அரசியல்
அலசல்
Published:Updated:

“உங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஒரு நியாயம்... எனக்கு ஒரு நியாயமா?” - கேட்கிறார் குஷ்பு

குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
News
குஷ்பு

இங்க பாருங்க... பெண்களுக்கு எதிராக யார் தவறாகப் பேசினாலும் அதை நிச்சயம் கண்டிக்க வேண்டும். கட்சிரீதியாகப் போட்டிபோட பெண்கள் நாங்கள்தான் கிடைத்தோமா... இது கட்சிக்கு அப்பாற்பட்டது.

தி.மு.க மேடையில், நடிகை குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க பெண் நிர்வாகிகள் பற்றிப் பேசிய பேச்சுக்குத் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறார் குஷ்பு. சமூக வலைதளப் பக்கங்களில் இது குறித்த தன் ஆதங்கங்களைத் தொடர்ந்து பதிவுசெய்து வருகிறவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு சாதாரண நிர்வாகியின் பேச்சுக்காக, முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறீர்களா?”

“ஸ்டாலின் சார் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று நான் சொல்லவே இல்லை. அவர் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியமும் கிடையாது. ஆனால், இந்த மாதிரி கேவலமான பேச்சாளர்களைக் கட்சியைவிட்டு நீக்க வேண்டும். ஏனென்றால், தி.மு.க-விலிருந்து தொடர்ந்து தவறான பேச்சுகள், தவறான கருத்துகள் வெளிவருவதால்தான், ‘நிம்மதியா தூங்கவே முடியலை’ என்று சொன்னார் முதல்வர். ஆனால், அவர் சொல்லியும் தொடர்ந்து அப்படித்தான் பேசுகிறார்கள். ஒரு பெண் பற்றி இவ்வளவு இழிவாகப் பேசும்போது உங்கள் கட்சியின் அமைச்சர் மேடையில் உட்கார்ந்து வெட்கமே இல்லாமல் சிரித்துக்கொண்டு இருக்கிறார். எனவே, இது அந்தப் பேச்சாளர் மேலுள்ள தவறு மட்டும் கிடையாது.”

“உங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஒரு நியாயம்... எனக்கு ஒரு நியாயமா?” - கேட்கிறார் குஷ்பு

``இந்த விவகாரத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் என்ன செய்திருக்க வேண்டும்?”

“ `என் முன்னால்தான் அந்தப் பேச்சாளர் அப்படிப் பேசினார். என் முன்னாடி அப்படிப் பேசியிருக்கக் கூடாது. நான் மன்னிப்புக் கேட்கிறேன்’ என்று ஒரு வார்த்தையாவது இதுவரை சொன்னாரா அமைச்சர்... சொல்லவே இல்லையே... இதுவே தி.மு.க குடும்பத்திலுள்ள பெண்களைப் பற்றி இப்படித் தவறாகப் பேசியிருந்தால், இப்படித்தான் சிரித்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பாரா... தி.மு.க-காரர்கள் இந்நேரம் தெருவில் இறங்கி தர்ணா பண்ணியிருப்பார்கள்... வீட்டில் கல்லைத் தூக்கி வீசியிருப்பார்கள்... அப்படியானால் உங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஒரு நியாயம்... நான் பா.ஜ.க-வில் இருப்பதால் எனக்கு ஒரு நியாயமா?”

“தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, தன் கட்சிக்காரர் அநாகரிகமாகப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறாரே?”

‘‘கனிமொழி ஒரு தாயாக, ஒரு பெண்ணாக இருப்பதால் மன்னிப்புக் கேட்கிற தைரியம் அவரிடம் இருக்கிறது. மாண்புமிகு முதல்வரிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். நான் உங்களுக்கு ஓட்டுப் போட்டேன் என்றாலும், போடவில்லை என்றாலும் எங்களுக்கு நீங்கள்தான் முதல்வர். உங்கள்மீது எனக்கு மரியாதை இருக்கிறது. உங்களுக்கு நான் மரியாதை கொடுக்கும்போது, என்னுடைய மரியாதையை, பெண்களுடைய மரியாதையைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு. கொச்சையாகப் பேசிய அந்தப் பேச்சாளரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அமைச்சர் மனோ தங்கராஜ் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.”

“அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்புக் கேட்கவில்லை என்றால்..?”

``இந்த விவகாரம் குறித்து, தேசிய மகளிர் ஆணையத்தில் நான் புகார் கொடுக்கப்போகிறேன். அமைச்சர் மன்னிப்புக் கேட்கவில்லையென்றால், அது அவருடைய கேரக்டரைத்தான் வெளிக்காட்டும். மன்னிப்புக் கேட்பதால் யாருமே சிறியவர்கள் ஆகிவிட மாட்டார்கள். தவறு நடக்கும்போது மன்னிப்புக் கேட்கிறவன் தைரியசாலி.’’

“தி.மு.க-வினர் மட்டும்தான் இப்படிப் பேசுகிறார்கள் என்கிறீர்களா?”

“மற்ற கட்சிகளிலும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து யாரும் பேசியது கிடையாது. இவர்களுக்கு தைரியம் எங்கேயிருந்து வருகிறது... யார் அந்த தைரியத்தைக் கொடுக்கிறார்கள்... தலைமையிலிருந்து எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள் என்கிற தைரியம்தான். இன்றைக்கு என்னைப் பற்றிப் பேசியவர்கள், நாளை வேறு யாராவது ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுவார்கள். இப்போது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால்... ஒருநாள் இவர்களே தி.மு.க குடும்பப் பெண்களைப் பற்றித் தவறாகப் பேசுவார்கள்.”

“அண்மையில்கூட உங்கள் கட்சியைச் சேர்ந்த வி.பி.துரைசாமி நடிகை நயன்தாரா பற்றித் தரக்குறைவாகப் பேசினார். நடிகை கஸ்தூரிகூட ட்விட்டரில்...”

(கோபமாகக் குறுக்கிடுகிறார்) ``இங்க பாருங்க... பெண்களுக்கு எதிராக யார் தவறாகப் பேசினாலும் அதை நிச்சயம் கண்டிக்க வேண்டும். கட்சிரீதியாகப் போட்டிபோட பெண்கள் நாங்கள்தான் கிடைத்தோமா... இது கட்சிக்கு அப்பாற்பட்டது. ஒரு பெண்ணுக்கு அநியாயம் நடக்கிறதென்றால், எல்லோரும் சேர்ந்து அவர் பக்கம் நிற்க வேண்டும். கட்சிரீதியான பாகுபாடு இதில் கிடையாது. பெண்களைப் பற்றி யார் கொச்சையாகப் பேசினாலும் அது தவறுதான்.

அவர்கள் வீட்டுப் பெண்களைக் கை காண்பித்து `வர்றியாடி...’ என்று கேட்டால் சும்மா இருப்பார்களா... இது என்ன Given take Policy-யா... இவர்களை மாதிரி ஆட்களால்தான் பெண்கள், அரசியலுக்கு வர வேண்டாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த மாதிரி நேரத்தில் நாம் தைரியமாகப் பதிலடி கொடுக்க வேண்டும். அந்த பயந்தாங்கொள்ளி அமைச்சர் இப்போது ஓடி ஒளிந்துகொண்டார் பாருங்கள்... இவர்களின் தைரியம் இவ்வளவுதான்!”