Published:Updated:

அங்கேயும் இங்கேயும் கட்சி கட்சியா போறதுக்கு அசிங்கமா இருக்குங்க!

கோவை சரளா
பிரீமியம் ஸ்டோரி
கோவை சரளா

- ‘ஒதுங்கும்’ கோவை சரளா

அங்கேயும் இங்கேயும் கட்சி கட்சியா போறதுக்கு அசிங்கமா இருக்குங்க!

- ‘ஒதுங்கும்’ கோவை சரளா

Published:Updated:
கோவை சரளா
பிரீமியம் ஸ்டோரி
கோவை சரளா

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கமலின் ‘மக்கள் நீதி மய்யத்தில்’ இணைந்தார் பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா. இணைந்த வேகத்திலேயே கட்சிப் பொறுப்புகளைப் பெற்றார்; பிரசாரங்களில் ஈடுபட்டார்; வேட்பாளர் தேர்வில் கமலுடன் பங்கேற்கும் அளவுக்குச் சென்றார். ஆனால், அந்தத் தேர்தலுக்குப் பின்னர் எங்குமே தென்படாத கோவை சரளா, திடீரென மார்ச் 28-ம் தேதி சென்னை பெரம்பூரில் நடந்த தி.மு.க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“என்ன... திடீரென மீண்டும் அரசியல் பக்கம்?”

“அரசியலெல்லாம் கிடையாதுங்க. முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழான்னு கூப்பிட்டாங்க. அதனால், போயிட்டு வந்தேன். அதுவும் சினிமா நடிகையாத்தான் போனேன்.”

“மக்கள் நீதி மய்யத்தில் இருக்கிறீர்கள்தானே?”

“நான் இப்போ எந்தக் கட்சியிலயும் இல்லை. எந்த நிகழ்ச்சிக்கும் போறதுமில்லைங்க. நான் நார்மல் மனுஷியா இருக்கேன். ஓட்டுப் போடுற உரிமையுள்ள ஒரு தமிழ்நாட்டுப் பிரஜை, அவ்ளோதான். நான் உண்டு, என் வேலை உண்டுனு இருக்கேங்க.”

அங்கேயும் இங்கேயும் கட்சி கட்சியா போறதுக்கு அசிங்கமா இருக்குங்க!

“ம.நீ.ம-வில் கேட்டால், ‘அவர் ஆக்டிவாக இல்லை. மற்றபடி அதிகாரபூர்வமாக இன்னும் கட்சியிலிருந்து விலகவில்லை’ என்று சொல்கிறார்களே?”

“அதாங்க... நான் ஆக்டிவா இல்லை, எங்கேயுமே போறதில்லை. கட்சியில இருக்கேன்னும் சொல்லலை, இல்லேன்னும் சொல்லலை, விலகிட்டேன்னும் சொல்லலை. ஆக்டிவா இல்லைன்னாலே கட்சியில இல்லைன்னுதானே அர்த்தம்? நான் இருக்குறதால கட்சிக்கோ, அந்தக் கட்சியில இருக்குறதால எனக்கோ எந்த லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. நான் வேற கட்சியில சேர்ந்துட்டேன்னும் சொல்லலை. அ.தி.மு.க உறுப்பினர் அட்டைகூடத்தான் இன்னமும் என்கிட்ட இருக்கு. அதுக்கு என்ன பண்ண முடியும்? கட்சி உறுப்பினர் அட்டை கையிலருந்தா ஃப்ளைட்ல ஃப்ரீ டிக்கெட் கிடைக்குமா... விசா கிடைக்குமா... சொல்லுங்க. நான் என்ன தி.மு.க விழாவுக்குப் போயிட்டு, மய்யம் சரியில்லை, கமல் சார் சரியில்லைனு ஏதாவது சொன்னேனா... எங்காவது குறை சொல்லியிருக்கேனா? அந்த விழாவுலகூட சினிமாத்துறையைச் சேர்ந்தவராக வந்திருக்கேன்னு சொன்னேனே தவிர, அரசியல்ரீதியா வந்திருக்கேன்னு சொல்லலை. சும்மாச் சும்மா அங்கேயும் இங்கேயும் கட்சி கட்சியா போறதுக்கு அசிங்கமா இருக்குங்க.”

“கட்சியில் இணைந்ததுமே, உங்கள்மீது நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்த கமல்ஹாசனின் கட்சியைவிட்டு வெளியே வந்தது நியாயமா?”

“பொறுப்பெல்லாம் நான் எதிர்பார்க்கலை. பொறுப்பு கொடுத்தாத்தான் நான் கட்சியில இருப்பேன்னு அவரும் நினைக்கலை. கமல் சாரா பார்த்துக் கொடுத்தார். கொடுத்த வேலையை முடிச்சுட்டேன், அதனால வந்துட்டேன். நம்மலால அங்கேயும் இங்கேயும் வெயில்ல அலைய முடியாதுங்க... மீட்டிங் போயெல்லாம் பேச முடியாதுங்க. நான் கொஞ்சம் ஆன்மிகமா போய்க்கிட்டு இருக்கேன். என்னைப் பொறுத்தவரைக்கும் எல்லாரும் நல்லாருக்கணும், எல்லாரும் வேணும்னு நினைக்கிறவ நான். எனக்கு யார் மேலயும் எந்தப் பகையும் கிடையாது. பகையை வெச்சுக்கிட்டு நாம என்ன பண்ணப்போறோம் சொல்லுங்க. எல்லாருமே நல்லவங்கதான்.”

“திடீரென முதல்வர் ஸ்டாலினைப் பாராட்ட என்ன காரணம்?”

“ஒரு தலைவரோட பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்றதுல என்ன தப்பு இருக்கு... அவரோட செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது தப்பா... வாழ்த்துவதால் நாம என்ன குறைஞ்சா போயிருவோம்? உண்மையிலேயே முதல்வர் ஸ்டாலின் நல்லா ஆட்சியை நடத்திக்கிட்டு இருக்காருங்க. எந்த அரசாங்கமும் செய்யாத அளவுக்குப் பெண்களுக்குச் சரிசமமான அளவுல பல நல்ல பொறுப்புகளை நமது முதல்வர் மட்டும்தான் கொடுத்திருக்கார். முன்னாள் முதல்வர் மகனாக இருந்தாலும், கடுமையாக உழைத்தே முதல்வராக ஆகியிருக்கார். பேச்சுல நிதானம், செயல்பாட்டுல தெளிவு, நடையில மிடுக்கு என நாம் பெருமைப்படுகிற வகையிலதான் முதல்வர் செயல்படுறாருங்க.”

“விரைவில் தி.மு.க-வில் உங்களை எதிர்பார்க்கலாமா?”

“அந்த மாதிரியெல்லாம் எதிர்பார்க்காதீங்க. இப்ப ஆட்சில இருக்குற தி.மு.க-வுக்கு நான் போனால் அவர்களுக்கு என்ன லாபம்? எனக்குத்தான் லாபம். ஆனாலும், நான் அந்த மாதிரி எதையும் எதிர்பார்க்கலை. நான் கட்சியில சேரணும்குற தேவையும் தி.மு.க-வுக்கு இல்லை.”

“அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள்விழாவுக்கு அழைத்தால், செல்வீர்களா?”

“எடப்பாடி பழனிசாமி கூடவும் அன்றைக்குப் பேசிட்டுத்தான் வந்தேன். கண்டிப்பா அவங்க கூப்பிட்டாலும் நான் போவேன். எனக்கென்ன வந்தது... நான் வெறும் ஆர்டிஸ்ட்டுதானே?!”