Published:Updated:

`முன்னேறிய மாநிலங்கள் கப்பம் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டுமா?' - போட்டுத்தாக்கும் நடிகை கஸ்தூரி

``கோயில் சொத்து என்பது அந்தக் குறிப்பிட்ட கோயிலுக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, அறநிலையத்துறையின் வசம் சென்றுவிட்டால், அந்த வருமானம் எந்தக் கோயிலுக்குப் போகிறது அல்லது எங்கே செலவிடப்படுகிறது என்பதெல்லாம் சரிவரத் தெரியாமலேயே போய்விடும்” - நடிகை கஸ்தூரி

உள்ளாட்சித் தேர்தல் முடிவில் ஆரம்பித்து, தமிழ்நாடு தினம் சர்ச்சை, 10% இட ஒதுக்கீடு ரத்து எனத் தொடர்ச்சியாக தமிழக அரசியல் கள நிலவரம் சூடாக இருந்துவருகிறது.

இந்த நிலையில், நாட்டு நடப்புகள் அனைத்திலும் தனது கருத்தை துணிச்சலாகப் பதிவு செய்துவரும் நடிகை கஸ்தூரியிடம் பேசினேன்...

''தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது?''

''தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போதே கஜானா நிதி நிலவரம் உட்பட அவர்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன. ஆனால், அந்த சவால்களையெல்லாம் இந்த ஐந்து மாதங்களில் நன்றாகவேதான் எதிர்கொண்டுவருகிறார்கள். அதேசமயம், தேர்தல் சமயத்தில் தி.மு.க கொடுத்திருந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அவர்களால் நிறைவேற்றவும் முடியாது. மக்களும்கூட, 'வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றிவிடுவார்கள்' என்று தி.மு.க அரசை எதிர்பார்க்கவும் இல்லை.

எப்போதும் தி.மு.க அரசின் செயல்பாடுகள் 30% என்றால், அதை விளம்பரப்படுத்துவதில் 70% ஆர்வம்காட்டுவார்கள். அந்த அளவுக்கு மீடியா நெட்வொர்க்கும் அனுபவமும் அவர்களுக்கு உண்டு. மற்றபடிப் புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசின் செயல்பாடுகள் என்று பார்த்தால், ஓ.கே ரகம்தான்!''

கஸ்தூரி
கஸ்தூரி

''தமிழ்நாடு தினம் நவம்பர் 1-ம் தேதியா, ஜூலை 18-ம் தேதியா என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறதே?''

''தேர்தலின்போது, தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் 'பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என ஒதுக்கிவைத்துவிட்டு, மற்ற விஷயங்களில்தான் இப்போது அவர்கள் ஆர்வம் செலுத்திவருகிறார்கள். அந்தவகையில், சமூகநீதி கண்காணிப்புக்குழு என்ற ஒன்றை ஆரம்பித்து, அதில் அக்மார்க் தி.மு.க கொள்கைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் சுபவீ உள்ளிட்டவர்களுக்கு பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே பெயர்வைத்த நாளை இப்போது மாற்றியமைத்துக் கொண்டாடுகிற தேவை என்ன வந்தது... கொண்டாட்ட மனநிலையிலா இப்போது நாம் இருக்கிறோம்... வேண்டுமானால், 'தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக...' என டி.வி-யில் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் போடுவதற்கு வேண்டுமானால், அரசின் இந்த அறிவிப்பு உதவும். அவ்வளவுதான்.

தமிழ்நாடு தினம் என்பது எல்லோரும் பெருமையாக கொண்டாடக்கூடிய தினம். ஆனால், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இந்த விஷயத்தில் அடித்துக்கொள்வதைப் பார்த்தால், நமது பெருமையை சீர்குலைப்பதாகத்தான் தெரிகிறது.''

''வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறதே?''

''என்னைப் பொறுத்தவரையில், எல்லா ஒதுக்கீட்டையுமே எதிர்க்கிற ஆள் நான். எனவே, உள் இட ஒதுக்கீடு, வெளி இட ஒதுக்கீடு எல்லாவற்றையுமே சமூகநீதி - சமத்துவத்துக்கு எதிரானதாகத்தான் பார்க்கிறேன். இன்றைக்குத் தமிழ்நாட்டில், குறிப்பிட்ட நான்கு சமூகங்களைத் தவிர மற்ற அனைத்துச் சாதியினருமே ஓ.பி.சி-பிரிவுக்குள்தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் தனித்தனியாக உள் இட ஒதுக்கீடு கேட்க ஆரம்பித்தால், தலைசுற்றிவிடும்.

பொதுவாக எந்தவொரு மாநிலத்திலுமே ஆதிக்கம் செலுத்திவரக்கூடிய சமூகத்தினர் இது போன்று கூடுதல் முன்னுரிமைகளைக் கேட்பார்கள்தான். ஆனால், மகாராஷ்டிராவில், மராத்தியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை அண்மையில் உச்ச நீதிமன்றமே ரத்து செய்துவிட்டது. எனவே, இந்த வழக்கில் மேல் முறையீடு சென்றாலும், தமிழக அரசுத் தரப்பில் என்ன வாதம் வைக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே தீர்ப்பு கிடைக்கும்.''

மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான்
மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான்

''நடிகர் ஷாருக் கான் ஓர் இஸ்லாமியர் என்பதாலேயே போதைப்பொருள் வழக்கில் அவரது மகனைப் பழிவாங்குகிறது மத்திய பா.ஜ.க அரசு என சீமான் சொல்கிறாரே?''

''ஷாருக் கானைத் தொட்டால் அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைக்கும் அல்லது கூடுதலாக வாக்குகள் கிடைக்கும் என்று தெரிந்தால் மட்டுமே அரசியல்வாதிகள் தங்களது மதவாதத்தைப் பரப்புவார்கள். மற்றபடி தேவையே இல்லாமல், கொள்கைகளை செயல்படுத்திக்கொண்டிருக்க மாட்டார்கள். இது எல்லா அரசியல்வாதிகளுக்குமே பொருந்தும்.

ஆர்யன் கான் விஷயத்தில் உண்மை இருப்பதால்தான் இந்த வழக்கில், மத்திய அரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகமும் (Narcotics Control Bureau) மகாராஷ்டிரா மாநில காவல்துறையும் தீவிரம் காட்டிவருகின்றன. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனா கட்சிதான் ஆட்சி செய்கிறது. எனவே, இது வெற்று வாதம்!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''உ.பி-யில் விவசாயிகளை கார் ஏற்றிப் படுகொலை செய்த மத்திய அமைச்சரின் மகனைக் கைதுசெய்ய தயக்கம் காட்டிய ஆட்சியாளர்கள், ஆர்யன் கானை ஜாமீனில் விடுவிக்ககவும் தயக்கம் காட்டினார்கள்தானே?''

''ஆர்யன் கான் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என்று சொல்லிவிட முடியாது. அதேசமயம், அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும்கூட கூடுதலாக மூன்று நாள்கள் சிறைக்குள்ளேயே வைத்து இழுத்தடிக்கிறார்களே என்று நீங்கள் கேட்டால் என்னுடைய பதில் 'ஆமாம்'தான்.

ஆனால், இதன் பின்னணியில் அரசு எந்திரம் இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்றாலும்கூட யாரோ ஒருவரது தனிப்பட்ட பழிவாங்கல் முயற்சியால்தான் இப்படியெல்லாம் இழுத்தடிக்கப்படுகிறது என்றே நினைக்கிறேன். `முதல்வன்’ படத்தில் வருவதுபோல், சாதாரணமான ஒரு டிரைவர் சண்டை எப்படி சாதிக் கலவரமாக மாறிவிடுமோ... அதைப் போன்றதுதான் இதுவும்.''

கோயில் நகைகள் உருக்கப்படுவது கொள்ளைச் செயலா? - ஹெச்.ராஜா சாடலும் உண்மை நிலவரமும்

''கோயில் காணிக்கை நகைகளை உருக்கி, வங்கியில்வைத்து வட்டி வருமானம் பெற முயலும் இந்து அறநிலையத்துறையின் செயல்பாடு நல்லதுதானே... அதை ஏன் விமர்சிக்கிறீர்கள்?''

''கோயிலில் காணிக்கையாகக் கிடைக்கும் தங்க நகைகள் என்பவை மிகவும் சிறிய அளவிலானவை. இவற்றை மொத்தமாக உருக்கி, தங்கக்கட்டிகளாக வங்கி லாக்கர்களில் வைத்து வருமானம் பெறுவதென்பது நல்ல விஷயம்தான். ஆண்டாண்டு காலமாக இதுதான் நடைமுறையிலும் இருந்துவருகிறது. ஆனால், தி.முக அரசு பொறுப்பேற்ற பிறகுதான், ஒரு கோயிலில் காணிக்கையாகக் கிடைக்கக்கூடிய நகைகளை உருக்கி, எடுத்து அதன் மூலம் வருகிற வட்டி வருமானத்தை அந்தக் கோயிலின் நலப்பணிகளுக்கு மட்டும் செயல்படுத்தாமல், இந்து அறநிலையத்துறை மூலமாக அனைத்துக் கோயில்களின் நலப்பணிகளுக்கும் செலவிட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

கோயில் சொத்து என்பது அந்தக் குறிப்பிட்ட கோயிலுக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, அறநிலையத்துறையின் வசம் சென்றுவிட்டால், அந்த வருமானம் எந்தக் கோயிலுக்குப் போகிறது அல்லது எங்கே செலவிடப்படுகிறது என்பதெல்லாம் சரிவரத் தெரியாமலேயே போய்விடும். மேலும், விநாயகருக்கு வேண்டிக்கொண்டு காணிக்கை செலுத்துபவரது நகை, கருப்பசாமி கோயிலுக்கு செலவிடப்படுமேயானால், விநாயகரை நம்பி வேண்டிக்கொண்ட பக்தனின் நோக்கம்-நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகாதா? இதைத்தான் நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.

கோயில் நிர்வாகத்தில் இந்து அறநிலையத்துறை சம்பந்தப்படுவதே தவறு. இந்த நிலையில், 'எல்லா கோயில்களுமே இந்துக் கோயில்கள்தான். ஒரு கோயில் சொத்தை எடுத்து வேறொரு கோயிலுக்குத்தான் செலவிடுகிறோம்' என்று இந்து அறநிலையத்துறை எப்படிச் சொல்ல முடியும்... அதை அந்தக் கோயில் நிர்வாகம்தானே சொல்ல வேண்டும்... ஒரு வீட்டுச் சொத்தை எடுத்து, மற்றொரு வீட்டுக்குக் கொடுத்துவிட முடியுமா?''

கஸ்தூரி
கஸ்தூரி

''அப்படியென்றால், ஒரே நாடு என்று சொல்லிக்கொள்கிற மத்திய பா.ஜ.க அரசு, முன்னேறிய மாநிலம் எனத் தமிழ்நாட்டுக்கு குறைவான நிதி ஒதுக்குவதும், பின்தங்கிய மாநிலம் என உத்தரப்பிரதேசத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதும் தவறுதானே?''

''மத்திய பா.ஜ.க அரசின் புரட்டுகளில் இதுவும் ஒன்று. எனவே, இதை ரொம்ப ரொம்ப வன்மையாகக் கண்டிக்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க ஆள்கிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி ஆள்கிறது. எனவே இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடகா மாநிலம் முன்னேறிய மாநிலமா, பின்தங்கிய மாநிலமா என்று மத்திய அரசுதான் சொல்ல வேண்டும்.

பின்தங்கிய மாநிலம் என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து மத்திய பா.ஜ.க அரசு நிதி ஒதுக்கீடு செய்துகொண்டே இருக்கும், முன்னேறிய மாநிலங்கள் தொடர்ந்து கப்பம் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டுமா?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு