடிகிறது என்று கூடலூர் ஆர்ப்பாட்டம் குறித்து ஒருவர் எழுதுகிறார். எனக்கு அது தவறாகப் பட்டது. நான் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். நீலகிரியில் மாஸ்டர் மதன், முருகன் போன்றோர் கட்சியை வளர்க்க வேலை செய்திருக்கிறார்கள். எனவே, இதை ஒரு தனிநபரின் வளர்ச்சியாக அல்லாமல், கட்சியின் வளர்ச்சியாகப் பார்க்க வேண்டும் என்று பதிலளித்தேன். ஆனால், வார் ரூமில் உட்கார்ந்துகொண்டு ஒருவரை மட்டும் முன்னிலைப்படுத்தி பரப்புரை செய்வது சரியானதல்ல.”

“ ‘வார் ரூம்’ வைத்துப் பரப்புரை நடக்கிறதா?”

“ஆம், கட்சியிலிருந்து நிதி ஒதுக்கி, கட்சியை வளர்க்க, மக்களிடையே கட்சியின் செயல்பாடுகளைப் பிரபலப்படுத்த ‘வார் ரூம்’ என்ற குழு இயங்குகிறது. ஆனால், அவர்களின் செயல்பாடுகளெல்லாம் கட்சியைப் பிரபலப்படுத்துவதைவிட, ஒரு தனிநபரை மட்டும் பிரபலப்படுத்துவதிலேயே இருக்கின்றன. மத்திய இணை அமைச்சர் முருகனோ, கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதியோ, நாங்களோ ஆற்றும் பணிகளெல்லாம் வெளியிலேயே தெரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் வார் ரூம் என்பதே அண்ணாமலைக்கு ஆதரவாகப் பேசும் கும்பல்தான். அவர்கள்தான் என்னைத் தனிப்பட்ட முறையில் ட்விட்டரில் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.”

“நீங்கள் டார்கெட் செய்யப்படுகிறீர்கள் என்பதற்கு ஏதாவது சாம்பிள்..?”

“வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட பலரை, நான் பொறுப்பு வகித்த வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சிப் பிரிவின் சார்பாக மீட்டு, தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறேன். அதற்காக என்னைப் பாராட்டி, நன்றி தெரிவித்து சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள். அதில் சிலருக்குப் பொறாமை. அதோடு கட்சியில் நடக்கும் சில தவறுகளைத் தைரியமாகச் சுட்டிக்காட்டுகிறேன். பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறேன். அதில் சிலருக்கு வயிற்றெரிச்சல். அண்ணாமலையைச் சுற்றி ஒரு கேங் இருக்கிறது. கட்சியில் அவர்கள் சொல்வதுதான் நடக்கிறது. இதற்கு முன்பு பா.ஜ.க அலுவலகத்தில், ‘எல்லாமே நான்தான்’ என்பது போன்ற நிலை இருந்ததில்லை.”

“அப்படியென்றால் பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?”

“பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், சிலர் அதிகாரத்தைத் தவறாகக் கையாள்கிறார்கள்.”

“ஆனால், தி.மு.க பேச்சாளருக்கு எதிராக பா.ஜ.க பெண் நிர்வாகிகள் நடத்திய வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டத்தில்கூட நீங்கள் கலந்துகொள்ளவில்லையே... அண்ணாமலைதானே பங்கேற்றார்?”

“உண்மையைச் சொன்னால் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று முதல் நாள் எங்கள் நான்கு பேருக்கும் வீடியோ கால் வந்தது. ஆனால், நிர்வாகி ஒருவர் போன் செய்து, ‘நாங்கதான் உங்களுக்காகக் குரல் கொடுக்கணும். நீங்க வர வேண்டாம்’ என்றார். ஏன் வர வேண்டாம் என்றார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. அண்ணாமலை வந்தார்... போராடிக் கைதானர்... செய்தியுமானார். அவ்வளவு மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன்.”

“இந்த ட்வீட் பிரச்னைக்குப் பிறகு அண்ணாமலை உங்களிடம் பேசினாரா?”

“ `திருச்சி சூர்யா மீதும், என் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பிவரும் செல்வக்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ மேலும், ‘இரண்டு வாரங்கள் எனக்குத் தனிப்பட்ட வேலைகள் இருப்பதால் கட்சிப் பணிகளில் கலந்துகொள்ள முடியாது’ என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினேன். உடனே கால் செய்தார். ‘சிஸ்டர் நீங்க நேரம் நிறைய எடுத்துக்குங்க. உங்களை சஸ்பெண்ட் பண்றோம்’ என்றார்.”

“இதெல்லாம் ‘டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராமின் அரசியல் ஸ்டன்ட்’ என்று விமர்சனங்கள் வருகின்றனவே?”

“நான் ஏன் நடிக்க வேண்டும்... அதை சினிமாவில் செய்தால் பணமாவது கொடுப்பார்கள். காயத்ரி ரகுராமாக, ரகுராம் மாஸ்டர் பெண்ணாக எனக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. யாரையும் திட்டித்தான் பேர் எடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எதையும் வெளிப்படையாகப் பேசுவதால் இப்படியான விமர்சனங்களை எதிர்கொள்கிறேன்.”

“அண்ணாமலை உங்களைக் கைவிட்டுவிட்டாரா?”

“சஸ்பெண்டுக்கு அதுதானே அர்த்தம்..?”