Published:Updated:

``அதைச் சொல்லித்தானே உதய் அண்ணா வாக்கு கேட்டார்; இப்போ என்ன ஆச்சு?” - போட்டுத்தாக்கும் நடிகை கஸ்தூரி

கஸ்தூரி - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தி.மு.க - அ.தி.மு.க... மத்தியில் காங்கிரஸ் - பா.ஜ.க... என அனைத்துக் கட்சிகளையும் ட்விட்டரில் ரவுண்டுகட்டி அடித்துவருபவர் நடிகை கஸ்தூரி. அவரிடம் அரசியல் சூழல் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

``அதைச் சொல்லித்தானே உதய் அண்ணா வாக்கு கேட்டார்; இப்போ என்ன ஆச்சு?” - போட்டுத்தாக்கும் நடிகை கஸ்தூரி

தமிழ்நாட்டில் தி.மு.க - அ.தி.மு.க... மத்தியில் காங்கிரஸ் - பா.ஜ.க... என அனைத்துக் கட்சிகளையும் ட்விட்டரில் ரவுண்டுகட்டி அடித்துவருபவர் நடிகை கஸ்தூரி. அவரிடம் அரசியல் சூழல் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

Published:Updated:
கஸ்தூரி - உதயநிதி ஸ்டாலின்

``சமீபகாலமாக திமுக-வைக் கடுமையாக விமர்சிக்கும் காரணம் என்ன?"

``நான் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டைத்தான் விமர்சிக்கிறேன். திமுக-வை இல்லை. அரசு நல்லது செய்தால், அதைப் பாராட்டும் முதல் ஆள் நான்தான். அந்த வகையில், தமிழ்நாடு பட்ஜெட்டை முதல் ஆளாகப் பாராட்டினேன். 'தமிழச்சி' என்ற முறையில் அரசின் தவற்றைச் சுட்டிக்காட்டுவது எனது தார்மிக உரிமை. ஆனால், அதற்கு வரும் எதிர்ப்பை, தனிநபர் தாக்குதலைச் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. பெரியார், அண்ணா, கலைஞர் பெயரைச் சொல்லி தரம்தாழ்ந்து என்னைப் பேசுபவர்களை, திட்டவேண்டிய சூழல் ஏற்படுகிறது."

 கஸ்தூரி
கஸ்தூரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அரசை விமர்சிப்பது கடமையென்றால், மத்திய அரசை நீங்கள் விமர்சிக்க தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறதே?"

``இல்லவே இல்லை... மத்திய ஆளும் பி.ஜே.பி., ஜி.எஸ்.டி வரியை கொண்டு வரும்போது, பத்தி பத்தியா எழுதி, புலம்பியிருக்கிறேன். ஆனால், அதை தி.மு.க-காரர்கள் படிக்கக்கூட மாட்டார்கள். தி.மு.க-வை விமர்சித்தால் கம்பு சுற்றத் தொடங்கிடுவார்கள். ரெளடிகளை கும்பல் சேர்த்து, எதிர்த்து பேசும் நபர்களை பயமுறுத்துகிறார்கள். அவர்களை இந்த அரசு கண்டிக்கவே இல்லை. விமர்சனங்களைக் காதுகொடுத்துக் கேட்காமல், 'வசவாளர்கள்' என்று கடந்து செல்வது, ஆட்சிக்கு நல்லது இல்லை."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

" 'திராவிட மாடல்' என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``சொல்வது ஒன்று செய்வது மற்றொன்று என்பதுதான் திராவிட மாடல். நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. மதுவுக்கு எதிராக ஸ்டாலின் கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு, பேனரைக் கையில் ஏந்தி போராட்டம் செய்தார். ஆனால், இப்போது டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தை வைத்து மட்டுமே அரசை நடத்துகிறார். சென்னை- சேலம் எட்டுவழிச் சாலை உள்ளிட்ட எல்லாவற்றையும் எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்துவிட்டு, ஆளுங்கட்சியான பின்பு நிறைவேற்றத் துடிக்கிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் வெடித்தால், அது மக்கள் கலவரம். ஆனால், கள்ளக்குறிச்சியில் கலவரம் வெடித்தால், அது சமூக விரோதிகளால் நடந்தது என்று பேசுகிறார்கள். இந்த போலித்தனத்தை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை."

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி

"இதற்கு முன்பு மாணவிகள் தற்கொலையின்போது பொங்கும் நீங்களே கள்ளக்குறிச்சி விவாகரத்தில் அமைதியாகத்தானே இருந்தீர்கள்?"

``அது குறித்து விரிவாகப் பேசி, நான் தமிழில்தான் வீடியோ போடவில்லை. ஆனால், ஆங்கில சேனல்களில் தொடர்ந்து பேசுகிறேன். மாணவிகள் தற்கொலை, பள்ளிகளில் நடக்கும் அநியாயங்களைக் கேட்டுக் கேட்டு எனக்குமே அது மரத்துப்போச்சு. கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்துக்கு தி.மு.க அரசு முட்டு கொடுத்து, எதையோ மறைக்கிறது."

"நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவை மத்திய அரசுதானே கையில் வைத்துக்கொண்டு ஒப்புதல் வழங்காமல் இருக்கிறது?"

``வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் நீட் தேர்வை ஒழித்துவிடலாம். அந்த ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றுதானே உதய் அண்ணா வாக்கு சேகரித்தார். தி.மு.க வெற்றிபெற்றும் இன்னும் நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை. அப்படியென்றால், அவர் சொன்னத்கெல்லாம் அவருக்கு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா... நாடு முழுவதும் 99 சதவிகிதம் பரவலாக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தி.மு.க-வுக்கும் தெரியும். மக்களை ஏமாற்றத்தான் அதைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். 'கோபேக் மோடி' என்று எதிர்த்தவர்கள், இன்று எல்லாவற்றுக்கும் 'வெல்கம் வெல்கம்' என்று சிவப்புக் கம்பளமாக முதுகைக் காட்டுகிறார்கள்."

கஸ்தூரி
கஸ்தூரி

"பால், அரிசி, மருத்துவமனை ஐ.சி.யூ அறை ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி விதித்த மத்திய அரசின் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``இது முற்றிலும் மக்கள் விரோத செயல். உயிருக்குப் போராடும் நிலையில், ஐ.சி.யூ-வில் சேர்ந்த நோயாளி, ஜி.எஸ்.டி-யோடு பில்லைப் பார்த்தால், உயிர் போய்விடும். இது அப்பட்டமான துரோகம். அரசே மக்களுக்கு எதிரியாக இருக்கக் கூடாது. வரி விதிப்புக்கு நொண்டிச் சாக்கு சொல்வதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். ட்ரெய்லர் போல முதலில் அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்துவிடுகிறார்கள். அதன் பின்புதான் அதை எப்படிச் செயல்படுத்துவது என்றே யோச்சிக்கிறார்கள்போல. மெயின் பிக்சர் பார்ப்பதற்குள் ஒருவழியாகிவிடுகிறோம். அதேநேரத்தில், தமிழகத்துக்குப் பல நல்லதையும் பா.ஜ.க அரசு செய்கிறது."

" ஆனால், மின்சார விலையை ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு மிரட்டியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறாரே?"

``இதில் பாதி உண்மை. பாதி பொய். உதய் மின் திட்டத்தில் இணைந்த மாநில அரசு, மத்திய அரசுக்குக் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு மின்சாரத்துறையின் கடன் சுமையைக் காரணம் காட்டி அதைக் கொடுக்க மறுக்கிறது. இதை முறையாகக் கொடுக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு கூறியிருக்கிறதே தவிர, அதை மக்களிடமிருந்து வாங்கிக் கொடுக்கச் சொல்லவில்லை. இதை தெளிவுபடுத்தவேண்டிய தமிழக பா.ஜ.க செயலற்று இருக்கிறது."

கஸ்தூரி
கஸ்தூரி

``தமிழக பா.ஜ.க தாங்கள்தான் பலமாக இருப்பதாகவும், தாங்கள்தான் எதிர்க்கட்சி என்றும் கூறுகிறார்களே?"

(பலமாகச் சிரிக்கிறார்)... ``தமிழக பா.ஜ.க எதிர்க்கட்சியாகவெல்லாம் இல்லை. வெகுஜன மக்களிடமே இன்னும் அவர்கள் செல்லவில்லை. அண்ணாமலை நன்றாகப் பணியாற்றினாலும், அவரின் சகாக்கள் சரியில்லை."

"அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறாரே?"

``அம்மா மறைந்த பின்னர், கட்சியின் விசுவாசிகளால் ஜிரணிக்க முடியாத பல விஷயங்கள் அ.தி.மு.க-வில் நடக்கின்றன. அதில் ஒன்றுதான், அம்மாவை நிரந்தர பொதுச்செயலாளர் என்பதிலிருந்து மாற்றிருப்பதும். கட்சியைவிட தனிமனிதர்கள் பெரிதாகிவிட்டார்கள். இது கட்சிக்கும் நல்லதில்லை. தனிநபர் முக்கியத்துவத்தில் தி.மு.க இருந்ததால்தான், அங்கு இப்போது 'சின்னவர்' ஒருவர் உருவாகியிருக்கிறார். ரத்த பாசத்துக்காக பா.ம.க., ம.தி.மு.க-வில் வாரிசுகளுக்கு முடிசூடப்பட்டிருக்கிறது. அதேபோல, அ.தி.மு.க குடும்ப அரசியலை நோக்கி நகரும். தமிழக மக்களுக்காக அரசியல் கட்சிகள் யோசிக்காமல், தாங்கள் பெற்ற மக்களுக்காகவே யோசிக்கிறார்கள்."

"தலைவர்களுக்குப் பிரச்னை வந்தால் மட்டுமே தமிழக காங்கிரஸ் போராடுவதாகக் கூறப்படுகிறதே?"

``காங்கிரஸில் எத்தனை கோஷ்டி இருக்கின்றன என்று அவர்களுக்கே தெரியாதநிலையில், அட்லீஸ்ட் இதற்காகவாவது ஒன்றிணைந்து போராடுகிறார்களே என்று சந்தோஷம்தான்படுகிறேன். அவர்கள் திமுக-வுக்கு பல்லக்கு தூக்குவதற்கும், சோனியா காந்திக்காகவும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள்."

கஸ்தூரி
கஸ்தூரி

``அரசு விழாக்களில் மதம் சார்ந்த பூஜைகள் செய்வது குறித்து தருமபுரி எம்.பி செந்தில்குமார் பேசியிருக்கிறாரே?"

``சமத்துவம் என்பதற்கு எல்லா மதமும் ஒரே இடத்தில் நிற்க வேண்டும் என்பது அவசியமில்லை. எல்லா மதங்களையும் மதிப்பதுதான். தி.மு.க அதை ஒருபோதும் செய்யாது. விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்களை கேள்வி கேட்பது அவரின் உரிமையாக இருக்கலாம். ஆனால், காசுக்காக பூஜை செய்யவந்த புரோகிதரை, மிகத் தரக்குறைவாகப் பேசியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் நபர்களை மனிதாபிமானத்தோடு அணுகும் தி.மு.க., பிராமணர்களை மட்டும் விலங்குகள்போல நடத்துகிறார்கள். பிராமணர்கள் எதிர்ப்பு, இந்து மத அவமதிப்பு ஆகியவைதான் திராவிட மாடலில் மறைந்திருக்கும் முகம்."